தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பழங்குடியினரின் விடுதலை நாயகன் பிர்சா முண்டே!

06:17 AM Nov 15, 2024 IST | admin
Advertisement

வ.15-ம் தேதி பழங்குடி விடுதலை போராளிகளை நினைவுகூரும் நாளாக, அனுசரிக்கப்பட்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்நாளில்தான் ’பகவான்’ என்று வாஞ்சையோடு அழைக்கப்படும் பழங்குடியின புரட்சியாளர் பிர்சா முண்டா பிறந்தார். நவ.15 முதல் 22 வரை பிர்சா முண்டாவையும் பழங்குடியினரின் விடுதலை வேட்கையையும் போற்றும் விதமாகப் பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Advertisement

பழங்குடியின சமூகத்தினர் முன்னெடுத்த போராட்டங்களும் புரட்சிகரமான இயக்கங்களும் வீரமும் ஒப்பற்ற தியாகமும் நிறைந்தவை. அவர்கள் கிளர்ந்தெழுந்து, நாடெங்கும் போராட்டத்தில் இறங்கி இந்திய விடுதலையில் கணிசமான பங்களிப்பை ஆற்றியுள்ளனர். ஆனால், பொதுச் சமூகத்துக்கு இன்னும் பழங்குடியினரின் பங்களிப்பு கொண்டு சேர்க்கப் படவில்லை. கோண்ட் பழங்குடி போராளி கொமுரும் பீம் பற்றியோ, முண்டா அல்லது கோல் பழங்குடியினப் போராளியான பிர்சா முண்டாவைப் பற்றியோ அல்லது இவர்களைப் போன்ற பலரைப் பற்றியோ பாடப் புத்தகங்களில் இதுவரை பதியப்பட்டதாகத் தெரியவில்லை.

Advertisement

ஓர் இளைஞர் அதுவும் 6 ஆண்டுகளில் தம் மண்ணின் மைந்தர்களுக்கு, ‘மண்ணின் தந்தை’யாக (‘தர்த்தி அபா’) உருவெடுத்த பெரும்புரட்சியாளர் பிர்சா முண்டா. ஜார்க்கண்ட் மாநில குந்தி மாவட்டத்தில், 1875 இதே நவம்பர் 15 அன்று பிர்சா முண்டா பிறந்தார். தனது 25 வயதுக்குள் நாட்டு விடுதலைக்காகவும் நிலச்சுவாந்தாரர்களிடம் சிக்குண்டு கிடந்த பழங்குடியின மக்களின் அடிமைத்தளையைத் தகர்த்தெறியவும் பெரும் புரட்சியை முன்னெடுத்தார்.

உள்நாட்டு ஜமீதாரர்கள் மற்றும் நிலப்பிரபுக்களின் பிடியில் மாட்டிக் கொண்டு, தங்களது உழைப்பை தாரைவார்த்தே மடிந்த பழங்குடியின மக்களை மீட்க, ‘உழைப்பவனுக்கே நிலம் சொந்தம்’ என்று போர்க்குரல் எழுப்பினார். ஆங்கிலேயரின் காலணி ஆதிக்கத்தில் மதிமயங்கி கிடந்த இந்தியர்களுக்கு மத்தியில், ”தங்கள் தேசத்தை தாங்களே ஆள்வோம்!” என்று முஷ்டியை உயர்த்தினார்.

தனது 19 வயதிலேயே அரசியல் விடுதலைக்காகவும் சமூக விடுதலைக்காகவும் போர்க்கொடி தூக்கினார். காட்டில் பயிரிடும் உரிமைக்கான வரி நிலுவையைத் தள்ளுபடி செய்யக் கோரி ஆர்ப்பாட்டப் பேரணியை நாக்பூரில் அவர் நடத்தியதே, நாட்டின் பழங்குடிகளின் முதல் உரிமைப் போராட்டம் என்று அடையாளம் காணப்படுகிறது. அவரது தலைமையின்கீழ் பழங்குடி வீரர்கள் அதிரடி தாக்குதலில் ஈடுபட்ட போது, பிரிட்டிஷ் படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கொடுஞ்சிறையில் சித்தரவதை செய்யப்பட்டவர், 25 வயதில் தன் மண்ணின் மைந்தர்களுக்காக மாண்டார்.

1895-லிருந்து 1900 வரை ஆங்கிலேயரை எதிர்த்து பிர்சா முண்டா செய்த கலகம், இன்றும் முந்தாரி கிராமிய பாடல்கள் மற்றும் கதைகளின் வழியாகப் போற்றப்படுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். முழுமையான கிளர்ச்சி என்று பொருள்படும் ’உல்குலான்’ போராட்டத்தை, பிர்சா முண்டா முன்னெடுத்தது குறித்த வரலாற்றுப் பதிவு 1920-கள்வரை பதிவு செய்யப்படவில்லை. பிரிட்டிஷ் அதிகாரிகளோ, கிறிஸ்தவ அமைப்புகளோ, இந்தியச் சமூக அறிஞர்களோ பிர்சா முண்டா குறித்து எழுதவில்லை. ஆனால், தனது 25 வயதுக்குள் பிர்சா உருவாக்கிய இளையோர் எழுச்சிப் படையினர், செவிவழி செய்தியாக பிர்சாவின் வீரதீரத்தை அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தினர். அவர்களில், பர்மி முண்டா போன்ற சிலர் எழுத்து வடிவிலும் பிர்சா குறித்து எழுதியதாகச் சொல்லப்படுகிறது. அதன் பிறகு, 1949-லிருந்து புத்தக வடிவில் பிர்சாவின் வரலாறு வெளிவரத் தொடங்கியது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழில் ‘பிர்சா முண்டா’ என்ற தலைப்பிலேயே புத்தகம் வெளிவந்தது. இப்புத்தகத்தை எழுதியவர் பிஹார் மாநில ஐஏஎஸ் அதிகாரி கே. சுரேஷ் சிங். இவர், பிர்சா முண்டா குறித்து தனது முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்து முடித்தவர். இந்திய மானுடவியல் ஆய்வு நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பு வகித்தவர். பிஹார் கிராமவாசிகளின் வாய்மொழி இலக்கியத்தை 10 ஆண்டுகாலத்துக்கும் மேலாகச் சேகரித்து, மேலும் ஆதாரங்களைத் திரட்டி அதன் அடிப்படையில் ஆராய்ச்சி மேற்கொண்டு, பிர்சா முண்டாவின் வாழ்க்கை சரிதத்தை 1966-ல் நூலாக வெளியிட்டாராக்கும்

நிலவளம் ரெங்கராஜன்.

Tags :
Birsa MundaIndian independence movement.Munda tribe.tribal independence activistபிர்சா முண்டா
Advertisement
Next Article