அம்பேத்கர் எனும் எரிச்சல்!
இந்திய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டு நிறைவடைகிறது. வேறெப்போதையும் விட அது இன்று அதீத அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. அது குறித்து விவாதியுங்கள் என்றால் எப்போதும் போல விவாதத்தை 'நேரு என்ன செய்தார் தெரியுமா ?' என்று கடத்திப் போய் விடுகிறார்கள். கூடுதலாக அம்பேத்கரையும் இப்போது வம்புக்கு இழுத்திருக்கிறார்கள் . ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த ஒரு குடியரசு தலைவர் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு அழைக்கப்படாத சூழல் தான் இன்றும் நிலவுகிறது. 75 வருடங்களுக்கு முன் எப்படி இருந்திருக்கும் ?. சனாதன மனநிலைகள் பாரபட்சம் பாராமல் எங்கும் பரவி இருந்த காலம். அரசியலிலும் , உயர் அரசு பதவிகளிலும் கணிசமான கன்சர்வேடிவ் மேல்சாதியினரே கோலோச்சிய காலம் .
இந்த சூழலில் அம்பேத்கர் எவ்வளவு எதிர்ப்புகளையும் தடைகளையும் எதிர்கொண்டிருப்பார் என்று யோசிக்கவே திகைப்பாக இருக்கிறது. நேருவின் முதல் அமைச்சரவையில் காங்கிரஸ் மட்டுமல்லாது எல்லா தரப்புக்கும் இடம் இருந்தது அம்பேத்கர் உட்பட . சட்ட அமைச்சராக அவர் பொறுப்பு ஏற்றதில் காந்தியின் பங்களிப்பும் முக்கியமானது . அந்த பதவிக்கு அம்பேத்கரை தவிர பொருத்தமான நபர் இல்லையென அனைவருமே அறிந்திருந்தனர் . அன்றைய அரசியலில் ,ஒருமைப்பாட்டு தேசியம் பேசும் குரல்கள் ஒரு பக்கம் என்றால் , இடதுசாரி அரசியல் பேசும் குரல்கள் மற்றொருபுறம் இருந்தன இந்த சுழலில் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டை முன்னிறுத்தி பேசிய அம்பேத்கரின் குரல் தனித்து ஒலித்தது . அவரின் பல நிலைப்பாடுகள் இந்த கோணத்தில் இருந்தே முன்வைக்கப்பட்டன.
காஷ்மீர் விஷயத்தில் அவர் மக்களிடம் கருத்துகணிப்பு நடத்தி அதிலிருந்து முன்செல்லும் நோக்கை முன்வைத்தார் , ஆர்டிகிள் 370 நீக்கவேண்டும் என்ற அவர் வலியுறுத்தியதில்லை . அவரின் கோணம் அங்கு தேவையில்லாத பிரச்சனைகளை நீட்டித்துக்கொண்டே போனால் அது அனாவசியமான ராணுவ செலவில் முடியும் என்பதாக இருந்தது. மக்களுக்கு அந்தப் பணம் செலவிடப்பட வேண்டும் என்பதில் அவர் கவனம் கொண்டிருந்தார் . இந்துத்துவத்தின் ஆபத்தை அன்றே உணர்ந்து தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார் . இந்துமஹாசபா ஆரெஸ்செஸ் போன்ற அமைப்புகளுடன் கட்டாயம் எந்த விதமான கூட்டும் உறவும் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் . அதை தேர்தல் வாக்குறுதியாகவும் வைத்துக்கொண்டார்.
இதையெல்லாம் தாண்டி அம்பேத்கர், நேரு அமைச்சரவையில் இருந்து விலகிக் கொள்ள முக்கிய காரணம் Hindu Code Bill ஐ நிறைவேற்ற முடியாமல் போனதே . இந்தியா சுதந்திரம் பெறவதற்கு முன்னரே இந்த சட்ட சீர்திருத்தம் குறித்த குரல்கள் எழ ஆரம்பித்துவிட்டன . 1941 ல் பி,என்.ராவ் அவர்களை தலைவராகக் கொண்டு 'இந்து சட்டக் கமிட்டி' ஆரம்பிக்கப்பட்டது . அந்த கமிட்டி அளித்த பல பரிந்துரைகள் பின்னர் அம்பேத்கர் முன்னெடுத்த Hindu code Bill முன்வரைவிலும் இடம்பெற்றன . இந்த மாற்றங்களுக்கு காங்கிரஸின் ஒரு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தது உண்மை என்றாலும் சமரசங்களுடன் இதை நிறைவேற்றவே நேரு முயன்றார். ஆனால் சங் பரிவார் அமைப்புகளிடம் இருந்து இதற்கான எதிர்ப்பு பலமாக இருந்தது . இந்த மசோதாவை எதிர்க்க என்றே ஒரு தனி அமைப்பு உருவாக்கப்பட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன .இந்த எதிர்ப்பை 'தர்ம யுத்தம்' என்றே அவை முன்வைத்தன .
பாராளுமன்றத்திலும் இந்த மசோதாவுக்கு பல தடைகள் உருவாகின . அதற்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாகவே அம்பேத்கர் ராஜினமான செய்தார். இந்த சூழலில் நேரு வேறு எதுவுமே செய்திருக்க முடியாது எனபதே நிதர்சனம். நேரு பாகிஸ்தானுடன் , 1950 ல் செய்து கொண்ட 'லியாகத் - நேரு' உடன்படிக்கை , Hindu Code Bill போன்ற விஷயங்கள் மதவாத தேசியத்தை ஆதரிப்போருக்கு அதிருப்தியை உண்டாக்கியிருந்தது . அம்பேத்கர் ராஜினாமா செய்த சில மாதங்களுக்குள் இன்றைய பாஜகவின் முன்னோடியான ஜன சங்க ஆரம்பிக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
***
அன்றிருந்த சூழல் வேறு ,அம்பேத்கர் தனியே போராடினார் . எண்பதுகளில் தலித் மக்களிடையே பரவலான அரசியல் விழிப்புணர்வு உருவாக ஆரம்பித்த பின் தலித் அமைப்புகள் , அரசியல் கட்சிகள் என்று மக்கள் திரள ஆரம்பித்தனர் . இந்த மைப்புகளில் வலுவான மையப் புள்ளியாக அம்பேத்கர் இயல்பாகவே உருவாகி வந்தார்.
1990 ல் அமலுக்கு வந்த மண்டல் கமிஷன் பரிந்துரைகள் இந்திய அரசியலின் போக்கையே மாற்றின .சமூக நீதி என்பது வெறும் பேச்சாக இல்லாமல் , சம வாய்ப்பு , அதிகார பங்களிப்பை என்பதை நோக்கி மெல்ல நகர ஆரம்பித்தது. இதற்கு ஒரு எதிர்வினையாக ஆரம்பித்ததே அத்வானியின் ரத யாத்திரை .எப்போதெல்லாம் இந்தியாவில் ஒரு சமூக நகர்வு ( social mobility ) நிகழ ஆரம்பிக்கிறதோ அப்போதெல்லாம் அதை முடக்க நினைக்கும் தரப்பும் மேலே எழ ஆரம்பிக்கும் .அந்த மோதல் தான் நாம் இப்போது பார்த்துகொண்டிருப்பது.
ஒரு சமூக செயல்பாட்டாளராக , அரசியலாளராக , அறிவுஜீவியாக திகழ்ந்த அம்பேத்கர் இந்த புள்ளிக்குப் பின் காந்தியைப் போல ஒரு ஐகனாகவும் (Icon ) மாறிவிட்டதை நாம் புரிந்துகொள்ளலாம் .அதனால் தான் இன்று அம்பேத்கர் அம்பேதக்ர் என்ற குரல் பல திசைகளில் இருந்தும் எதிரொலிக்கிறது. அம்பேத்கர் எதை கடுமையாக எதிர்த்தாரே அந்த தரப்புக்கு இந்த குரல் எரிச்சலை தருகிறது என்பதில் வியப்பும் இல்லை !