சர்வதேச மீனவர் நாள்!
நவ.21-ம் தேதியான இன்று உலக மீன்வள தினமாகும். இதையே மீனவர் தினமாகவும் கடைபிடிக்கின்றனர். ஊட்டச்சத்து மிக்க மீன்களை கிடைக்கச் செய்வதிலும், அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதிலும் மீன்பிடி தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது.ஆனால், இத்தொழிலில் பாதுகாப்பின்மை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. உயிரைப் பணயம் வைத்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வோர், புயல், சூறைக்காற்று, கடல்சீற்றம் போன்றவற்றால் பாதி நாட்களுக்கு மேல் தொழிலுக்கு செல்லமுடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.கடலில் ஏற்படும் இயற்கைச் சீற்றங்களால் ஆண்டுக்கு 35-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் உயிரிழக்கின்றனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைகின்றனர். இத்தனைக்கும், எதிர்காலத்தில் மனித குலத்துக்குத் தேவையான உணவில், 90 சதவிகிதம் கடலிலிருந்தே பெறப்போகிறோம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அத்தகைய கடல் உணவுகளை, மழை, வெயில், புயல் எனப் பாராது கரைக்குக் கொண்டுவந்து சேர்ப்பவர்கள், மீனவர்கள். அந்த மீனவர்களுக்கான தினமாக இன்றைய தினத்தை மீனவர்கள் கடைபிடித்துவருகின்றனர். ஆனால், ஐக்கிய நாடுகள் சபையோ, இந்த தினத்தை 'மீனவர் தினமாக' அங்கிகாரம் செய்யாமல், கடந்த 27 ஆண்டுகளாக காலம் கடத்திவருகிறது.
மீனவப் பெருங்குடி மக்கள் தங்களின் தொழில் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, 40 நாட்டு மீனவப் பிரதிநிதிகள் 21.11.1997 டில்லியில் கூடி, தங்களுக்கு எதிராக அரசுகள் கொண்டு வரும் திட்டங்கள் மற்றும் கடல் மாசுபடுவதால், மீன் வளம் குன்றி, வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகும் என்று, உலக அளவில் உரிமைக்குரல் கொடுத்துப் போராடித் தீர்வு கிடைத்த நாள் நவம்பர் 21, இந்த நாளைத் தான் உலக மீனவர்கள் தினமாக கொண்டடி வருகிறார்கள். .
இந்தியக் கண்டம், 6086 கிலோ மீட்டர் கடற்கரையைக் கொண்டுள்ளது. இதில், தமிழகம் மட்டும் 1000 கிலோமீட்டர் கடற்கரையைக் கொண்டுள்ளது. கடலும் கடல் சார்ந்த வளங்களும், அங்குள்ள மக்களின் பண்பாடு, கலாச்சாரமே நெய்தல் நில நாகரிகம் ஆனது.கரையில் நிம்மதியைத் தொலைத்துவிட்டு, சொந்தங்களைக் கரை சேர்க்கக் கொந்தளிக்கும் கடலில் இரத்தமும் கண்ணீரும் சிந்திப் போராடுவதே கடலோடிகளின் அன்றாட வாழ்க்கை. கடலுக்குள் சென்றால், திரும்பி வர உயிருக்கும் என்பது உறுதி இல்லை. விவசாயிகளைப் போலவே, மீனவர்களும் வாழ்நாள் முழுமையும் கடலினில் களிக்கிறார்கள்.
தற்போது, வேதனையான தகவல் என்னவென்றால், இன்றைக்கு தங்கள் அருகில் உள்ள நீர் வளங்களில் மீன் வளம் குறைந்து வருவதால், மீனவர்கள் தங்கள் பாரம்பரிய நிலங்களில் இருந்து வெகு தொலைவில் மீன்பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. தொழிற்சாலை கப்பல்கள், அடிமட்ட இழுவை இழுத்தல் மற்றும் நீடிக்க முடியாத மீன்பிடி முறைகள் மூலம் மீன் வளம் குறைந்து விட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வில், உலகின் 3-ல் 2 பங்கு மீன்வளம் அதிகமாக அல்லது முழுமையாக அறுவடை செய்யப்பட்டு விட்டதாகவும், 3-ல் ஒரு பங்குக்கு மேற்பட்டவை மீன் வளத்தின் அத்தியாவசிய வாழ்விடங்கள், மாசுபாடு மற்றும் உலகளாவிய இழப்பு போன்ற காரணங்களால் வீழ்ச்சியடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கிறது.இந்த பிரச்சினையை உலக நாடுகள் இணைந்து தீர்க்காத நிலையில், நெருக்கடி மேலும் ஆழமடையும்.
மேலும் மீனவர் தினம் கொண்டாடினாலும், அவர்களது கோரிக்கைகள் கடலில் கரைத்த பெருங்காயம் போல் காணாமல் போகின்றன. அவர்களது வாழ்வாதாரப் பிரச்னைகள் குறித்தும், ஆழ்கடல் மீன்பிடிப்பில் அவர்கள் சந்திக்கும் அபாயங்கள் குறித்தெல்லாம் செவிகொடுத்து யாரும் கேட்பதாக இல்லை. அனைத்து கடலோரக் கிராமங்களிலும் குடிநீர் பிரச்னை தலைதூக்கியிருக்கிறது. கடல்நீர் நிலத்தடியில் உட்புகுவதால் ஆழ்குழாய் கிணறுகள் மூலமும் தண்ணீரை எடுத்து பயன்படுத்த முடியவில்லை. இதனால் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மீனவர்கள் அரும்பாடுபட்டு பிடித்துவரும் மீன்களுக்கு உரிய சந்தை விலை கிடைப்பதில்லை. அந்த மீன்களை வாங்கி விற்கும் வியாபாரிகளும், இடைத்தரகர்களும் லாபம் கொழிக்கின்றனர். இதைத் தடுக்கும் வகையில் மீன்பிடிப்பு அதிகமுள்ள கிராமங்களில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கும் திட்டம் குறித்து பல ஆண்டுகளாக பேசப்படுகிறது.
பிழைப்புக்காக வெளிநாடுகளுக்கும், கேரளம், கர்நாடகம், மகராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் செல்லும் மீனவர்களுக்கு நேரும் பிரச்னைகளை தீர்க்க அந்தந்த மாநில அரசுகள் முன்வர வேண்டும். வெளிநாடுகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருக்கும் இந்தியர்களின் பிரச்னைகளை கவனிக்கும் வகையிலும், இங்குள்ள மீனவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்தவும் மத்தியில் தனியாக அமைச்சரை நியமிக்க வேண்டும். இயற்கை சீற்றங்களின்போது கடலில் காணாமல்போகும் மீனவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்த ஹெலிகாப்டர், அதிவிரைவு படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் கடலில் வீசப்பட்ட உப்புகள் போலாகி விட்டத்தை நினைவூட்டும் நாளிது என்றும் சொல்லலாம்.
ஆனாலும் கடலிலே வீழ்ந்தாலும், மீன்பிடித்து சோர்ந்தாலும், களைப்பிலே அயர்ந்தாலும், கண்ணீரிலே வாழ்ந்தாலும் இழந்தது போக மிச்சமிருப்பவை வாழ்வு பற்றிய நம்பிக்கையும்,எதிர்கால சிந்தனையும் கொண்ட மீனவர் வாழ்வு செழிக்க ஆந்தை ரிப்போர்ட்டர் சார்பில் வேண்டுகிறோம்
நிலவளம் ரெங்கராஜன்