சீமான் அரசியல் அஸ்தமனமும் பெரியாரின் பெயரால் முடித்து வைக்கப்படும்!
நீங்கள் ஒரு அறிவு ஜீவியாக இருப்பீர்களோ, நீங்கள் ஒரு புரட்சிக்காரனாக இருப்பீர்களோ, நீங்கள் தான் இந்த மண்ணின் மைந்தர்களின் விடுதலைக்காகப் பிறப்பெடுத்திருக்கும் மீட்பரோ என்று ஒரு தோற்றத்தை உருவாக்க மிக எளிய வழி, பெரியாரைத் தூற்றுவது... ! திராவிடத்தின் பெயரில் பெரியார் தான் இங்கிருந்த சகல சௌபாக்கியங்களையும் மடை மாற்றித் தெலுங்கர்களுக்கும், கன்னடர்களுக்கும் தமிழினத்தின் உயரிய பல்வேறு பண்புகளையும், உடமைகளையும் கூறு போட்டு விற்று விட்டார் என்று புரட்சிக் குரல் எழுப்புவது...!தற்போது அது சீமானின் வழியாக அரசியலுக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது. சீமான் ஒன்றும் புதிய வரவல்ல, அவருக்கு முன்னதாகவே பல்வேறு திராவிட எதிர்ப்பாளர்கள் இங்குண்டு.
கடந்த ஐம்பதாண்டுகளில் பெரியாரின் கருத்தியலைப் போற்றிக் கொண்டாடுவது எப்படி ஒரு வழிமுறையாக இருந்ததோ அதேபோல இப்போது அவரைத் தூற்றி முழக்கமிடுவது ஒரு புதிய வழிமுறை (Trend). எது எப்படியோ தமிழக அரசியலில் போற்றல், தூற்றல் என்று எல்லா வழிகளிலும் பெரியாரின் கோட்பாடுகள் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதைத்தான் நாம் மகிழ்வோடு கொண்டாட வேண்டியிருக்கிறது. இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு மேல் தாக்குப் பிடிக்கும் அளவுக்கு அவரது பணிகளும், உழைப்பும் தமிழ்ச் சமூகத்தில் விரவிக் கிடக்கிறது. ஆகவே பெரியாரை அவரது கருத்தியலை தற்காப்பது நம்முடைய வேலையல்ல. சீமானைப் போன்ற அரைவேக்காட்டு அரசியல்வாதிகள் பெரியாரை வசைபாடுவதும், வம்புக்கிழுப்பதும் தங்கள் புதிய அடிப்படைவாதக் கூட்டாளிகளோடு நெருங்கிச் செல்வதற்காகவும், விளம்பர யுத்தியும்தான் என்பது அரசியலை ஓரளவுக்கு முதிர்ச்சியோடு அணுகக்கூடியவர்கள் புரிந்து கொள்வார்கள்.
திராவிட இயக்கம் அல்லது திராவிடக் கருத்தாக்கம் குறித்த வரலாற்றுப் பார்வையை விடுத்து அதன் தொடர் நிகழ்வுகளில் நிகழ்ந்த சில தனி மனிதத் தவறுகளையோ, பிழைகளையோ முன்னிறுத்தி "திராவிடம் தோற்று விட்டது, திராவிடத்தை வேரறுப்போம், கிளையருப்போம்" என்று கூச்சல் போடுகிற பல இளைஞர்களை இப்போது நீங்கள் பல்வேறு இடங்களில் சந்திக்கக் கூடும், அந்தச் சந்திப்பு உங்களுக்கு திராவிட இயக்கங்களைக் குறித்தோ, பெரியாரைக் குறித்த பல ஐயங்களை உண்டாக்கக் கூடும்.திராவிட இனக்கூறுகள், திராவிட நாகரீகம், திராவிட மொழிகள் என்கிற அடிப்படைக் கூறுகளால் இணைக்கப்பட்டிருந்த நிலப்பரப்பு சார்ந்த அரசியலையே திராவிட அரசியல் என்கிற கருத்தாக்கம் முன்னோக்கிச் செலுத்தியது. இன்றைய தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளும் அடிப்படைச் சொல்லாய்வுகளில் பெரிய அளவிலான ஒற்றுமைகளைக் கொண்டிருப்பதையும், கலை மற்றும் சமூகப் பண்பாட்டு வெளிகளில் ஏறத்தாழ ஒரே விழுமியங்களைக் கொண்டிருப்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது.
திராவிடம் அல்லது தமிழ்த் தேசிய சண்டைகளில் நாம் மும்முரமாய் இருக்கிற இந்தக் கால கட்டத்தில் வரலாற்று ரீதியாக திராவிட நாகரீகம் என்று ஒரு காலத்தில் நாம் அறிந்திருந்த "ஹரப்பா மொஹஜ்சதாரா நகர நாகரீகம்" திராவிட நாகரீகம் என்கிற கருத்தாக்கத்தில் இருந்து வெகு தொலைவு தள்ளப்பட்டிருக்கிறது என்கிற உண்மையை கவலையோடு உணர வேண்டியிருக்கிறது. திராவிட நாகரீகம் அல்லது சிந்துச் சமவெளி நாகரீகம் என்கிற குறியீடுகளை மறைத்து, திராவிட மொழிகளோடும் நிலப்பரப்போடும் அந்த நாகரீகத்துக்கு இருந்த தொடர்புகளை திரித்து வெவ்வேறு பெயர்களில் அவற்றை சிவனை வழிபட்ட சரஸ்வதி நாகரிகம் என்று தொடர்ந்து வரலாற்றுத் திரிபு வேலைகளை ஒரு சாரார் செய்து வருவதை ஆய்வாளர்களும், அறிஞர் பெருமக்களும் அறிவார்கள்.ஆகவே இனக்குழு வாதம் என்கிற ஒரு தேக்க நிலையிலிருந்து பரந்த ஒரு அடையாளத்தை முன்னெடுக்கும் கோட்பாடுகளை அரசியல் மயப்படுத்துவதில் எந்தத் தீமைகளும் நிகழ்ந்து விடப் போவதில்லை.
ஆனால், தமிழகத்தில் உருவாக்கப்பட்ட திராவிட இயக்கத்தின் மூல வேறான நீதிக்கட்சி உருவான வரலாறு என்பது வேறானது, திராவிட நாகரீகத்தை மையமாக வைத்து அதன் தொடர்ச்சியாக உண்டாக்கப்பட்டதல்ல நீதிக் கட்சி. நீதிக் கட்சிக்கான மிகப்பெரிய தேவை பார்ப்பனர் அல்லாத சமூகங்களுக்கான ஒரு பிரதிநிதித்துவம் என்கிற அளவிலேயே இருந்தது. ஆங்கிலக் காலனி ஆட்சி அதிகாரங்களில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்திய பார்ப்பன அதிகார மையத்தைக் குறி வைத்து உருவாக்கப்பட்ட இயக்கமாகவே அன்றைய நீதிக் கட்சி பரிமாணம் கொண்டது.குழப்பமான நிலவியல் சூழல்களைக் கொண்ட அன்றைய தென்னிந்தியாவில் பல்வேறு மொழி பேசக் கூடிய மக்கள் அருகருகில் வாழ்ந்தார்கள், சென்னையை ஒட்டிய புறநகர்ப் பகுதிகளில் தெலுங்கர்களும், மைசூரை ஒட்டிய மலைப்புறங்களில் கன்னடர்களும், கோவை மற்றும் நெல்லையை ஒட்டிய பல்வேறு பகுதிகளில் மலையாளிகளும் பிரிக்கப்படாத மாநில காலத்தில் ஒன்றாகவே வாழ்ந்தார்கள். மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் இன்றளவும் தெலுங்கு பேசுகிற மக்கள் பரவலாக வாழ்கிறார்கள், அவர்கள் தமிழ்நாட்டின் குடிமக்களாக நீண்ட காலமாகவே அங்கீகரிக்கப்பட்டவர்கள்...!
பல்வேறு மன்னராட்சிக் காலங்களில் நிகழ்ந்த குடியிருப்புகளும், படையணி முகாம்களும், பாளையங்களும் நிலைபெற்று அந்த மண்ணின் பூர்வ குடிகளாக அவர்களை மாற்றி இருக்கிறது, அவர்கள் தெலுங்கு பேசுகிறார்கள் என்பதற்காக அவர்கள் ஆந்திர மாநில அரசியலில் பங்கெடுப்பதில்லை அல்லது வரி செலுத்துவதில்லை. வரலாற்றின் நெடுகிலும் எந்த நிலப்பரப்பும் எந்த இனக்குழுவுக்கும் சொந்தமானதல்ல என்கிற எளிய மனித வரலாற்று உண்மையை நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். தொடர்ந்து பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக புவியெங்கும் நிகழ்ந்து கொண்டிருக்கும் வாழ்தலுக்கான இடப்பெயர்வு ஒரு தொடர் மனித இயக்கம், இனக்குழுக்களும், ஏனைய குழு நிலைப்பாடுகளும் தொடர்ந்து நிகழ்கிற பழக்கங்களிலும், அடையாளங்களிலும் தங்களை உள்ளீடு செய்து அடைகிற தற்காலிக மகிழ்ச்சிக்குப் பெயர் தான் தேசியங்கள்.
உடல் மற்றும் மன ரீதியிலான பாதுகாப்பு உணர்வே உடைமைகளைத் தேடி அடையும் நிலையை மனிதன் என்கிற சமூக விலங்கிற்கு வழங்கி இருக்கிறது. எனது மண், எனது ஊர், எனது வீடு என்கிற எல்லாச் சொல்லாடல்களும் ஒருவிதமான பாதுகாப்பு உணர்வை மனிதனுக்கு வழங்குகிறது. ஒரு எல்லை வரையில் இந்தப் பாதுகாப்பு உணர்வு தேவையாகவும், உரிமையாகவும் இருந்து தனது கிளைகளை விரிக்கிறது. பிறிதொரு கட்டத்தில் அதுவே ஏனைய மனிதக் குழுக்களை அச்சுறுத்தும் காரணியாக மாறத் துவங்குகிறது.இன மோதல்களாகவும், குழுச் சண்டைகளாகவும் தொடர்ந்து இந்த மோதல் காலம் காலமாய் நீடித்து வருகிறது, நாகரீகத்தை நோக்கிய அடுத்த நகர்வில் மனிதன் கண்டடைய வேண்டிய மிக முக்கியமான தீர்வு இந்த இன மோதல்களுக்கான ஒரு முடிவே என்பதை முதிர்ந்த அறிவுள்ள எந்த இனக்குழுவின் மனிதனும் ஒப்புக் கொள்வான்.
சங்க காலத்துக்குப் பின்னான அரச அமைப்புகளில், குறிப்பாக பல்லவர்கள், சாளுக்கியர்கள், களப்பிரர்கள், சோழர்கள் காலத்தில் கடுமையான உளவியல் அழுத்தங்களுக்கும், உழைப்பு மற்றும் அறிவுச் சுரண்டல்களுக்கும் ஆளாகின. தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு சாதியக் குழுக்கள் பார்ப்பன மேலாதிக்கத்தில் வீழ்ந்து கிடந்த ஒரு காலத்தில் அவர்களுக்கென்று எந்த அரசியல் கோட்பாடுகளும் இல்லை, இருந்த நிலங்களும், வயல்களும் பிடுங்கிப் பூசாரிகளுக்குக் கொடுக்கப்பட்டது.கோவில்களை மையமாக வைத்து கட்டி எழுப்பப்பட்ட அதிகார மையங்களில் பார்ப்பனர்களும், அரச வம்சங்களும் கோலோச்சத் துவங்கிய பொது கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றங்களில் தமிழ்ச் சாதிகளுக்கான எந்த உரிமைகளும் வழங்கப்படவில்லை.பின்னர் நிறுவப்பட்ட ஆங்கிலக் காலனி ஆட்சியில் பார்ப்பனர்கள் கடவுளின் பெயரால் சுரண்டிய அறிவையும், கல்வியையும் கொண்டு தரகர்களாகவும், அதிகார மையங்களாகவும் தங்களை வடிவமைத்துக் கொண்டார்கள்.
அதுவரையில் பிணங்களைப் பார்ப்பதையே தீட்டு என்று சொல்லிக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் பிணங்களை அறுக்கும் மருத்துவக் கல்வியை முன்னே நின்று தேர்வு செய்து கொண்டார்கள், ஆங்கிலக் கோமான்களோடு வட்ட மேசைகளில் அமர்ந்து அவர்கள் காலம் காலமாய் பெருங்குற்றம் என்று சொன்ன மாட்டுக் கறியை அமர்க்களமாய் உண்டு செரித்தார்கள்.அத்தகைய ஒரு காலத்தில் தான் நீதிக் கட்சியும், அதன் வளர்ச்சியும் தமிழகத்தில் நிகழ்ந்தது, பார்ப்பனர் அல்லாத எல்லாத் தரப்புக்கான ஒரு இயக்கமாக அது வளரும் காலத்திலேயே பார்ப்பன மேலாதிக்கத்துக்கு எதிரான தமிழ்ச் சமூகத்தின் குரல் பரவலாக எழத் துவங்கியது. சுயமரியாதை இயக்கமாக அன்றைக்கு பெரியாரின் ஊடாக ஒலித்த குரல் பிறகு திராவிடர் கழகமாக மாற்றம் பெற்றது. நீதிக் கட்சியும், அதற்குப் பின்னான திராவிட இயக்கமும் தமிழ்ச் சமூகத்துக்கான பல்வேறு உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தது.
சமூகம், கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்புகள் என்று அந்த இயக்கம் முன்னிறுத்திய பல்வேறு நன்மைகளுக்கான கருத்தியல் இன்று வரைக்கும் தமிழக மக்களின் வாழ்க்கை மேம்பாடுகளில் ஏதாவது ஒரு வகையில் உதவிக் கொண்டிருக்கிறது என்கிற அடிப்படை உண்மையை இந்த வறட்டு இணையக் கூச்சல்கள் ஒரு போதும் மறைத்து விட முடியாது என்பதை நமது இளைஞர்கள் உணர வேண்டிய காலம் இது. வேறு எந்த அரசியல் முகாந்திரமும் இல்லாமல் நீர்த்துப் போய் இந்துத்துவ வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தமிழ்ச் சமூகத்தின் எல்லாச் சாதிகளும் திராவிட இயக்கம் என்கிற உயிர் காக்கும் படகிலேயே பயணம் செய்யத் துவங்கின.மொழிக்கான அரசியலில் தீவிரப் பங்கேற்பு நிகழ்த்தி உரிமைகளை நிலைநாட்டியது இதே திராவிட இயக்கமும் அதன் தலைவர்களும் தான் என்பதை ஏனோ இன்றைய தமிழ்த் தேசியப் போராளிகள் நினைவில் கொள்வதே இல்லை.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடுகளை சட்ட வடிவமாக்கி ஆட்சி அதிகாரத்தை நோக்கி மீண்டும் நகர்த்தியது இதே திராவிட இயக்கங்களும் அதன் தலைவர்களும் தான் என்று சொன்னால் காத்து கேட்காதது போல நகர்ந்து விடும் போராளிகள் நிறைந்த சமூகம் நமது சமூகம்.பட்டியலிட முடியாத சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது திராவிட இயக்கங்களின் கருத்தாக்கம், கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை உரிமைகளில் இருந்து ஆட்சி அதிகாரம் வரைக்கும் பல்வேறு தமிழ் சாதிகளை நகர்த்திக் கரை சேர்த்த அதே திராவிட இயக்கத்தை புழுதி வாரித் தூற்றுவது என்பது இன்றைக்கு ஒரு நவநாகரீக அடையாளமாக மாறிப் போயிருக்கிறது. எந்த இயக்கத்தையும் விமர்சனம் செய்வதையோ அல்லது மீளாய்வுக்கு உட்படுத்துவதையோ குற்றமாகக் கருத முடியாது, அதே வேளையில் அடிப்படைப் புரிதல் இல்லாத முரணான புழுதி தூற்றும் படலத்தை ஆதரிக்கவும் இயலாது.
திராவிடம் என்பது தமிழ்ச் சமூகத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த பல்வேறு சமூகப் பொருளாதார மாற்றங்களை உண்டாக்கிய ஒரு கருத்தாக்கம், அந்தக் கருத்தாக்கம் மிகுந்த கவனத்தோடும், அடிப்படைப் புரிதல்களோடும் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். காலத்துக்கு தேவையான நன்மை விளைவிக்கும் மாற்றங்களை திராவிட இயக்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்வதும் கூடத் தமிழ் தேசியச் சிந்தனையின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும்.மாறாக வரலாற்றுப் புரிதல்களும், அடிப்படை அரசியல் அறிவும் இல்லாத தமிழ்த் தேசியப் போராளிகளின் அடையாளமாக திராவிட எதிர்ப்பு அரசியல் இப்போது மாறி இருக்கிறது.சமூக மாற்றங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ஒரு கருத்தாக்கத்தை நிலப்பரப்பு சாராத ஒரு போருடன் மட்டுமே ஒப்பீட்டளவில் நோக்குவதை ஒரு போதும் ஒப்புக் கொள்ள முடியாது. தவறுகள் இழைக்காத தனி மனிதர்களும், இயக்கங்களும் இருந்ததுமில்லை இனி இருக்கப் போவதுமில்லை.
வெள்ளைச் சட்டை அரசியல் செய்யும் ஒரு மனிதராக பெரியார் எப்போதும் இருந்திருக்கவில்லை என்கிற வரலாறே அறியாத பலர் தான் இன்று அவரைக் குறித்த அவதூறுகளை அள்ளித் தெளிக்கிறார்கள். அவருடைய காலத்தில் அவரது கண்ணுக்கு முன் நிகழ்ந்த பல்வேறு சமூகச் சிக்கல்களுக்காக அவர் தொடர்ந்து குரல் கொடுத்த ஒரு போராளியாகவே கடைசி வரை இருந்தார் என்பதை அவரது வரலாற்றை அறிந்தவர்கள் உணரக் கூடும்.காலராவினால் இறந்து போன தனது சக மனிதனின் பிணங்களை அவர் நோய்க்கு அஞ்சி வீதியில் விட்டுச் செல்கிற சுயநலவாதியாக இருக்கவில்லை, தன்னந்தனியாக தனது தோள்களில் பிணங்களைச் சுமந்து அடக்கம் செய்த அற்புதமான மனிதர் அவர்...!பெண்ணுரிமைகளுக்காகவும், மூட நம்பிக்கை மற்றும் பார்ப்பன மேலாதிக்க எதிர்ப்புக்காகவும் பல முறை அவர் தாக்குதல்களை எதிர் கொண்டிருக்கிறார், ஒரு போதும் குறிப்பிட்ட சாதிக்குக் கொடி பிடித்த தலைவராக அவர் இருந்திருக்கவில்லை...!தமிழ்ச் சமூகத்தின் கடைக்கோடி மனிதனுக்கும் அவரது கோட்பாடு பயனளித்தது. பயனளிக்கிறது.
அவருடைய சொற்களில் முரண்கள் இருந்திருக்கிறது, ஆம், தமிழை அவர் காட்டுமிராண்டிகளின் மொழி என்றார்.பக்தி இலக்கியங்களை மட்டுமே கொண்டாடிக் கொண்டும், ஆன்மீகத்தை மட்டுமே மையமாக வைத்து இயங்கிய ஒரு பிற்போக்கான காலத்தில் அவர் இயங்கினார், ஆகவே கடுஞ்சினத்துடன் தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி, அதில் அறிவியல் குறித்த சிந்தனைகள் எழவில்லை, நவீன சிந்தனைகளை தமிழ் உள்வாங்கவில்லை என்கிற தொனியில் பல இடங்களில் அவர் பேசினார்.பெண்விடுதலை குறித்த அவரது சிந்தனைகள் நவீன அறிவியல் வழியானவை, அவர் கர்ப்ப ஆட்சி என்றொரு நூலில் ஆண்கள் எப்படி பெண்களின் மீதான ஆளுமையை, அடக்குமுறையை பெண்ணுடல் வழியாக முன்னெடுக்கிறார்கள் என்று எழுதுகிறார்.!பெண்களே தேவைப்பட்டால் உங்கள் கர்ப்பப்பையை வெட்டி எறியுங்கள், விடுதலை பெற்ற வாழ்க்கை முறையை அது பெண்களிடத்தில் உருவாக்கும் என்று சொல்கிறார், அது கட்டளை அல்ல, அது ஒருவிதமான விழிப்புணர்வு.
நூற்றுக்கணக்கான பொதுக் கூட்டங்கள், நூற்றுக்கணக்கான போராட்டங்கள், ஆயிரக்கணக்கான கட்டுரைகள், நூல்கள், தொடர்ந்து சமூகம் சமூகம் தமிழர் நிலத்தில் இயங்கிய ஒரு மாமனிதரை விமர்சனம் செய்யும் போது ஒரு கணம் நின்று நிதானியுங்கள்... சிறுநீரகம் செயலிழந்து கடுமையான வலி உங்களை வதைத்துக் கொண்டிருக்கும் போது, குழாய்களால் மருத்துவர்களின் உதவியோடு சிறுநீர் கழித்துக் கொண்டே "ஐயோ, அம்மா, வலிக்குதே, வலிக்குதே" என்று ஒலிபெருக்கியில் குரல் எழுப்பியபடி ஒரு சமூகத்தின் அரசியல் எழுச்சிக்காகவும், விடுதலைக்காகவும் உரையாற்ற முடியுமா???அவர் தனது கடைசி களத்தில் அப்படித்தான் செய்தார். அவருடைய பெரும்போக்கு சிந்தனை எப்போதும் ஒரு குறிப்பிட்ட இனத்துக்காகப் பேசும் மடமையை செய்ததில்லை.பெரியாரையும், திராவிட இயக்கங்களையும் விமர்சனம் செய்யும் உரிமை யாருக்கும் உரியது, ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்கள், தமிழ்த் தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், சாமானியர்கள், அறிவு ஜீவிகள் என்று யார் வேண்டுமானாலும் விமர்சிக்கட்டும்...!ஆனால் அந்த மனிதர் இந்த சமூகத்துச் செய்திருக்கும் அளப்பரிய சமூக பொருளாதார நன்மைகளையும், அர்ப்பணிப்பு உணர்வையும் நிராகரிப்பதென்பது வரலாற்றை மறுதலித்து வேறு திசையில் பயணிப்பது போன்றது.
சீமான் தனது அரசியல் வாழ்க்கையைத் துவங்குவதற்கு எப்படி பெரியாரின் பெயரைப் பயன்படுத்தினாரோ, அதேபோலவே அவரது அரசியல் அஸ்தமனமும் பெரியாரின் பெயரால் முடித்து வைக்கப்படும் என்றே தோன்றுகிறது.இப்போது மிகத் தீவிரமாக அவர் பெரியாரை வசைபாடுவதும், விமர்சிப்பதும் புதிய இந்துத்துவக் கூட்டணிகளை நோக்கிய நகர்வு. அவர் தனது புதிய எதிர்காலக் கூட்டாளிகளை அடையாளம் கண்டு அதன்வழியாக அரசியல் அதிகாரத்தை அடைவதற்கான ஒரு வழிமுறையாக பெரியாரை வசைபாடும் வழிமுறையைக் கையாள்கிறார்.தொடர்ந்து முதிர்ச்சியின்மையின் அடையாளமாகவே சீமான் வளர்கிறார், தொடர்ந்து கூச்சலிடுவது, மேடைகளில் செருப்பைத் தூக்கிக் காட்டுவது, "உண்மையான ஆண்மகனாக இருந்தால்...." என்று பிற்போக்குத்தனமான சவால்கள் விடுப்பது என்று அவரது செயல்பாடுகள் பாசிசத்தன்மை கொண்டதாகவே வளர்ச்சி அடைகிறது.
தமிழ்த் தேசியத்தின் தேவைகள் அதிகரித்திருப்பதாக நம்பும் இளைஞர்கள், தமிழ்த் தேசியத்தின் மூலமாகவே நமக்கான உரிமைகளும், மேம்பாடும் நிலைத்திருக்கிறது என்று அதனூடே பயணிக்கும் இயக்கங்கள் தங்கள் இன்றைய இருப்பை திராவிடம் என்கிற கோட்பாட்டுக் கருவியின் வழியாகவே பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.பெரியாரை அணுகும் போக்கில் யாரும் ஒற்றைக் கோட்பாடுகளை மையமாக வைத்து விமர்சனம் செய்யவியலாது, அவரது இயக்கமும், சிந்தனைகளும் தமிழக அரசியல் வரலாற்றின் திசைகளை மாற்றி அமைத்தவை, கடந்த 60 ஆண்டுகளில் திராவிடம் உள்ளீடு செய்திருக்கிற அரசியல் மாற்றங்களும், மேம்பாடுகளும் எவராலும் புறந்தள்ளி விட இயலாதவை.
சீமான் எந்தவிதமான அறிவியல் பூர்வமான விமர்சன வழிமுறைகளும் இல்லாமல் இந்துத்துவப் பிற்போக்குவாதிகளைப் போலவே பெரியாரையும், திராவிடத்தையும் எதிர்க்கத் துவங்கி இருக்கிறார்.இந்தப் போக்கு வெகுமக்கள் திரளிடம் சீமானைக் கொண்டு போய் சேர்க்காது, வழக்கம் போல புதிய எதிர்ப்பு அரசியலை விரும்பும் இளைஞர்களிடம் ஒரு கவர்ச்சிகரமான தோற்றத்தை உருவாக்கும்.வழக்கம் போல அவர்கள் அடுத்த நான்கு ஆண்டுகளில் முதிர்ச்சியடைந்து அல்லது பாதிப்படைந்து வேறொரு திராவிட இயக்கத்திடம் சரணடைந்து விடுவார்கள்.பெரியார் சீமான்கள் நினைப்பது போல அத்தனை எளிதான கோட்பாட்டு இயக்கம் அல்ல, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று எளிய உழைக்கும் மக்களிடம் ஏறத்தாழ 40 ஆண்டுகள் தொடர்ச்சியாக உரையாடி அவர்களிடம் மாற்றங்களைக் கொண்டு வந்தவர், போகிற போக்கில் அவர் மீது சேற்றை வாரி இறைப்பது ஒருபோதும் சீமான்களுக்கு நிலையான வளர்ச்சியைக் கொடுக்காது.