For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கொஞ்சம் நில்லுங்கள்….!

02:01 PM Jan 01, 2024 IST | admin
கொஞ்சம் நில்லுங்கள்…
Advertisement

ழந்தமிழர் வாழ்ந்த வாழ்க்கை நம்மை பிரமிக்க வைக்கிறது. மூடநம்பிக்கைகளும் முட்டாள்தனங்களும் அவர்களிடம் அறவே இருந்ததில்லை. இயற்கையோடு இயைந்து வாழ்ந்தார்கள். உழைத்து வாழ்ந்தார்கள். ‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது . ஊதியம் இல்லை உயிர்க்கு’ என்று வள்ளுவன் குறள் எழுதுவதற்கு முன்பே, தமிழர்கள் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். வாழ்ந்த வாழ்க்கையைத்தான் வள்ளுவன் குறளாக்கியிருக்கிறான். தங்கள் உழைப்பால் பெற்ற செல்வத்தைப் பிறருக்கு ஈந்து வாழ்ந்திருக்கிறார்களே தவிர, இறைவனிடமோ அல்லது இயற்கையிடமோ அவர்கள் இரந்து வாழ்ந்ததில்லை. அதனால்தான் வள்ளுவனும், ‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்’ என்று பாடினான்.

Advertisement

‘வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
நடுநாள் யாமத்துப் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி, உடுப்பது இரண்டே
பிறவும் இல்லாம் ஓரொக்குமே,
செல்வத்துப் பயனே ஈதல் ‘
(உலகம் முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்யும் ஓர் அரசனுக்கும், இரவும் பகலும் கண்ணுறங்காமல் கொடிய விலங்குகளை வேட்டையாடி வாழும் கல்வியறிவற்ற ஒரு வேடுவனுக்கும் உண்கிற உணவு ஒரு நாழிதான் (நாழி என்பது கால்படி), மேலாடை, கீழாடை என்கிற இரண்டு ஆடைகள்தான். இது அனைவருக்குமே பொதுவானது. ஆகவே, ஒருவன் பெற்ற செல்வத்தின் பயன் என்பது பிறருக்குக் கொடுப்பதுதான். தான் மட்டும் அனுபவிக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது என்கிறது இப்பாடல்.)

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாடப்பட்ட புறநானூறு இப்படித்தான் சொல்லுகிறது. அதே புறநாநூனூறில், கணியன் பூங்குன்றனும் -

Advertisement

‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்இனிதென மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; மின்னொடு
வானம் தண்துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும் அல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ என்றுதான் சொல்லுகிறார்.

இப்படி இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழரிடத்தில் - தங்களுடைய முன்னோர்களையும் தங்கள் இனம் காத்த வீரர்களையுமே வழிபட்ட தமிழரிடத்தில் - மூடநம்பிக்கைகள் எப்படி முளைவிட்டன? எல்லாம் கைபர்,போலன் கணவாய் வழியாகக் கொண்டுவரப்பட்ட விதைகளே காரணம். அது கண்டு பொறுக்காமல்தான்,
‘நட்டகல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொண என்று சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?’
என்று சித்தர் சிவவாக்கியர் சம்மட்டி கொண்டு தாக்கினார். ஆனாலும் என்ன பயன்?

‘கடவுளைக் கண்ணால் காண முடியாது; உணரத்தான் முடியுமென்றால் அப்புறம் எதற்கு இத்தனை கோவில்கள்? பூஜை, புனஸ்காரங்கள்? மதங்கள்? அவையெல்லாம் ஒரு சிறு கூட்டத்தின் வியாபாரத்திற்காகத்தானா? காசை உண்டியலில்; போடாமல் தட்டில் போடச் சொன்னது எதற்காக?’ என்னும் நியாயமான கேள்விகளுக்கு யாரிடமாவது பதில் இருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள்; கேட்கத் தயாராய் இருக்கிறோம்.

செ. இளங்கோவன்

Advertisement