பணம் சம்பாதிக்கும் பண்ணையார்களை அரசியலை விட்டே விரட்டுவோம் - விஜய்!
எப்போது பார்த்தாலும், பணம், பணம் என்ற மனநிலை கொண்ட பண்ணையார்களை அரசியலை விட்டே ஜனநாயக முறையில் அகற்றுவோம் என்று த.வெ.க. 2ம் ஆண்டு விழாவில் நடிகர் விஜய் ஆவேசமாக பேசினார்.பாசிசமும், பாயாசமும் அதாவது நமது அரசியல் எதிரியும், கொள்கை எதிரியும் பேசி வைத்துக்கொண்டு மாற்றிமாற்றி சமூகவலைதளத்தில் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் காட்டமாக கூறினார்.
மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட பிரசாந்த் கிஷோருக்கு ஆங்கிலத்தில் வாழ்த்து தெரிவித்த விஜய், விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் தனது பாணியில் வணக்கம் தெரிவித்து பேசினார்.
விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் பேசியதாவது:–
1967, 1977 தேர்தல்களை போல ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நாங்கள் 2026 தேர்தலில் உருவாக்குவோம். இந்த அரசியலை பொறுத்தவரை யார், யாரை எதிர்ப்பார்கள் என்று கணிக்கவே முடியாது. இங்கு நிரந்தர நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அது ஜனநாயக உரிமை என்று சொல்வார்கள்.ஆனால் மக்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்துப் போன ஒருவன் அரசியலுக்கு வருகிறான் என்றால், அதை நல்லவர்கள் எல்லாம் வரவேற்பார்கள். ஒரு சிலருக்கு மட்டும் கொஞ்சம் எரிச்சல் வரத்தானே செய்யும். இதுவரை நாம் சொன்ன பொய்யை நம்பி மக்கள் நமக்கு ஓட்டு போட்டார்களே, ஆனால் இவன் சொல்வது மக்கள் மனதுக்கு நெருக்கமாக உள்ளதே, இவனை எப்படி காலி செய்யலாம் என சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.
அரசியல் என்றாலே வித்தியாசமானதுதான். யார் யாரை எதிர்ப்பார்கள் என்று தெரியாது. ஒருவர் கட்சி ஆரம்பித்தால் எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். பயமில்லாமல், பதற்றமில்லாமல் எதிர்ப்புகளை இடது கையில் கையாண்டு கொண்டு இருக்கிறோம். நம்முடைய தமிழக வெற்றிக் கழகம் முதலாவது ஆண்டைக் கடந்து தற்போது 2வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அரசியல் கட்சிக்கு அடிப்படை தான் பலமே.
பண்ணையார்களை விரட்டுவோம்
நம்முடைய மாவட்ட நிர்வாகிகள் எல்லாருமே இளைஞர்களாக இருக்கிறார்கள் என்று சொல்கின்றனர். அண்ணா, எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது அதில் இருந்தவர்கள் இளைஞர்கள்தான். அதுதான் வரலாறு. கட்சி நிர்வாகிகள் எல்லாருமே சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்கிறார்கள். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான் பெரிதாக சாதித்திருக்கிறார்கள். நம் கட்சி பண்ணையார்களுக்கான கட்சி இல்லை. அந்த காலத்தில் பண்ணையார்கள் தான் பதவியில் இருப்பார்கள். ஆனால் இப்போது பதவியில் இருப்பவர்கள் பண்ணையார்களாக மாறிவிடுகிறார்கள். மக்களின் நலனை பற்றியோ, நாட்டின் நலனை பற்றியோ கவலையில்லாமல் வெறும் பணம் பணம் மட்டும்தான். இப்படிப்பட்ட எண்ணம் கொண்ட பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றுவதுதான் நம்முடைய முதல் வேலை.
விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடத்தப் போகிறோம். தமிழக வெற்றிக் கழகம் முதன்மை சக்தி என அனைவருக்கும் காட்டுவோம்.
தி.மு.க., பா.ஜ.க. விளையாட்டு
புதிய பிரச்னை ஒன்று கிளப்பி விட்டிருக்கிறார்கள். மும்மொழிக் கொள்கை. இந்தத் திட்டத்தை இங்கே செயல்படுத்தவில்லை என்றால் நிதி தர மாட்டேன் எனக் கூறுகின்றனர். கொடுக்க வேண்டியது மத்திய அரசின் வேலை. கேட்க வேண்டியது மாநில அரசின் கடமை. பாசிசமும் பாயாசமும் இணைந்து எல்கேஜி குழந்தைகள் போல சண்டையிட்டுக் கொள்கின்றனர். ஒருவர் அரசியல் எதிரி இன்னொருவர் கொள்கை எதிரி. நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது இருவரும் அடித்துக்கொள்வது போல ஹேஷ்டேக் போட்டு விளையாடி கொண்டிருக்கின்றனர்.
சுய மரியாதைக்கான ஊர் நமது ஊர். அனைத்து மொழிகளையும் மதிப்போம். எந்த மொழி வேண்டுமோ தனிப்பட்ட முறையில் கற்றுக்கொள்வோம். வேறு மொழியை வலுக்கட்டாயமாக திணித்தால் எப்படி புரோ? மனித உரிமைக்கு எதிராக செயல்பட்டால் இட்ஸ் வெரி ராங்க் புரோ. மும்மொழி கொள்கையை உறுதியாக எதிர்ப்போம். நல்லதே நடக்கும்.. வெற்றி நிச்சயம்.
இவ்வாறு விஜய் தெரிவித்தார்.