சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகள் கராத்தே பயிற்சியில் உலக சாதனை!
சென்னை மாநகராட்சியில் உள்ள 417 சென்னை பள்ளிகளில் 29 பள்ளிகளில் 1500 மாணவியருக்கு அவர்களின் விருப்பத்துடன் கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சியானது, 10 பயிற்றுநர்களைக் கொண்டு 4 மாதங்களாக வழங்கப்பட்டு வருகிறது.உலக தற்காப்புக் கலை வரலாற்றில் முதல்முறையாக நமது சென்னை பள்ளி மாணவியர் 3 உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். முதல் சாதனையாக, 4 மாத பயிற்சியில் (White – Green) முதல் நிலை வெள்ளைப் பட்டையில் இருந்து, மூன்றாம் நிலை பச்சை பட்டைக்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளனர்.
இரண்டாம் சாதனையாக, ஒரே நேரத்தில் 1500 மாணவியர் சுமார் 1000 குத்துகள் என மொத்தம் 15 லட்சம் குத்துகள் குத்தி தங்களின் மனவலிமையையும், உடல் வலிமையையும் நிரூபித்து சாதனை படைத்துள்ளனர்.
மூன்றாம் சாதனையாக, பெண்களின் கரங்களால் படைக்கவும் முடியும், தடைகளை உடைக்கவும் முடியும் என்பதை நிரூபித்துக் காட்டும் வகையில் ஒரு நொடியில் ஒரே அடியில் 3000 ஓடுகளை தூள் தூளாக்கி சாதனை படைத்துள்ளனர்.இந்த அதிரடி உலக சாதனைகளை உலக அரங்கில் முதலில் முயற்சி செய்தது நமது சென்னை பள்ளி மாணவியர்களே. இந்த 3 உலக சாதனை நிகழ்வுகளை “சோழன் உலக சாதனைப் புத்தகம் (The Cholan Book of World Record)” உலக சாதனைகளாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்நிகழ்ச்சியில், இணை ஆணையாளர் (கல்வி) ஜெ.விஜயா ராணி, மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் குமார், நிலைக்குழுத் தலைவர் (கல்வி) பாலவாக்கம் த.விசுவநாதன், மாமன்ற உறுப்பினர்கள் பரிதி இளம்சுருதி, ஏழுமலை, சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் நீலமேகம், ஆர்த்திகா நிமலன், பாஸ்கரன், முரளி, செல்வராஜ், சுப இளவரசன், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.