எது நல்ல புத்தகம்?
ஆழி சூழ் உலகத்தை அறிவு சூழ் உலகமாக்குவது புத்தகங்களே. மனிதர்களைப் போலவே, புத்தகங்களிலும் பல தரங்கள் உள்ளன. அவற்றில் தரமான புத்தகங்களை எப்படித் தேர்ந்தெடுப்பது? இதை நமது கல்வி நிலையங்கள் கற்றுத் தருவதில்லையென்பது நமது பாடத்திட்டங்களில் உள்ள மிகப் பெரிய குறைபாடு. சரி, ஆசிரியர்களாவது சொல்லித் தருகிறார்களா என்றால், அப்படிப்பட்ட ஆசிரியர்கள் வாய்ப்பதும் அரிதிலும் அரிதாக இருக்கிறது. கல்வித் தலமனைத்தும் வியாபாரத் தலங்களான பிறகு, அவை எப்படி அறிவாளிகளை உருவாக்கும்? வியாபாரிகளைத்தான் உருவாக்கும்.
அதனால்தான் புத்தகங்களின் பணி இன்றியமையாததாக இருக்கிறது. சரி, எது நல்ல புத்தகம்? அரிச்சந்திரன் நாடகம் காந்திஜியை பாதித்தது போல், எந்தப் புத்தகம் நம்மை பாதிக்கிறதோ, அதுவே நல்ல புத்தகம். நமது வாழ்க்கையையே மாற்றிப் போடாவிட்டாலும் குறைந்தபட்சம் நமது சிந்தனையைக் கிளறிவிட்டாலே போதும். முத்துக் குளிப்பதுபோல்தான். நூறு சிப்பிகளில் பத்து முத்துகள் கிடைத்தாலே போதும். மீதியெல்லாம் வெறும் கிளிஞ்சல்கள்தான் என்றாலும் அவையும் சுண்ணாம்பாகுமே. புத்தகம் வாங்குவதற்கு நானொரு குறுக்குவழி வைத்திருக்கிறேன்.
முதலில் புத்தகத்தை எழுதியவர் யாரென்று பார்ப்பேன். அவர் எழுத்தாளரா, தொகுப்பாளரா, சிந்தனையாளரா, ஆய்வாளரா, எழுதுவதற்குத் தகுதியானவர்தானா என்றெல்லாம் பார்ப்பேன். பிறகு, அவர், இடதுசாரியா, வலதுசாரியா என்று பார்ப்பேன். இடதுசாரிகள்மேல் எனக்கு அதிக நம்பிக்கையுண்டு என்றாலும் வலதுசாரிகளை ஒதுக்கிவிட மாட்டேன். ‘மகாவிஷ்ணு தனது வாமன அவதாரத்தில், தனது இரண்டாவது அடியை வானத்தில் எடுத்து வைத்தபோது, அவருடைய திருப்பாதத்தின் ஒரு சிறு பகுதி, தற்செயலாக நிலாவிலும் பட்டது. அதனால் நிலா இந்துக்களின் புனிதமான கிரகம். அதனால், வேறு மதங்களைச் சேர்ந்த வேற்று நாட்டுக்காரர்களின் காலடி நிலாவில் படுவதும், ஆய்வு செய்வதும் எங்கள் மனதைப் புண்படுத்துகிறது. நாங்கள் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ என்பதுபோல் கூசாமல் கதை சொல்லும் வலதுசாரிகளைத்தான் நம்பமாட்டேனே தவிர, ஏனையோரையல்ல.
எழுதும் அனைவருக்குமே ஒரு நோக்கமும் சார்பும் இருக்கவே செய்யும். படிக்கப் படிக்க அதையெல்லாம் நம்மால் சுலபமாகவே புரிந்து கொள்ள முடியும். அப்போதெல்லாம் அன்னப் பறவைபோல செயல்பட்டு, நல்லவற்றை எடுத்துக் கொண்டு அல்லவற்றை விலக்கிவிட வேண்டும்.
சரி, புத்தகங்களை இரவல் கொடுக்கலாமா?
‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறை பொருள் சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே’ - என்று திருமூலர் சொன்னதையும், தனக்கு நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை; ஊரிலுள்ள மக்கள் அனைவரும் கடைத்தேற வேண்டுமென, கோபுரத்தின் உச்சியிலேறி நின்று கொண்டு, தனது குருவான திருக்கோஷ்டியூர் நம்பி தனக்கு உபதேசித்த ‘ஓம் நமோநாராயணாய’ மந்திரத்தை அனைவரும் கேட்கும்படி சப்தம் போட்டுச் சொன்ன இராமானுஜரையும் சுத்தமாக மறந்து விடுங்கள்.
ஒருபோதும் இரவல் கொடுக்காதீர்கள். கொடுத்தாலும் நட்பு கெடும்; கொடுக்காவிட்டாலும் கெடும். அதற்கு கொடுக்காமலே கெட்டுப் போவது நலம். புத்தகமாவது மிஞ்சும். தவிர்க்க முடியாத உயிர் நண்பனென்றால், புதிதாக ஒன்றை வாங்கிக் கொடுக்கலாமே தவிர, உங்களிடமுள்ள பிரதியை மட்டும் கொடுக்கவே கொடுக்காதீர்கள். கொடுத்த கடன் என்றாவது ஒருநாள் திரும்ப வந்துவிடும். புத்தகம் மட்டும் வரவே வராது.
புத்தகங்களை விலை கொடுத்து வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பிறந்த நாள், திருமணங்களில் நல்ல புத்தகங்களைப் பரிசளியுங்கள். புடைவை வாங்கிக் கொடுத்தால் மட்டுமல்ல; புத்தகம் வாங்கிக் கொடுத்தாலும் சந்தோஷப்படும் மனைவியுடையோர் பாக்கியச்சாலிகள். அங்கே பிறக்கும் குழந்தைகளும் பாக்கியசாலிகள். முதலில், இப்போது பார்த்துப் பழகிக் கொண்டிருக்கும் உங்கள் குழந்தைகளைப் படிக்கப் பழக்குங்கள்