காதலிக்க நேரமில்லை- விமர்சனம்!
பொதுவாக உலகில் கடந்த காலங்களில் பிறந்தவர்களை ஜென் எக்ஸ், மில்லினியல்கள், ஜென் இசட் என பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். அதாவது 1965 முதல்1980 வரை பிறந்தவர்கள் ஜென் எக்ஸ் என்றும், 1981 முதல் 1996 வரை பிறந்தவர்கள் மில்லினியல்கள் என்றும் அழைக்கப்படுவார்கள். அதேபோல 1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள் ஜென் இசட் என்று அழைக்கப்படுவார்கள். இதில் ஜென் இசட் தான் இளையவர்கள்.. அந்த வகையில் இன்றைய தேதியில் உலகம் முழுக்க சுமார் 200 கோடி பேர் Gen Z தலைமுறைதான். இவர்கள் பிறக்கும்போது உலகமே டெக்னாலஜியின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது. இவர்களால் எந்தச் சிரமும் இன்றி அலைபேசி, கணினிகளைக் கையாள முடியும். 'பாப்பாக்கு மூணு வயசுதான். ஆனா, ஆங்ரி பேர்ட்ஸ் அட்டகாசமா விளையாடுது’ எனப் பெற்றோர்கள் பெருமை பேசலாம். ஆனால், அது அந்தக் குழந்தைகளின் இயல்பு. தொழில்நுட்பத்தையே சுவாசிக்கும், தினம் புதுப்புது விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் தலைமுறையினர்... இவர்கள்தான். மல்ட்டி டாஸ்க்கிங், வயதுக்கு மீறிய முதிர்ச்சி, எதையும் எளிதில் கிரகிக்கும்தன்மை ஆகியவை இவர்களின் சிறப்பியல்புகள். 'பிராண்ட்’களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள்தான் சமூக வலைதளப் போக்கை நிர்ணயிப்பவர்கள்.இப்பேர்பட்டவர்களை குறி வைத்து ஒரு கதைக் களத்தை தேர்வு செய்து காதலிக்க நேரம்ல்லை என்ற டைட்டிலில் வழங்கியுள்ளார் டைரக்டர் கிருத்திகா உதயநிதி. அதிலும் தமிழ் சினிமா தொடத் தயங்கும் சமாச்சாரங்கள் ஏகப்பட்டவை இடம்பெற்றுள்ளன. குறிப்பாக தமிழில் இதுவரை யாரும் தொடாத ஓரினச் சேர்க்கை, விந்து தானம், தன்பாலின திருமணம் ஆகியவற்றை கேஷூவலாக விரவி ஹைடெக் பஃபே படைத்துள்ளார்.
அதாவது ஒரு ஆர்கிடெக்டாக பணிபுரியும் சித்தார்த்தின் (ரவி மோகன்) லவ்வருடன் நிச்சயதார்த்தம் நடக்க இருந்த சூழலில் காதலி வராமல் போனதால் நின்று போய் விடுகிறது. அதே சமயம் ஃப்ரண்ட் ஒருவரின் வற்புறுத்தலால் மருத்துவமனை ஒன்றில் விந்து தானம் செய்கிறார் ஹீரோ. இன்னொருபக்கம் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்ட தனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறியும் ஸ்ரேயா (நித்யா மேனன்) அப்செட் ஆகி அவரிடமிருந்து பிரிகிறார். இதனால் மனமுடைந்த நிலையில் இருக்கும் அவருக்கு திடீரென குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை துளிர்விடுகிறது.அதற்காக செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பி மருத்துவமனை செல்லும் அவருடைய வயிற்றில் சினிமாவுக்காக நாயகன் சித்தார்த்தின் உயிரணுவின் மூலம் குழந்தை உருவாகிறது. அதை அடுத்து வேலை விஷயமாக பெங்களூரு செல்லும் ஸ்ரேயா அங்கு தற்செயலாக சித்தார்த்தை சந்திக்கிறார். தன் குழந்தைக்கு தந்தை அவர்தான் என்று தெரியாமலேயே சித்தார்த் மீது ஸ்ரேயாவுக்கு ஈர்ப்பு உருவாகிறது. அபப்டி இவர்களுக்குள் இனம் புரியாத ஒரு பந்தம் ஏற்பட்டாலும் அது திருமணத்தில் முடியுமா அல்லது காதலாக மாறுமா என்பதெல்லாம் கேள்விக்குறியாகவே கடைசி வரை செல்கிறது. இதற்கு முடிவு தான் என்ன என்பதற்கு மாறுபட்ட கிளைமாக்சுடன் பதில் சொல்வதுதான் காதலிக்க நேரமில்லை படக் கதை.
சித்தார்த் என்ற ரோலில் ரவி மோகனும், ஷ்ரியா மாடர்ன் நேமுடன் நித்யா மேனன் இருவரும் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் லெவலை இரண்டு படிகள் உயர்த்தி விட்டனர். மொத்த படமும் இவர்கள் பெர்பார்மன்ஸ்தான் தாங்கி பிடிக்கிறது. ஆனால் இருவரில் நித்யா மேனன் ஸ்கோர் செய்து விடுகிறார். கிட்டத்தட்ட ஓகே கண்மணி படத்தில் வரும் கதாபாத்திரம் போல இருந்தாலும் தன்னுடைய பாணியில் சிறப்பாக நடித்துள்ளார். நாயகியின் நண்பியாக வரும் வினோதினி கேஷூவலாக சிரிக்க வைத்தும், உணர்வுபூர்வமான இடங்களில் எமோஷன்களில் ஸ்கோர் செய்தும் படவோட்டத்துக்கு வலு சேர்க்கிறார். செட் பிராபர்ட்டி யோகிபாபு முகபாவனைகளால் சிரிக்க வைக்க்க முயல்கிறார். அதே சமயம் தன்பாலின ஈர்ப்பினரை கேலி செய்யும் போக்கால வழக்கம் போல் வெறுப்பை சம்பாதித்து கொள்கிறார்.இவர்களை தவிர டிஜே பானு, லால், பாடகர் மனோ, வினோதினி ஆகியோர் டைரக்டர் சொன்னதை அப்படியே பிரதிபலித்து விட்டு போகிறார்கள். சித்தார்த், ஷ்ரியா மற்றும் அவரது மகன் மூன்று பேருக்கும் இடையில் நடக்கும் காட்சிகள் நன்றாக இருந்தது. படத்தில் நடித்திருந்த அந்த சிறுவனும் நன்றாக நடித்திருந்தார். ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் முறையான விளக்கம் கொடுத்துள்ளதால் அந்த கதாபாத்திரங்களின் மீது நாமும் டிராவல் செய்கிறோம்.
ஏ ஆர் ரகுமானின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை காதலிக்க நேரமில்லை படத்திற்கு ஒரு பக்க பலமாக அமைந்துள்ளது. அதிலும் ‘என்னை இழு இழு இழுக்குதடி...’ எனப் பாடல் முன்னரே அட்ராக்ட் செய்த நிலையில், பின்னணி இசையிலும் படத்துக்கு அதீதமான ரொமான்ஸ் மாயாஜாலம் காட்டி லவ் செய்ய வைத்து விடுகிறார். கேமராமேன் ஒளிப்பதிவாளர் கேவ்மிக் ஆரி புது டெக்னிக் எதையோ மிக்ஸ் செய்து வழங்கி படத்தைக் கவரச் செய்வதில் ஜெயித்து விடுகிறார்.
ஆனாலும் இந்த ஜென் Z -க்கு இந்த தலைமுறையினருக்குக் கட்டற்ற சுதந்திரம் கிடைப்பதால் மிகவும் குறைந்த வயதிலேயே இவர்கள் புகை பிடிப்பது, மது அருந்தும் போக்கெல்லாம் இருந்தாலும் இப்படத்தில் வரும் பெரும்பாலான கேரக்டர்களை குடிகாரர்களாக்கி இருப்பதும், ஏற்கெனவே புரியாத புதிராக நடமாடும் இத்தலைமுறையினருக்கான இப்படம் சராசரி ரசிகனை கவருமா என்பதுதான் சந்தேகம்..!
மொத்தத்தில் - காதலிக்க நேரமில்லை - வளரும் தலைமுறையின் வாழ்க்கை
மார்க் 3.5/5