உலக கருணை நாள்!
உலக கருணை தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 13-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இது 1998-ம் ஆண்டு கருணை இயக்கம் சார்பில் தொடங்கப்பட்டது. அதன்பின் பல நாடுகள் கருணை தினத்தை கடைபிடிக்கின்றன. இந்த அமைப்பு 1997-ம் ஆண்டு டோக்கியோவில் அமைக்கப்பட்டது. இந்த இயக்கமானது மதம், அரசியல் என அனைத்துக்கும் அப்பாற்பட்டு விளங்குகிறது. கருணை என்பது அனைவரிடமும் அன்பு செலுத்துவது, எவ்வித பேதமுமின்றி சமரசமாக இருப்பதே கருணையின் வெளிப்பாடு. ஒவ்வொருவரும் சக மனிதனை சமமாகவும் கருணையோடும் அணுகவேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் நோக்கம். நடப்பு உலகில் மனிதர்கள் மத்தியில் தட்டுப்பாடாகி வரும், அவசியமான ஒன்றை வலியுறுத்துகிறது உலக கருணை தினம்.
கருணை உள்ள நெஞ்சினிலே கடவுள் வாழ்கின்றார்” என்ற அர்த்தம் தொனிக்கும் பாடல் வரிகளை நாம் கேட்டிருக்கிறோம். கருணை என்பது என்ன?. பிறரின் துன்ப நிலை கண்டு வருந்தி, அதனை அகற்ற எண்ணி, அதற்கான முயற்சியில் இறங்குபவர் கருணையுள்ளவராகக் கருதப்படுகிறார்.இது இரக்கம் மற்றும் அன்பின் வழிநிலைதான். கருணையினை இரக்கத்துக்கும் மேலாகக் கருதலாம். அதாவது, இரக்கப்படுதல் என்பதில் செயல் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் கருணையில் செயலிருக்கவேண்டும். அதுவும் அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும்.
சாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம், நாடு என எத்தனையோ வேறுபாடுகள் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் காலம் இது. முன்னெப்போதும் இல்லாத வகையில் சக மனிதரிடத்தில் வேறுபாடுகளை தேடித்தேடி அடையாளம் கண்டு வருகிறார்கள். அறிவியலில், நாகரீகத்தில், வாழ்க்கை தரத்தில் முந்தைய தலைமுறையினரை விட பல மடங்கு மேம்பட்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உள்ளத்தில் ஈரமின்றி, சக உயிர்கள் மீது வலிய வெறுப்பை வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.
இந்தியா போன்ற பன்மைத்துவம் வாய்ந்த தேசங்களில், அன்பும், சகிப்புத்தன்மையும் மிகவும் அவசியம். பலவகையிலும் அடிப்படையில் வேறுபட்டிருக்கும் மக்கள் மத்தியில் மேலும் வெறுப்பை வளர்த்து ஆதாயம் அடைவது இங்கே அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமன்றி, உலகம் நெடுகவும் வெறுப்பு மண்டிக் கிடப்பதோடு, அன்பு, கருணை உள்ளிட்டவற்றை பூதக் கண்ணாடியில் தேட வேண்டியதாகி வருகிற்து.
இந்த சூழலில் இன்று கொண்டாடப்படும் உலக கருணை தினம் முக்கியத்துவம் பெறுகிறது. அன்பும் பரிவும் கொண்ட உள்ளங்களில் கருணை அமுதமாய் சுரக்கும். அவதிப்படுவோரை எந்த எதிர்பார்ப்பும் இன்றி அரவணைத்து காக்க முயற்சிக்கும்.உலகம் முழுக்க பிரிவினைவாதமும், வெறுப்புணர்வும் அதிகரித்து வருவதன் மத்தியில், இன்னொரு உலகப்போருக்கு வித்திடும் பிராந்தியப் போர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. ரஷ்யாவால் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக உருக்குலையும் உக்ரைன், இஸ்ரேலால் ஒரு மாதத்துக்கும் மேலாக சீரழியும் காசா உள்ளிட்டவை நிதர்சன உதாரணங்கள்.
இன்றைக்குக் கருணை அனைத்துத் தளங்களிலும் தேவைப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள், குடும்பத்தால் நிராகரிக்கப்பட்ட மூத்தோர், சிங்கிள் பேரன்ட், கைம்பெண்கள் போன்றோர் கருணைக்கு ஆட்பட்டவர்கள். இவர்களைத் தாண்டி உலக அளவில் கருணைக்குரியவர்கள் குறித்துப் பேசவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நிலவளம் ரெங்கராஜன்