உலக மக்கள் தொகை நாள்
1987 ஜூலை 11, உலக மக்கள் தொகை 500 கோடியைத் தாண்டியது. இதைக் கருத்தில் கொண்டு 1989-ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தில், ஆளும் குழுவால் உலக மக்கள்தொகை தினமாக, ஜுலை 11-ம் தேதியை அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை 1990-ம் ஆண்டு, டிசம்பர் 45 /216 தீர்மானத்தின் மூலம் ஜூலை 11-ம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது. மக்கள் தொகையைக் கணக்கெடுப்பதின் மூலம் ஒவ்வொரு நாட்டின் மக்கள் எண்ணிக்கை தெரியவரும். அதன் மூலம் மக்களின் தேவைகளின் அளவை அறியலாம், அவற்றை நிறைவேற்ற வழிகளை, வாய்ப்புகளைக் கண்டறியலாம். எதிர்காலத்தில் அதிகரிக்கும் மக்கள் தொகையைக் கணிக்கலாம். அதற்காகத் திட்டமிடலாம் எனப் பல வகைகளிலும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நமக்கு உதவும். அதனால்தான் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பழக்கம் தொடங்கியது.மக்கள் தொகை அதிகரிப்பினால், மக்களின் அடிப்படை வசதிகளை உறுதிசெய்வதற்கு பல நாடுகள் திண்டாடி வருகின்றன. எனவே, மக்கள் தொகையைக் கட்டுக்குள் வைத்திருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்தத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.நம் நாட்டின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1872-ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு, 1881-ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021-ம் ஆண்டு நடைபெற வேண்டிய நிலையில், கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உலக மக்கள் தொகை பல்வேறு சவால்களை, முரண்பாடுகளை, வளங்களில் சமத்துவமின்மைகளை எதிர்கொண்டுள்ளது. 84 கோடி பேர் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களாக இருக்கும் இவ்வுலகில், 168 கோடி பேர் அதிக எடை கொண்டவர்களாகவும், 75 கோடியினர் உடல் பருமன் கொண்டவர்களாகவும் உள்ளனர். ஜனவரி 2020-ல், ஒரே நாளில் 23,474 பேர் உலகெங்கும் பட்டினியால் மடிந்துள்ள நிலையில், அமெரிக்காவில் உடல் பருமன் சம்பந்தப்பட்ட நோய்களுக்காக 430 கோடி டாலர்கள், 2020 ஜனவரியில், ஒரு நாளில் செலவிடப்பட்டுள்ளது.
கி.பி 1000 இல், உலக மக்கள் தொகை 400 மில்லியன் மட்டுமே. இது முதலில் 1804 இல் 1 பில்லியனையும் 1960 இல் 3 பில்லியனையும் எட்டியது. 2000 ஆம் ஆண்டளவில் மக்கள் தொகை 6 பில்லியனாக மாறியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் 4.2 பேர் பிறக்கிறார்கள், 1.8 பேர் இறக்கிறார்கள். 2050 ஆம் ஆண்டில், உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 70% பேர் நகரங்களில் வசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் ஆயுட்காலம் உலகளவில், 2010-2015 இல் 71 ஆண்டுகளில் இருந்து 2045-2050 இல் 77 ஆகவும், இறுதியில் 2095-2100 இல் 83 ஆகவும் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள்தொகை ஆண்டுக்கு 1.10 சதவீதம் அதிகரிக்கிறது. ஆண்டுக்கு 83 மில்லியன் மக்கள் அதிகரித்து வருகின்றனர். உலக மக்கள் தொகை 2030ல் 8.6 பில்லியனாகவும், 2050ல் 9.8 பில்லியனாகவும், 2100ல் 11.2 பில்லியனாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ்ப் பேரரசுகள் ஆண்ட காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை அனைத்து நவீனங்களும் பயன்பாட்டில் இருந்துள்ளன. ஆனால், அவை இந்திய வரலாறாக பதியப்படவில்லை. எனவே, இந்திய வரலாற்றைக் கணக்கில் கொண்டால் மௌரியப் பேரரசு காலத்தில் சுமார் 2,370 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு செய்யப்பட்டதாக சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் சொல்கிறது. வரி விதிக்கவே இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாம். கூடவே மக்களின் பொருளாதார நிலை, வேளாண் தொழில் ஆகியன குறித்தும் கணக்கெடுப்பு செய்யப்பட்டதாம்.
பழைய வரலாறு:
உலகின் பெரும் பேரரசுகளாக இருந்த ரோமப் பேரரசு, சோழப் பேரரசுகள் மட்டுமல்ல பழங்குடி பேரரசுகள் இருந்த காலத்திலும் வருவாயை இலக்காகக் கொண்டுதான் கணக்கெடுப்புகள் நடந்தன. இப்படி, இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் மக்களிடம் எப்படியெல்லாம் வரி வசூலிக்கலாம், யாரும் ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக அந்தக் கால அரசுகள் தலைகளை எண்ணின. இந்தியாவில், மொகலாயர் காலத்தில்தான் மக்கள் தொகை பற்றிய விவரங்கள் முதன்முதலாக தொகுத்து வெளியிடப்பட்டன. அக்பருடைய அரசவையில் இடம் பெற்றிருந்த அபுல்பாசல் என்ற அறிஞர் எழுதிய, `அயனி அக்பரி’ என்ற நூலில், அன்றைய காலகட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருந்ததைக் காண முடிகிறது.
20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 20 கோடியாக இருந்த நாட்டின் மக்கள்தொகை நூறாண்டுகளில் 100 கோடியாகவும், 165 கோடியாக இருந்த உலக மக்கள்தொகை 600 கோடியாகவும் அதிகரித்தது. 2011-ல் உலக மக்கள்தொகை 700 கோடியாக அதிகரித்து, தற்போது 800 கோடியை நெருங்கி வருகிறது. மக்கள்தொகை அதிகரித்து வந்தாலும் மக்கள் பெருக்கம் (பிறப்பு வீதம்) கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உலக மக்கள்தொகை பெருக்கம் 2016-ல் 1.14 சதவீதம், 2017-ல் 1.12 சதவீதம், 2018-ல் 1.09 சதவீதமாக இருந்தது. இது 2023-ம் ஆண்டில் 1 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, ஆங்கிலேயர் காலத்தில் (1687) அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தின் ஆளுநராக இருந்த எலிகு ஏல் என்பவர் இங்கிலாந்து மன்னரின் ஆணைப்படி, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் வசித்தவர்கள் தொடர்பான முழு விவரங்களைச் சேகரித்து தந்தார். பின்னர், 1853-ம் ஆண்டு வடமேற்குப் பகுதியில் சிறிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, கிறிஸ்டோப் குலிமிட்டா என்பவர் தலைமையில், 1871-ல் மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. அப்போதுதான் மக்களின் சமூக வாழ்க்கை மற்றும் நாட்டில் நிகழ்ந்த பஞ்சங்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டன.
இந்தியாவில், மக்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் பணி முதன்முதலாக 1872-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ஆண்டில் இருந்து, பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் கணக்கெடுப்பு பணியின்போது, கல்வி, எழுத்தறிவு, பாலினம், பொருளாதார நிலை, பிறப்பு, இறப்பு விகிதம், இடம் பெயர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள், பட்டியல் சாதிகள் & பட்டியல் பழங்குடியினர், பெற்றோர் விழுக்காடு, வீடு முதலான உறைவிடங்கள், மொழி, மதம் போன்ற தகவல்கள் முழுமையாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில், பங்கேற்ற ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடி மையத்தினர் ஆகியோருக்கு வழங்கப்படுவதற்காக, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகள் உட்பட 18 மொழிகளில் பயிற்சி குறிப்பேடுகள் தயாரிக்கப்பட்டன. அதனடிப்படையில், 16 மொழிகளில் மக்கள் தொகை குறித்த விவரங்கள் திரட்டப்பட்டன. இந்த ஆண்டில்தான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியின்போது, இந்தியா - வங்கதேசம் ஒன்றாக இணைந்து, எல்லையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டன.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்ட பணியான வீடுகளைப் பட்டியல் இடுதலில், கட்டட எண் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு வீட்டு எண், அறைகளின் எண்ணிக்கை, குடிநீர் வசதி, கழிவறை வசதி, வாகனம் பற்றிய விவரங்கள் உட்பட 35 கேள்விகள் கேட்கப்பட்டன. கடைசியாக 2011-ம் ஆண்டு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுபடி, இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121,19,03,422 பேர் எனக் கணக்கிடப்பட்டது. இதில், ஆண்களின் எண்ணிக்கை 62,37,24,248 எனவும், பெண்களின் எண்ணிக்கை 58,64,69,174 எனவும் கணக்கிடப்பட்டது.
இதனிடையே சமீபகாலமாக் உலகம் முழுவதும் சிறு வயதில் கர்ப்பமாவது அதிகரித்து வருகிறது. அதாவது கிட்டத்தட்ட 1.5 கோடி கர்ப்பவதிகளுக்கு 15 முதல் 19 வயதுக்குள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 40 லட்சம் பேருக்கு பல்வேறு காரணங்களால் பிரசவத்தின்போது பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.இதுபோன்ற பிரச்சினைகளை சமாளிக்க ஊரக மற்றும் நகர்ப்புறங்களைச் சேர்ந்த வளர் இளம் பருவத்தினருக்கு உரிய விழிப்புணர்வையும், கல்வி அறிவையும் வழங்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்துகிறது. செக்ஸ் குறித்த விழிப்புணர்வு, பாலியல் நோய்களைத் தவிர்க்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வையும் ஐ.நா. சபை வலியுறுத்துகிறது. மேலும் 2027-ம் ஆண்டில் சீனாவின் எண்ணிக்கையை இந்தியா கடந்து விடும் என்று கருதப்படுகிறது. இந்தியாவுக்கு இது மிகப்பெரிய பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும் என்ற கவலையும் எழுந்துள்ளது. மக்கள் தொகைக் கொள்கையின் தந்தையாகப் போற்றப்படும் தாமஸ் ராபர்ட் மால்தஸ் `மக்கள் தொகை பெருகினால் எதிர்காலம் ஆபத்தானதாக மாறிவிடும்’ என்று உலகை எச்சரித்தவர். அதை உதாசீனப்படுத்தாமல் அரசும் மக்களும் நடைமுறைப்படுத்த வேண்டும்.அளவான குடும்பமே வளமான வாழ்வு என்பார்கள்.. அது வீட்டுக்கு மட்டுல்ல.. பூமிக்கும் பொருந்தும்!
நிலவளம் ரெங்கராஜன்