உலக மூத்த குடிமக்கள் தினம்
🦉1990-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அறிவிப்பின்படி, ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி ‘உலக மூத்த குடிமக்கள் தினம்’ கொண்டாடப்படுகிறது. மனித சமுதாயத்தில் முதியோர்களின் பங்களிப்பை எடுத்துரைத்து அவர்களைக் கௌரவிக்க வேண்டும் . உடல்நல பிரச்சனைகளாலும் வீட்டில் உள்ளவர்களாலும் அநாதையாக கிடத்தப்படும் முதியவர்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே இந்த தினத்தின் மிக முக்கியமான நோக்கமாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இது தேசிய மூத்த குடிமக்கள் தினமாகவே கொண்டாடப்படுகிறது என்பது கூடுதல் தகவல் .
கடவுளுக்கு நிகராக முதியோரைக் கருதிய காலம் ஒன்றிருந்தது. இப்போது காலம் மிகவும் மாறிப் போய்விட்டது. முதியோரை மதிக்கும் பண்பாடென்பது பெரிதும் குறைந்துவிட்டது. கடவுளாகக் கருதப்பட்ட முதியவர்கள் இன்று சுமையாகவோ, தண்டனையாகவோ கருதப்படுகிறார்கள். இப்பிரச்சினையை நாம் ஆழ்ந்து நோக்கினால் முதியோரின் நிலைமை என்பது இன்று மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது, அவர்கள் வேண்டப்படாதவர்களாகவும், ஆறாவது விரலாகவுமே இருக்கிறார்கள். தனிமையும் புறக்கணிப்பும் அவர்களைப் பெருமளவில் பாதிக்கிறது. தாம் இருப்பதே தேவையற்ற ஒன்று என்று கருதத் தொடங்குகிறார்கள். ஆனால் ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் மூத்த குடிமக்களின் பங்களிப்பு முக்கியமானது. அறிவாற்றலும், செயல் திறனும் கொண்ட இளைய சமுதாயத்தை, தங்களின் அனுபவம் மற்றும் வழிகாட்டுதலால் நெறிப்படுத்தி, இலக்கை நோக்கி பயணிக்க வைக்கும் ஆற்றல் கொண்டவர்கள் மூத்த குடிமக்கள். அவர்களின் அனுபவப் பாடம்தான் நமது வாழ்வின் அடிப்படை நுணுக்கத்தை எளிதாக புரிய வைக்கிறது.
சமீபகாலமாக கிராமங்களிலும் முதியோர் மதிக்கப்படுவதில்லை. நகர்புறங்களில் பல குடும்பங்களில் உள்ள முதியவர்களுக்கு தக்க மரியாதை கிடைப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் வறுமை. வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களில் நிதி வசதி குறைவால் பாதிக்கப்படுபவர்கள் முதியவர்களே. நிதி வசதி குறைவாக இருப்பதால் தன் குடும்பத்திற்கான தேவைகளை பூர்த்தி செய்யவே முடியாத நிலையில், முதியவர்களை கவனிப்பதும் அவர்களுக்கு தக்க மரியாதை கொடுப்பதும் அவசியம் இல்லை என்ற ஒரு நிலை ஏற்படுகிறது. ஓய்வூதியம் பெறும் முதியவர்கள் மற்றும் முதியோர் உதவித்தொகை பெறும் முதியவர்களை, இளைய சமுதாயம் கூட்டுக் குடும்பத்தில் வைத்துக் கொண்டு, பணத்திற்காக முதியவர்களை ஓரளவு மதித்து வருகிறார்கள்.
இதற்கு அடுத்ததாக, குடிப்பழக்கம் அதிகம் உள்ள இளைய சமுதாயத்தினரால் முதியவர்கள் மிகவும் புறக்கணிப்படுகிறார்கள். இளைஞர்கள் சந்திக்கும் குடும்ப பாரத்தை முதியவர்கள் அவமதிப்பை ஒரு வடிகாலாக எடுத்துக்கொள்கிறார்கள். கரோனா வேகமாப் பரவும் காலகட்டத்தில் இளைஞர்களுக்கு வேலை இல்லை. அதனால் வருமானம் ஏதும் கிடையாது. குடும்பத்தை நடத்துவதே பெரிதும் சிரமமாக இருக்கும் இக்கால கட்டத்தில் பெரியவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிவதில்லை. இதை முதியவர்கள் தங்களை இளைஞர்கள் மதிப்பதில்லை என்று எண்ணத் தொடங்குகிறார்கள்.இதற்கு மாறாக வசதி படைத்தவர்கள் வீட்டிலும் எல்லோரும் முதியவர்களை நன்றாக மதிக்கப்படுகிறார்கள் என்று எண்ணிவிட முடியாது. காசோலையில் பொய் கையெழுத்து இட்டு பணத்தை அபகரிப்பதும், பெரியவரைத் துன்புறுத்தி தன் பெயருக்கு சொத்தை எழுதித் தரும்படி கட்டாயப்படுத்துவதும் அநேக குடும்பங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
மூத்த குடிமக்களுக்கு தனிமையால் மனச்சோர்வு, செவித்திறன் குறைபாடுகள், நினைவாற்றல் சிக்கல்கள் மற்றும் முதுமை காரணமாக தடுமாற்றமும் இயலாமையும் வந்து விடுகிறது. அவர்களுக்கு சிறந்த சிகிச்சை வசதிகள், சமூக ஆதரவு, மற்றும் மக்களுக்குள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மிக அவசியமாகின்றன. ஆனால் முதியோர்களின் உடல் நலத்திற்கு செலவு செய்வது, தேவையற்றது என்று இளைஞர் சமுதாயம் எண்ணுகிறது. இதை ஓரளவிற்கு சரி செய்ய நோயுற்று தொடர் சிகிச்சை பெறும் முதியவர்களுக்கு மாதத்திற்கு ஒருமுறை மருந்தை இலவசமாகக் அரசாங்கம் கொடுக்கலாம் மற்றும் முதியவர்களுக்குத் தேவையான கண் கண்ணாடி, காது கேட்கும் கருவி, பல் செட் மற்றும் கைத்தடி போன்ற உபகரணங்களை இலவசமாக கொடுக்க அரசு முன் வரலாம். மேலும் நாள்பட்ட நோய்களான உதறுவாதம், மறதி நோய், புற்று நோய் மற்றும் பக்கவாதம் போன்றவற்றைக் கவனித்து சிகிச்சையளிக்க தாலுக்கா அளவில் தொடர் சிகிச்சை மையங்களை தொடங்கலாம். இது ஓரளவிற்கு இளைஞர்களின் பாரத்தை சற்றே குறைக்க உதவும்.
மொத்தத்தில் ,மூத்த குடிமக்கள் நம்முடைய சமூகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர், அவர்களின் நலனுக்கு முழுமையாகப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதே முக்கியம்.தொட்டில் குழந்தைகளுக்காக திட்டம் கொண்டு வந்த பெருமை தமிழகத்திற்கு உண்டு. கட்டில் குழந்தைகளாக மாறும் முதியவர்களுக்கும் சிறப்பான திட்டங்களுக்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டும்! பெரியவர்களுடன் வளரும் குழந்தைக்கும், குடும்பத்துக்கும் சில சிறப்பு குணாதிசயங்களும், அணுகுமுறையும் இருக்கும். இந்த வாழ்வியல் முறை நம்மை அனைத்து கட்டங்களிலும் மகிழ்ச்சியாக இருக்க வழிவகுக்கும். வளரும் தலைமுறைக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல, நம்மை வளர்த்த தலைமுறைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
முதியவர்களைப் பாரமாக நினைக்காமல், நமக்குக் கிடைத்த பாக்கியமாக நினைத்து செயல்படுவோம்