பெண் வழக்கறிஞர்கள் பர்தா அணியக்கூடாது - ஜம்மு காஷ்மீர் ஐகோர்ட் உத்தரவு!
ஸ்ரீநகரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் போன வருடம் நவம்பர் 27-ம் தேதி சில பல குடும்ப வன்முறை தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது நடந்த ஒரு வழக்கில் மனுதாரர் தரப்பில் பெண் வழக்கறிஞர் சையத் அய்னைன் காத்ரி என்பவர் ஆஜராகி வாதாடினார். அச்சமயம் அந்ர்க பெண் வழக்கறிஞர் முகத்தை மறைத்து பர்தா அணிந்திருந்தார். இதை அடுத்து அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராகுல் பார்தி, பர்தாவை அகற்றுமாறு பெண் வழக்கறிஞரை அறிவுறுத்தினார். நீதிபதியின் அறிவுரையை பெண் வழக்கறிஞர் ஏற்கவில்லை. 'பர்தா அணிவது எனது அடிப்படை உரிமை. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று அவர் வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி ராகுல் பார்தி கூறும்போது, “மனுதாரர்களுக்காக ஆஜராகும் வழக்கறிஞர்கள் தங்கள் அடையாளத்தை உறுதி செய்வது அவசியம். முகத்தை மறைத்து வழக்கறிஞர்கள் ஆஜராவது ஏற்புடையது கிடையாது. பெண் வழக்கறிஞர்களின் ஆடைகள் தொடர்பான வழிகாட்டு நெறிகள் குறித்து ஐகோர்ட்பதிவாளர் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற பதிவாளர் கடந்த 5-ம் தேதி பெண் வழக்கறிஞர்களுக்கான ஆடைகள் குறித்த வழிகாட்டுதல்களை ஐகோர்ட்டில் சமர்ப்பித்தார். இந்த வழிகாட்டுதல்கள் குறித்து ஐகோர்ட் பெண் நீதிபதி மோக்சா கஜுரியா காஸ்மி ஆய்வு நடத்தி அண்மையில் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார்.
அதில் தெரித்திருப்பதாவது:
பார் கவுன்சிலின் விதிகளின்படி பெண் வழக்கறிஞர்கள் முழுநீள கருப்பு நிற ஜாக்கெட் அல்லது பிளவுஸ், வெள்ளை காலர், வழக்கறிஞர்களுக்கான கவுனை அணிய வேண்டும். சேலை, நீளமான ஸ்கர்ட், பஞ்சாபி உடை, சுடிதார்-குர்தா அல்லது சல்வார்-குர்தா அல்லது பாரம்பரிய உடைகளை அணியலாம். கோடை காலங்களில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் கருப்பு நிற கவுன் அணிவதில் இருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.
பெண் வழக்கறிஞர் சையத் அய்னைன் காத்ரியின் வாதம் ஏற்புடையது கிடையாது. சம்பந்தப்பட்ட குடும்ப வன்முறை வழக்கில் அவர் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக வேறு வழக்கறிஞர் ஆஜராகி உள்ளார். எனவே இந்த விவகாரம் இத்துடன் முடித்து கொள்ளப்படுகிறது. இவ்வாறு நீதிபதி மோக்சா கஜுரியா காஸ்மி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.