For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

உலக தொலைக்காட்சி நாள்!

05:23 AM Nov 21, 2024 IST | admin
உலக தொலைக்காட்சி நாள்
Advertisement

னித வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட சின்னத்திரை, அலைபேசி உள்ளிட்ட ஊடகங்கள், எதிர்மறை விளைவுகளை பல இடங்களில் ஏற்படுத்தினாலும், உலகில் நடக்கும் எந்தவொரு இடத்தில் நடக்கும் சம்பவங்கள், அறிவாற்றல் வளர்க்கும் பல்வேறு விஷயங்களை வீடுகளின் வரவேற்பறைக்குள் கொண்டு வரும், மகத்தான தொழில்நுட்ப புரட்சியை செய்து கொண்டிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.இதை உணர்த்தும் வகையில் தான் ஆண்டுதோறும், நவ. 21ம் தேதியை, 'உலக தொலைக்காட்சி தினம்' என அறிவித்திருக்கிறது, ஐ.நா., சபை

Advertisement

“கிறிஸ்டோபர் கொலம்பஸ் 12.10.1492-ல் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். இச்செய்தியை ஸ்பெயின் நாட்டு அரசர் 5 மாதங்கள் கழித்து அறிந்தார். பிரிட்டிஷ் படைத்தலைவர் நெல்சன் 21.10.1805-ல் மரணமடைந்த செய்தி, இங்கிலாந்து நாட்டுக்கு 15 நாட்களுக்குப் பின்னரே தெரிய வந்தது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரஹாம் லிங்கன் 14.4.1865-ல் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி 12 நாட்களுக்குப் பின்னரே ஐரோப்பா கண்டத்துக்கு தெரிந்தது” என்று தன்னுடைய 'தகவல் தொடர்பியல்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார் வெ.கிருட்டிணசாமி. தகவல் தொடர்பு கருவிகளாலேயே இது சாத்தியமானது. அதேநேரத்தில் தகவலை மக்களுக்கு விரைந்து சேர்ப்பதற்கான அவசியமும் அக்காலத்தில் ஏற்பட்டது. செய்தியைத் தெரிவித்தல், அறிவித்தல், அனுப்புதல், செய்தியில் பங்களித்தல், கருத்துப் பரிமாறுதல், அடையாளங்கள், குறியீடுகள், பேச்சு, எழுத்து, உடல்மொழி போன்றவை தகவல் தொடர்பு எனப்படும் ஊடகவழியே தெரிவிப்பதே தொலைக்காட்சியாகும்.

Advertisement

இப்போதைய சூழலில் நமது ஒட்டுமொத்த வாழ்விலும் நிரம்பி வழிவது தொலைக்காட்சிகளின் பிம்பங்கள்தான். செய்திகள், பொழுதுபோக்கு, திரைப்படங்கள், கல்வி, இசை, விளையாட்டு என எல்லாமும் தொலைக்காட்சிகளின் வழியேதான் நம்மை அடைகின்றன. 90 களின் இறுதியில்தான் தமிழகத்தின் கிராமங்களையெல்லாம் தொலைக்காட்சிகள் தொட ஆரம்பித்தன. அந்த காலகட்டத்தில் தூர்தர்சன் அலைவரிசை மட்டும்தான், அதற்கும் ஆண்ட்டனாவை அங்குமிங்குமாக திருப்பியபடியே இருக்க வேண்டும். ஒளியும் ஒலியும், சக்திமான், மகாபாரதம், ராமாயணம் என தூர்தர்சனின் ஆஸ்தான தொடர்களும், சச்சின் டெண்டுல்கர், அசார், ஜடேஜா, கங்குலி, டிராவிட் போன்ற வீரர்கள் ஜாலம் செய்யும் கிரிக்கெட்டும் இன்னமும் அந்த காலத்தை கடந்தவர்களால் மறக்கவே முடியாது.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பது போல், ஒரு காலத்தில் அமிர்தமாய் தித்தித்த தொலைக்காட்சி, இன்று, திகட்டும் தொல்லைக் காட்சியாக மாறிப் போயிருக்கிறது.விரல் விட்டு எண்ணக்கூடிய சேனல்களில், விரும்பிய நிகழ்ச்சிகளை தேர்வு செய்து பார்த்து, சின்னத்திரைக்குள் நேரத்தை சிறை வைக்காத தலைமுறை ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், இன்று, குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை, நாள் முழுக்க சின்னத்திரைக்குள் சிறைபட்டு கிடக்கும் அசாதாரண சூழ்நிலை உருவாகியிருக்கிறது.அறிவுசார்ந்த செய்திகள், மனதை மாசுபடுத்தாத பொழுதுபோக்கு மட்டுமே நோக்கம் என்ற நிலைமாறி, ஒவ்வொரு பொழுதையும் தங்களுக்கான வணிக முதலீடாக மாற்றிக்கொண்டுவிட்டன சின்னத்திரை சேனல்கள். புற்றீசல் போல் பெருகிவிட்ட சேனல்கள், தங்களின் சந்தை மதிப்பை கூட்ட, ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் வணிகமயமாக்கிவிட்டன. மெகா 'சீரியல்' என்கிற மிகப்பெரிய வணிக சந்தைக்குள், கை விலங்கிட்டது போல் சிறைபட்டுக் கிடக்கின்றனர் குடும்ப உறுப்பினர்கள்.

முன்னொரு காலகட்டத்தில் ஒவ்வொரு ஊரின் மையத்திலும் பொது தொலைக்காட்சி பெட்டியும், அதற்கு என பிரத்யேகமான அறையும், அதனை இயக்குவதற்கு ஒரு ஆபரேட்டரும் இருப்பார்கள். அவர்கள்தான் மாலைப்பொழுதுகளில் தூர்தர்சன் மட்டுமே ஒளிபரப்பாகும் இந்த தொலைக்காட்சியை ஆன் செய்வார்கள், செய்திகள், பொழுதுபோக்கு, விளையாட்டு என அனைத்திற்குமே அந்த தொலைக்காட்சிதான். பொது தொலைக்காட்சி பெட்டி அறையின் முன்னே மாலைப்பொழுதுகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். அப்படித்தான் தமிழகத்தில், 90 களில் தொலைக்காட்சி அறிமுகமானது.கதவுகள் வைத்த கறுப்பு வெள்ளை தொலைக்காட்சி, பெட்டி போன்ற தொலைக்காட்சி போன்ற தொலைக்காட்சிகள்தான் ஆரம்பம். சாலிடர், பிபிஎல் போன்ற நிறுவனங்கள்தான் அப்போது பிரபலமான நிறுவனங்கள். 2000 ஆண்டிற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் ஆக்கிரமிக்க தொடங்கின. அப்போது தனியார் தொலைக்காட்சிகளும், கேபிள்களும் கிராமங்களை எட்ட தொடங்கி விட்டன. 2006 ஆம் ஆண்டு திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கு இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கியது. அது அனைத்து வீடுகளுக்கும் தொலைக்காட்சி பெட்டியை கொண்டு சேர்த்தது. பின்னர் பிளாஸ்மா டிவி, எல்சிடி டிவி, எல்இடி என பலவகை தொலைக்காட்சிகள் வந்துவிட்டன. ஆண்டனா, கேபிள் தொடங்கி தற்போது டிடிஎச்கள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தொலைக்காட்சி சேவைகளை வழங்குகிறது.

தூர்தர்சன் பொதிகை மட்டுமே என இருந்த அலைவரிசை, தற்போது நூற்றுக்கணக்காக மாறிவிட்டன. தமிழிலும் உலகத்தரத்தில் 24*7 செய்தி தொலைக்காட்சிகள், இசை, பொழுதுபோக்கு, திரைப்படங்கள், காமெடி, விளையாட்டு, குழந்தைகள் உள்ளிட்ட பல வகை தொலைக்காட்சிகள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. டிஜிட்டல் மீடியாக்கள் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்திலும்கூட தொலைக்காட்சிகளுக்கான மவுசு இன்னும் குறையவே இல்லை. மக்களின் நம்பிக்கைக்குரிய தகவல் சாதனமாக தொலைக்காட்சிகள் இருப்பதே அதற்கான காரணம். இந்தியாவில் உள்ள சுமார் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களில் தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளன. தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் 90 முதல் 95 சதவீத குடும்பங்களில் தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளன.

ஆனால் முன்னரே சொன்னது போல் இந்த தொலைக்காட்சிகள் மனிதர்களை ஆதிக்கம் செய்யவும், அவர்களில் சிலரை அடிமையாக்கவும் செய்திருக்கின்றன. எனவே தொலைக்காட்சியை அளவோடு பயன்படுத்துவதும், பார்க்கும் காட்சிகளை தரமாக தேர்ந்தெடுப்பதும் பார்வையாளரின் கடமை. முக்கியமாக குழந்தைப் பருவத்தினர் டிவி பார்ப்பதாலும், தரக் குறைவான நிகழ்ச்சிகளாலும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். படிப்பில் நாட்டம் குறைவது, மறதி, தவறான காட்சிகளால் திசை மாறும் வாய்ப்பு, மன அழுத்தம், தூக்கம் கெடுவது ஆகியவற்றுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கும் குழந்தைகள் ஆளாகிறார்கள். வளர்ந்தவர்களும் இதற்கு விதிவில்லக்கல்ல. மெகாத்தொடர்களால் எத்தனையோ குடும்பங்கள் அமைதி இழந்திருக்கின்றன, காட்டுக்கத்தலாய் விவாதிக்கும் செய்தி சேனல்களால் ரத்த அழுத்தம் எகிறுவோர் உண்டு. எனினும், ஸ்மார்ட் போன் காலத்திலும் தொலைக்காட்சிகள் அதன் மகத்துவத்தை இழக்கவில்லை.

விடுபடுவது எப்படி?

தொலைக்காட்சி பார்ப்பதற்கு என்று அன்றாடம் சிறு நேரத்தை ஒதுக்கி வைத்து, அந்த நேரத்தில் மட்டும் நிகழ்ச்சிகளை பார்ப்பது நல்லது. சாப்பிடும்போது தொலைக்காட்சிகளை தவிர்ப்பது அல்லது அணைத்துவிடுவது உத்தமம்.

குறிப்பாக குழந்தைகளின் சின்னத்திரை தரிசனத்துக்கான நேரத்தை கண்காணித்து வழிப்படுத்த வேண்டும்.

வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட தொலைக்காட்சி பெட்டிகளை தவிர்ப்பது நலம்.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து டிவி பார்ப்பதால், உடல்வாகில் மிகை பருமன் ஆளாவற்கும் வாய்ப்பகும்.

உடல் உழைப்புக்கான வாய்ப்புகளையும் தொலைக்காட்சிகள் பறித்துவிடக் கூடியவை.

தரமான நிகழ்ச்சிகளை மட்டுமே பார்ப்பது, தொலைக்காட்சிக்கு ஒதுக்கும் நேரத்தை இனிமையாக்கும்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement