விடுதலை 2- விமர்சனம்!
நம் நாட்டில் அரங்கேறிய நீதிக்கான கலகங்கள் யாவும் நியாயமானவை. சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான கலகம் என்ற வகையிலும், சொல்லளவில் புரட்சியும், செயலளவில் பதவி அரசியலுக்கு எதிரான கலகம் என்ற வகையிலும் நக்சல் இயக்கப் பிறப்புக்கு வரலாற்று நியாயம் உண்டு.இப்படி ஒரு வரலாற்று நியாயம் இருந்த படியால்தான் நக்சல்பாரி என்ற சிற்றூரில் தீப்பொறியாக எழுந்த இயக்கம் ஓரளவுக்கு இந்தியத் துணைக்கண்டமெங்கும் காட்டுத் தீயாகப் பரவிற்று எனலாம். அந்த உண்மையை நன்குணர்ந்த டைரக்டர் வெற்றி மாறன் ஏகாதிப்பத்தியம், வர்க்கம், முதலாளித்துவம், சர்வாதிகாரம், அடக்குமுறை, ஒடுக்குமுறை, ஜனநாயகம், சோஷலிசம் ஆகியவற்றை ஏட்டளவில் மட்டுமே அறிந்த இளம் தலைமுறையினர் புரட்சி என்றால் என்ன? அதன் பின்னணி என்ன? என்பதையெல்லாம் அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார். இதில் பேசியிருக்கும் அரசியல் மற்றும் காட்சிப்படுத்தியிருக்கும் சம்பவங்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் உண்மையில் நடந்ததாக இருந்தாலும், அவை தற்போதும் பல இடங்களில் ஏகப்பட்ட வடிவங்களில் நடந்துக் கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. அப்படி நடக்கும் அநீதிகளைக் கண்டு பொங்கி போராட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை வலியுறுத்தி சொல்லியிருப்பவர், இதற்காக ஆயுதப் போராட்ட வெற்றியெல்லாம் நிரந்தரம் அல்ல என்பதையும் அழுத்தமாக பதிவு செய்து தன் இயக்குநர் என்னும் பொறுப்புக்கு மீண்டும் மணிமகுடம் சூட்டி கொண்டுள்ளார்
அதாவது விடுதலை முதல் பாகத்தில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியார் விஜய் சேதுபதியை ஒரு கான்ஸ்டபிள் ரோலில் வரும் குமரேசன் என்கிற சூரி கைது செய்வதோடு முடிந்திருந்தது. மேலும் செகண்ட் பார்ட்டுக்கான லீடில் கைது செய்த விஜய் சேதுபதியை போலீசார் எவ்வாறு விசாரித்தனர் என்ற க்ளிம்சோடு வெள்ளைத் திரையான அப்படத்தின் பார்ட் டூ வில் விஜய் சேதுபதியை கைது செய்த போலீசார் சட்ட ஒழுங்கை காப்பாற்ற அவரை காட்டுக்குள் அழைத்து செல்கின்றனர். காட்டுக்கு நடுவே இருக்கும் போலீஸ் கேம்பில் அவரை அடைத்து வைக்க போலீசார் அழைத்து செல்லும் வழியில் விஜய் சேதுபதி தான் யார், தான் எதற்காக இந்த போராட்டத்தில் ஈடுபடுகிறேன், அவருடைய பின் வாழ்க்கை என்ன? போன்ற விவரங்களை கூறிக் கொண்டே காட்டில் பயணிக்கிறார். இதனிடயே அதேநேரம் அரசு அதிகாரிகள் இந்த விஷயத்தை எப்படியாவது மேலதிகாரிகளிடமிருந்தும், மீடியாக்களிடமிருந்தும் மறைப்பதற்கு போராடுகின்றனர். ஆனால் விஷயம் வெளியே கசிந்து விட போலீசார் ஒரு அதிரடி முடிவு எடுக்கின்றனர். அந்த அதிரடி முடிவு என்ன? வாத்தியார் விஜய் சேதுபதி இவர்களிடமிருந்து தப்பித்தாரா, இல்லையா? வாத்தியார் ரோலில் வந்த விஜய்சேதுபதியின் கொள்கை கோட்பாடு ஆகியவைகளின் நிலை என்னவானது? இவர்களுக்கு நடுவே சிக்கிக் கொண்ட சூரியின் நிலை என்னவானது? என்பதே விடுதலை பாகம் 2 படத்தின் கதை. அதிலும் ஒரே கதையை விஜய் சேதுபதி போலீஸூடம் சொல்வது போன்றும், அதே கதையை கான்ஸ்டபிள் சூரி தன் தாயாருக்கு லெட்டரில் வாய் விட்டு சொல்லியபடி எழுதி அனுப்புவது மாதிரி திரைக் கதையை நகர்த்தி இருக்கும் பாணியே பலே சொல்ல வைத்து விடுகிறது.
இந்த இரண்டாம் பாகத்தில் மெயினாக பெருமாள் வாத்தியார் ரோலில் வரும் விஜய் சேதுபதி கேஷூவலாக தனக்கே உரிய நடிப்பின் மூலம் அந்த கேரக்ட்ராகவே வாழ்ந்திருக்கிறார். குறிப்பாக காதல் காட்சிகளிலும், தன் சகாக்கள் இழந்த ஒருவரின் வலியை வெளிப்படுத்தக்கூடிய காட்சிகளிலும் வித்தியாசமான ஆக்டிங்கை வாவ் சொல்ல வைத்து விடுகிறார். அதிலும் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அப்பாவி பள்ளி வாத்தியார் ரோலில் ஆரமபித்து , கம்யூனிச இயக்கவாதி, தொழிற்சங்கவாதி, ஆயுதம் ஏந்தி போராடும் போராளி, தமிழர் மக்கள் படை தலைவர் என்று பல முகங்களை மிகச் சரியாகக் காட்டி ஸ்கோர் செய்கிறார். ஆனால் பிளாஸ் பேக் விஜய் சேதுபதி மேக் அப்பில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
விடுதலை 1-ல் பெருமாள் வாத்தியாரை பிடிப்பதற்காக உயிரையும் பணய வைத்து அதிரடி காட்டிய குமரேசனான சூரி, இந்த இரண்டாம் பாகத்தில் பெருமாள் வாத்தியார் யார்? என்பதை தெரிந்த நிலையில், தான் ஏங்கிய துப்பாக்கி கையில் கிடைத்தும் அதை பயன்படுத்த தயங்கும் மனநிலையை ரசிகனுக்கும் கடத்துவதில் ஜெயித்து உயர்ந்து விடுகிறார். போராட்டப் பெண்மணியாக வரும் கம்யூனிச போராளி மஞ்சு வாரியர் தனக்கு கொடுத்த வேலையை மிகச் சிறப்பாக செய்து கவனம் பெற்று இருக்கிறார்.உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களை சொந்தம் கொண்டாடும் பண்ணையார்களின் வக்கிர புத்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கருப்பன் ரோலும், அதில் கென் கருணாஸ் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பும் மிக சிறப்பு.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் கவர்ந்தாலும், வலுவான கதைக்கு ஸ்பீட் பிரேக்கராகவே அமைந்து விட்டது. அதே சமயம்,அவரது பின்னணி இசை மூலம் ஒவ்வொரு காட்சிகளையும் துள்ளி குதிக்க வைத்து விட்டார்.காதல் காட்சிகளில் நம்மை இதமாக வருடிச் செல்லும் ராஜா, போராட்டக்களம் மற்றும் சண்டைக்காட்சிகளில் பீஜியம் மூலம் தெறிக்க விடுகிறார். கேமராமேன் ஆர்.வேல்ராஜின் கேமரா மக்கள் மனிதர்கள் கால் படாத அடர்ந்த வனப்பகுதியின் ஆபத்தை வியக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறது. கென் கருனாஸின் சண்டைக்காட்சி முதல் அதிகாரிகளின் ஆலோசனைகள் வரை தனது ஒளிப்பதிவு மூலம் பிரமாண்ட மேஜிக் செய்திருப்பவர், போராளிகளுக்கும், காவல் படைக்கும் இடையே நடக்கும் இறுதி மோதல் காட்சியில் பனி படர்ந்த மலையை மிரட்டலாக கண்முன் கொண்டு வந்து அசத்தியுள்ளார்.ஆர்ட் டைரக்டர் ஜாக்கி, ஸ்டண்ட் டைரக்டர்கள் பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சிவா மற்றும் பிரபு, ஆடை வடிவமைப்பாளர் உத்தரா மேனன் என அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்க்களிப்பும் பெர்ஃபெக்ட்.
முன்னொரு சமயம் நிலவிய பண்ணை அடிமைகளாக மக்கள் அனுபவித்த கொடுமைகள், முதலாளிகளின் சுரண்டல், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை ஆகியவற்றுடன், அவற்றை எதிர்த்து குரல் கொடுத்த கம்யூனிசம் மற்றும் திராவிட கட்சிகளின் எழுச்சி பற்றி பேசி இருப்பதுடன் இப்போதும் நாடெங்கும் உள்ளசாதிய வன்கொடுமை, மனித உரிமை மீறல், போலீஸ் அராஜகம் மாதிரியான விஷயங்களைக் கோர்த்து வழங்கியுள்ள விடுதலை காலக் கண்ணாடி என்றே சொல்லலாம்..! அதே சமயம் வாய் வலிக்காமல் ஆழமாக மாறி மாறி கம்யூனிச கொள்கைகள் கொண்ட வசனங்களும், படத்தின் நீளமும் கொஞ்சம் உறுத்தல் என்பதும் உண்மை.
மொத்தத்தில் விடுதலை 2- வாவ்
மார்க் 4/5