அலங்கு- பட விமர்சனம்!
நாய்களும் மனிதர்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒன்றாக வாழ்கின்றனர். பரஸ்பரம் இரு உயிரினங்களுக்கும் பயனளிக்கும் ஒரு கூட்டு வாழ்வு முறையை கடைப்பிடித்து வருகின்றனர். ஆரம்ப காலங்களில் மனிதர்களுக்கு, விலங்குகளை வேட்டையாட நாய்கள் மிகவும் உதவியாக இருந்தன. மேலும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதிலும் சிறந்து விளங்கின. அதனால் வீடுகளில் அவற்றை வளர்க்க ஆரம்பித்தார்கள். மனிதர்களும் நாய்களுக்குத் தேவையான உணவு மற்றும் இருப்பிடத்தை வழங்கினர்.மற்ற விலங்குகளை விட நாய்கள் மனிதர்களின் உடல் மொழி மற்றும் முக பாவனைகளை புரிந்து கொள்வதிலும், ரெஸ்பான்ஸ் செய்வதிலும் மிகவும் திறமையானவை. அதைப்போலவே நாயின் குரைப்பொலி, செல்லச்சிணுங்கல்கள் மற்றும் உடல் சமிக்ஞைகளை மனிதர்களால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதெல்லாம் தெரிந்த நிலையில் ஒரு நாயை மையமாக கொண்டு இந்த பூமியில் உயிர் என்றால் அது மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளுக்கும் தான் என்ற கருத்தை வலியுறுத்தி இயக்குனர் எஸ் பி சக்திவேல் வழங்கியுள்ள அலுங்கு ஒரு பக்கா ஃபேமிலி படம்.
கதை என்னவென்றால் கேரளா பார்டரில் உள்ள மலை கிராமத்தில் பழங்குடிகளில் பலர் மலையை விட்டுக் கீழே இறங்கி நடைமுறை வாழ்க்கைக்கு வந்து விட்டாலும் ஒரு சிலர் மட்டும் இயற்கையோடு ஒன்றி மலைகளிலேயே வசித்து வருகின்றனர்.அப்படியான மனப் போக்கு கொண்ட ஹீரோ குணாநிதியின் தாய் ஶ்ரீ ரேகா, காட்டில் கணவன் யானைக்கு பலியான சூழலிலும் வாழ்ந்து பழக்கப்பட்டு விட்ட மலை கிராமத்தில் மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். அதே சமயம் கணவனைப் போல் பிள்ளைகளின் வாழ்க்கை காட்டு வேலையில் முடங்கிவிடக் கூடாது என்று அவர்களைப் படிக்க வைக்கிறார். அதன்படி பட்டய வகுப்பில் படித்து வரும் நாயகன் குணாநிதியும் அவரது நண்பர்களும் அவ்வப்போது பண்ணை வேலைகளைச் செய்து வருகிறார்கள். அப்படி ஒரு நாள் நோய்வாய்ப்பட்ட நாய் ஒன்றை இறந்து விட்டதாக அடக்கம் செய்யச் செல்லும்போது அது இறக்கவில்லை என்று தெரிகிறது. ஆனால் பணித்தவர், அதைக் கொன்றுவிடச் சொல்கிறார். அதற்கு மனமில்லாத குணாநிதி அந்த நாயைத் தானே எடுத்து வளர்க்க ஆரம்பிக்கிறார். இதில் வேலை கொடுத்தவருக்கும் அவருக்குமான முரண் ஒன்று ஏற்படுகிறது.
இன்னொரு பக்கம் கல்விச் செலவுக்காக அவரிடமே தங்கள் நிலத்தை வைத்து வட்டிக்குப் பணம் வாங்கியிருக்க, அது தொடர்பான கடனைத் தீர்க்க நண்பர்களுடன் சிறிது காலம் கேரளா சென்று வேலை பார்க்கிறார் குணாநிதி. போகும்போது மறக்காமல் நாயையும் உடன் அழைத்துச் செல்கிறார்கள். இவர்கள் அங்கே வேலைக்குச் சென்ற நேரம் முதலாளி செம்பன் வினோத்தின் செல்ல மகளை நாய் ஒன்று கடித்து விட, அந்த ஏரியாவில் இருக்கும் அத்தனை நாய்களையும் கொன்று விடச் சொல்கிறார் அவர். அவருக்கு வலது கையாளாக வரும் சரத் அப்பானி அந்த வேலையைச் சிரமேற்கொண்டு அத்தனை நாய்களையும் வேட்டையாட அதில் குணாநிதியின் நாயும் அகப்பட்டுக் கொள்கிறது. அதை மீட்க முயலும் போராட்டத்தில் விபத்தாக சரத் அப்பானியின் கையை வெட்டி விடுகிறார் குணாநிதி. அந்த ஏரியாவில் செல்வாக்கு பெற்ற அவர்களை எதிர்த்த பஞ்சம் பிழைக்க போன குணாநிதியின் கதி என்ன என்பதை கொஞ்ச்சம் சுவைபட சொல்லி இருப்பதே அலுங்கு.
தர்மா என்ற கேரக்டரில் மலைவாழ் பழங்குடிவாசியாக நடித்திருக்கும் குணாநிதி, துடிதுடிப்பான நடிப்பில் வெடித்திருக்கிறார். அம்மா வளர்ப்பு என்பதால் சகல உயிர்களையும் ஒன்றாக பார்த்து அன்பு செலுத்தும் கதாபாத்திரத்தின் வலுவை உணர்ந்து ஃபெர்பெக்டாக நடித்து அவுட் ஸ்டேண்டிங்க் வாங்கி விடுகிறார். தனது நாய்க்கு ஆபத்து என்றதும் காட்டும் அதிரடி அடடே சொல்ல வைத்த புள்ளையாண்டானுக்கு கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வர சாத்தியம் இருக்கிறது. ஹீரோவின் அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீரேகா, அச்சு அசலாக ஒரு மலை கிராமத்துப் பழங்குடிப் பெண்ணாக…- கொஞ்ச்சம் மாற்று செவித்திறன் கொண்டவராக வாழ்ந்தே இருக்கிறார்.அந்த வகையில் வித்தியாசமான தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார்.
காளி வெங்கட் தனக்குக் கொடுக்கப்பட்டதை அளவோடு செய்து முடித்திருக்கிறார்.குணாநிதியின் நண்பர்களாக வந்த இருவரும் மிரட்டலான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அதிலும், சிறுவனாக நடித்தவர் படம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துவிட்டார்.தனது மகள் மீது வைத்திருக்கும் பாசத்தை ஒவ்வொரு இடத்திலும் காட்டும் சமயத்தில் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் செம்பன் வினோத். சர்ரத் அப்பாணி மிரள வைத்திருக்கிறார்.இப்படக் கதைக்குப் பொருத்தமான ஆட்களை மிகச் சரியாக தேர்ந்தெடுத்து இருப்பதே அலுங்கு டீமின் சிறப்பு
கேமராமேன் பாண்டிக்குமார் அடர்ந்த வனப்பகுதியின் கொள்ளை அழகு மற்றும் ஆபத்துகளை மிக பிரமாதமாகக் காட்சிப்படுத்தி படத்தின் லெவலை சில படிகள் உயர்த்தி விட்டார். அதிலும் மலைவாழ் பழங்குயின மக்களாக நடித்திருப்பவர்களையும், அவர்களின் உணர்வுகளையும் கூட நேர்த்தியாக ரசிகர்களிடம் கடத்தும் வித்தையும் தெரிந்தவராக இருக்கிறார். பலே பாண்டிக்குமார்.
அஜீஷின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் இயக்குவரின் மனவோட்டத்தைப் புரிந்து மிகச் சரியாக தங்கள் பங்களிப்பை வழங்கி சபாஷ் சொல்ல வைத்து விடுகிறார்.
ஒரு நாய் மீதாம் அன்பை அடிப்படையாக் கொண்டு பக்கா கமர்ஷியல் சம்பவங்களைக் கோர்த்து கூடவே யானை, நரிக்கூட்டம் என்று வன விலங்குகளையும் காட்சிகளில் பயன்படுத்தி சகலரையும்ம் கவரும் வித்தையில் டைரக்டர் சக்திவேல் ஸ்கோர் செய்து விட்டார்.
மொத்தத்தில் அலங்கு - ஃபீல் குட் மூவி
மார்க் 3.5/5