பெரியார் மேல் ஏன் இத்தனை வன்மம்!?
‘கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு’ - - என்று நூறாண்டுகளுக்கு முன்பே பாரதி பாடியதிலிருந்து என்ன தெரிகிறது? மற்ற வட இந்திய மாநிலங்களைவிட, தமிழ்நாடு கல்வியில் அசுர வேகத்தில் பாய்ந்து கொண்டிருப்பது தெளிவாகவே தெரிகிறது. இதை எப்படி அனுமதிப்பது? ‘நாங்கள் தவழ்ந்து கொண்டிருக்கும்போது நீங்கள் ஓடுவதை எப்படி அனுமதிக்க முடியும்? ஓடாதீர்கள்; நில்லுங்கள்’ என்கிறார்கள் அவர்கள். ‘கல்வி சிறந்த தமிழ்நாடு’ என்று நூறாண்டுகளுக்கு முன்பே பாரதியால் எப்படிப் பாட முடிந்தது? சட்டியில் இருந்ததால்தானே அவனால் அகப்பையில் எடுத்துக் காட்ட முடிந்தது.
வடக்கில் மட்டும் கல்விக்கென்ன பஞ்சம்? ஐந்தாம் நூற்றாண்டிலேயே பத்தாயிரம் மாணவர்கள் பயின்ற - பகுத்தறிவோடு, மற்ற கல்வியையும் போதித்த நாளந்தா (நாளந்தா என்றால் அறிவை அளிப்பவர் என்று பொருள்) பல்கலைக் கழகம் கண்டவர்களாயிற்றே. என்றாலும் அங்கேயிருந்த 1,500 ஆசிரியர்களில் புகழ் பெற்ற ஆசிரியர்களாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தர்மபாலர், திங்கநாகர், ஸ்திரமதி, சிலாபத்திரர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது. சரி, அந்தப் பல்கலைக் கழகம் என்னவானது? பகுத்தறிவை எப்படி வளரவிட முடியும்? அதனால், கொஞ்சம் கொஞ்சமாகச் சனாதனம் படர்ந்து கபளீகரம் செய்து விட்டது. அதற்கு நாங்களா காரணம்?
அப்போது தென்னிந்தியாவில், அதாவது மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டுவரை களப்பிரர்கள் கோலோச்சிய பகுத்தறிவுக் காலம் என்பதால், சனாதனம் வாய்மூடிக் கிடக்க வேண்டியதாயிற்று. அந்த ஆதங்கத்தில்தான் ‘களப்பிரர்கள் காலம் இருண்ட காலம்’ என்று தனது தோல்விக் காலத்தை மூடி மறைத்து விட்டது சனாதனம். களப்பிரர்கள் காலத்திற்குப் பிறகும் சனாதனத்தால் இங்கே ஆழமாக வேரூன்ற முடியவில்லை. காரணம், தமிழ் மக்களின் விழிப்புணர்வு. இருந்தாலும் மக்கள் கணநேரமும் அசந்துவிடக் கூடாது என்பதற்காக, நமது கண் முன்னால், சனாதன எதிர்ப்பையே தனது வாழ்நாள் பணியாகச் செய்து கொண்டிருந்தவர் தந்தை பெரியார். அதனால்தான் அவர் மேல் இத்தனை வன்மம்.
என்றாலும் அவ்வப்போது ஆதவனை மேகங்கள் மறைப்பது போல, இன்றும் சனாதனம் தலைகாட்டிக் கொண்டுதான் இருக்கிறது. அதற்குச் சில கோடரிக் காம்புகள் துணைபோவதுதான் கொடுமை. ‘நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்’ என்று ஒளவை சொன்னதுபோல், போகிற போக்கில், இந்தக் கோடரிக் காம்புகளின் பேச்சையும் பொழுது போக்காகக் கைதட்டி ரசித்ததுதான் தவறாகி விட்டது. இதை இப்போதாவது உணர்ந்தார்களே மக்கள். எப்படியோ, better late than never.