சர்வதேச தியான தினம்!
நம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் முன்மொழிந்த தீர்மானத்தை ஏற்று டிசம்பர்21ம் தேதியை சர்வதேச தியான தினமாக அனுசரிக்க ஐ.நா.,பொது சபை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. உடல் மற்றும் மன நலனின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சர்வதேச தியான தினம் கொண்டாடப்படுகிறது. அதிலும் பலருக்கு உடலளவில் ஏற்படும் பிரச்னைகளைவிட உளவியல் ரீதியான பிரச்னைகள் அதிகமாகிக்கொண்டே செல்கின்றன. பணிச்சுமை, குடும்பச்சூழல், கடன் பிரச்னை, காதல் எனப் பல விஷயங்கள் மனஅழுத்தம், சோர்வு, அதீத கோபம் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. இவற்றுக்கெல்லாம் தீர்வாக, மனநலனை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும், மனதை அமைதிப்படுத்த வேண்டும், மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும் என இந்நாளில் ஆலோசனை முன்வைக்கப்படுகிறது.
உண்மையில் மனதை ஒருமுகப்படுத்தி பல சாதனைகளை புரிய உதவுகிறது தியானம். உதாரணமாக ஜெனிடிக் இன்ஜினியரிங்கில் ஜீன்களில் உள்ள விவரங்களை, நோய்க்குறிப்பை மாற்றியமைத்து நோயை நீக்கிக்கொள்ளலாம் . ஆயுள் விவரத்தை மாற்றியமைத்து ஆயுளை அதிகரித்துக்கொள்ளலாம். ஆனால் இத்தகைய மாற்றங்கள் நிகழ வேண்டுமென்றால் சில காலங்கள் எடுக்கும். அதுபோல செலவே இல்லாமல் மன எண்ணத்தாலேயே , ஆர்.என்.ஏ, டி.என்.ஏ பதிவுகளை மாற்றியமைத்து நமது சுபாவங்களையும் , ஆயுளையும் , ஆரோக்கியத்தையும் , அற்புத ஆற்றல்களையும் பெறுவதற்கு பெரிதும் உதவுகிறது தியானம்.அடக்கப்பட்ட மனம் நமது நண்பன் . அடங்காத மனம் நம் விரோதி . இன்று நாம் சந்திக்கும் பல பிரச்னைகளுக்கு காரணம் நம் மனம்தான். நமக்கு ஏற்படும் நோய்களுக்குக் காரணமும் ஆரோக்கியமற்ற எண்ணங்களைக் கொண்ட மனம்தான். எனவே முள்ளை முள்ளால் எடுப்பதுபோல , மனதை மனதால்தான் அடக்கமுடியும். இதற்கு நம் கையில் இருக்கும் ஒரே கருவி தியானம்.தியானம் நம் மனம் மற்றும் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் அதனை சரியான வழிகளில் செய்யவேண்டும் என்பதுதான் ஒரே சிக்கல். அதனை பலர் அறிவதில்லை. இதற்காக பிரத்யேக வகுப்புகள் சென்று பயிற்சி எடுக்க நேரமும் வசதியும் இல்லாதவர்கள் யோகா குருவாக இருப்பவர்கள் கூறுவதை கேட்டு கற்றுக்கொள்ளலாம்.
மனித மனம் அலைந்து திரியும் தன்மை கொண்டது. எண்ணங்கள் வருவதும் போவதும் இயற்கையானது. இந்த எண்ணங்களின் ஓட்டத்தை கையாளுவதற்கு ஆரம்பத்திலிருந்தே மனம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், எண்ணங்கள் மனதை முழுவதுமாக ஆக்கிரமித்து, கடுமையாக தாக்கும்போது, அவற்றைக் கையாள்வதற்கு மனது சிரமப்படுகிறது. இது தொடரும் போது ஒருவர் மனரீதியாக சோர்வடையலாம். தியானம் மனதை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் எந்த புயலையும் தாங்கும் வகையில் அதனை தயார்படுத்துகிறது. அமைதியான மனநிலையுடன், ஒருவர் கையில் உள்ள எந்த சவாலையும் சமாளித்து அமைதியை அனுபவிக்க முடியும்.
தியானத்தின் நான்கு நிலைகள் :
மனதை - மனதின் கவனத்தை (புத்தி ) ஒரே விஷயத்தில் அல்லது ஒரே பொருளில் செலுத்துவது முதல் நிலை . ஒரே விஷயத்தில் மனதை செலுத்தமுடியாதவர்களால் எதையும் சிந்திக்கவும் முடியாது , எந்தத் தகுதியையும் பெற முடியாது .
ஒரே விஷயத்தில் மனதைச் செலுத்தி அதில் முழுமையாக ஈடுபடுவது இரண்டாம் நிலை .இதனால் உலக விவகாரங்களில் வெற்றியை பெறலாம் .
நம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதை உணராமல் நாம் எடுத்துக்கொண்ட காரியத்தில் முழுமையாக ஒன்றிவிடுவது மூன்றாம் நிலையான மேதைத் தன்மையாகும் . விஞ்ஞானிகளும் , யோகிகளும் தாங்கள் மேற்கொண்ட காரியத்தில் ஒன்றி தங்களையே மறந்துவிடுவார்கள் . இதனால் இவர்களுக்கு எந்த பிரச்னையும் வராது . இதை சமாதி நிலை என்பார்கள் .
கடைசி நிலை பேராற்றலைப் பெறுகிறது . எதிலும் ஆட்சி செய்யும் ஆற்றல் பெற்றது .
இனி மனதை ஒருநிலைப்படுத்தும் தியானத்தை வீட்டிலேயே செய்யப்பழகுவதற்கான எளிய வழிகாட்டல் இதோ...!
ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 நிமிடங்களில் ஆரம்பித்து அதிகபட்சம் 2 மணி நேரம் வரைகூட தியானம் மேற்கொள்ளலாம். ஆனால், நேரத்தை படிப்படியாக அதிகரிக்க வேண்டும். தியானம் செய்வது என்று முடிவெடுத்தாலும் அதற்குரிய சில சிறிய வழிமுறைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்...
🧘♂️1. இடம் தேர்வு செய்தல்:
- தியானம் செய்வதற்கு மிக முக்கியத் தேவை, இடம். வீட்டில் உங்களுக்குப் பிடித்த இடத்தை, தொந்தரவில்லாத, அமைதியான, இடத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
🧘♂️2. நேரத்தை முடிவு செய்தல்:
- எவ்வளவு நேரம் நீங்கள் தியானம் மேற்கொள்ள இருக்கிறீர்கள் என்பதை தெளிவாக முடிவு செய்து கொள்ளவும். இப்படி முடிவு செய்யும் பட்சத்தில் மனது அதற்குத் தயாராக முயற்சி மேற்கொள்ளும்.
🧘♂️3. உங்கள் உடலைக் கவனியுங்கள்:
- நீங்கள் ஒரு நாற்காலியில் உங்கள் கால்களைத் தரையில் ஊன்றி உட்காரலாம். அல்லது சம்மணம் இட்டோ, உங்களுக்கு எப்படி உட்காரத் தோன்றுகிறதோ, உட்கார முடிகிறதோ அந்த நிலையில உட்கார்ந்துகொள்ளலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிலையில் குறிப்பிட்ட நேரம் வரை தொடர்ந்து இருக்க முடியுமா என்று பார்த்துக்கொள்ளுங்கள். அமரும் நிலை உங்களுக்கு வசதியாக இருந்தால்தான் தியானம் மேற்கொள்ள முடியும்.
🧘♂️4. மூச்சுப் பயிற்சி:
- இடம் பார்த்து, உங்களுக்கு வசதியான நிலையில் அமர்ந்த பின் முதலில் மூச்சுப்பயிற்சியை மேற்கொள்ளவும். அது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.
🧘♂️5. மனதை ஒருநிலைப்படுத்துங்கள்:
- மூச்சுப்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்போது, மனம் அலைபாய்வதை உணர முடியும். மூச்சுப்பயிற்சியைத் தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் செய்து வாருங்கள். அப்போது உங்களுடைய சிந்தனையை மூச்சை வெளியிடுவதிலும், உள் இழுப்பதிலும் செலுத்தி மனதை ஒருநிலைப்படுத்துங்கள்.
🧘♂️6. தியானம் ஆரம்பம்:
- நடந்து முடிந்த விஷயங்கள், உங்களுக்குள் இருக்கும் கவலைகள் என எதையும் நினைக்காமல் இருக்க முயலுங்கள். பிடித்த ஒரு மந்திரச் சொல்லை மனதுக்குள் மீண்டும் மீண்டும் சொல்லியபடியே மனதை ஒருநிலைப்படுத்துங்கள். கைவிரல்களில் ஏதாவது ஒரு முத்திரையை வைத்தபடி தியானத்தை மேற்கொள்ளலாம். விரும்பினால் மெல்லிய இசையை ஒலிக்க விடலாம்.
தினமும் இதுபோல் செய்துவர, கொஞ்சம் கொஞ்சமாக மனது தியானத்துக்குப் பழக ஆரம்பிக்கும். தொடர்ந்து செய்துவர, தியானம் வசப்படும்.
🧘♂️அதன் முத்தாய்ப்பாக ஐந்து புலன்களை அடக்கலாம்
ஆம்.. இறுதியாக, நீங்கள் உண்மையிலேயே தியானம் செய்ய விரும்பினால், முதலில் உங்கள் வாழ்க்கைத் தேரின் ஐந்து குதிரைகளை, அதாவது ஐந்து புலன்களை அடக்க வேண்டும். இந்த ஐந்து குதிரைகள் உங்கள் வாழ்க்கையை வெவ்வேறு திசைகளில் இழுத்து செல்லும். உங்களால் உடல், மனம் மற்றும் அகங்காரத்தின் ஆசைகளை வெல்ல முடிந்தால், நீங்கள் மனதை அமைதிப்படுத்தி, ஆசைகள், எண்ணங்கள் மற்றும் ஏக்கங்கள் உங்களைத் தாக்கி மூழ்கடிக்காத உணர்வு நிலையை அடைய முடியும். இந்த நிலையில் , எண்ணங்கள் முற்றிலுமாக அகற்றப்படுவதில்லை, மாறாக, அவைகள் ஒவ்வொன்றாக தனியாக வருகின்றன, ஒரு பரந்த கடலில் தனித்துச் செல்லும் மீன்கள் போல. அதுதான் தியானத்தின் நிலை!
வாத்தீ அகஸ்தீஸ்வரன்🧘♂️