பூதான இயக்க பிதாமகர் வினோபா பாவே நினைவு நாள்!
வினோபாஜி என இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்பட்ட வினோபா பாவே, இந்திய பூமிதான இயக்கத்தின் தந்தை, இந்தியாவின் தேசிய ஆசிரியர், எழுத்தாளர், சிந்தனையாளர், அறப்போராளி மற்றும் மனித உரிமை ஆர்வலர். இந்தியாவின் மற்றொரு மகாத்மாவாக உலகத்தவரால் போற்றப்பட்டவர். மகாத்மா காந்தியின் ஆன்மீக வாரிசாகவும் கருதப்படுபவர். காந்தியம் என்பது சாத்தியமான நடைமுறையே என்பதை நிரூபித்துக் காட்டியவர்களில் முதன்மையானவர் ‘பூதான இயக்க’த்தின் தந்தை ஆசார்ய வினோபா பாவே. “காந்தியத்தை என்னைவிட நன்கு புரிந்துகொண்டவர்” என்று காந்தியாலேயே பாராட்டப்பட்டவர் வினோபாஜி.
விநாயக் நரகரி பாவே (Vinayak Narahari Bhave) என்ற இயற்பெயரைக் கொண்ட வினோபா பாவே, இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் காகோடே (Gagode) எனும் கிராமத்தில் ஒரு பக்தியுள்ள இந்துக் குடும்பத்தில் 1895ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி பிறந்தார். 1918ம் ஆண்டில் இளம் வயதிலேயே இவர் தனது தாய் ருக்மினி தேவியை இழந்தார். இவர் ஒருமுறை தனது தாயைப் பற்றிச் சொல்லிய போது, “தன்னைப் பக்தியிலும் ஆன்மீகத்திலும் உருவாக்கியதில் தனது தாய் ஆற்றிய பங்குக்கு வேறு எதுவுமே ஈடாகாது” என்று கூறியிருக்கிறார்.
இளம் வயதிலேயே மகாராஷ்டிர சித்தர்கள், சிந்தனாவாதிகளின் நூல்களைப் படித்து அறிவைப் பெருக்கிக்கொண்ட விநாயக்குக்குக் கணிதம் மிகவும் பிடிக்கும்.
ஆனால், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது நாட்டின் நிலையை எண்ணி மன அமைதியை இழந்து, சாமியாராவதற்காக காசிக்குச் சென்றார். காசியிலேயே இருந்து சாமியாராவதா, கல்கத்தா சென்று புரட்சி வீரனாகிவிடுவதா என்று 20 வயது விநாயக்கின் மனதில் போராட்டம். ஒரு நாள், செய்தித்தாளை வாங்கிப் பார்த்தால், காசி இந்து சர்வகலாசாலையில் காந்தி ஆற்றிய உரை கண்ணில் படுகிறது. வாசிக்க வாசிக்க அவருக்கு வழி புரிந்துவிட்டது. காசியும் இல்லை, கல்கத்தாவும் இல்லை. இனி நாம் போக வேண்டிய இடம் அண்ணலின் திருவடி நோக்கி என்று அவரிடமே 7.6.1916-ல் அடைக்கலம் புகுந்தார்.
இவரைப் போலவே இவரது இரண்டு சகோதரர்களும் (பால்கோபா பாவே, சிவாஜி பாவே) திருமணம் செய்து கொள்ளாமல் சமூகநலப் பணிக்குத் தங்களை அர்ப்பணித்திருந்தார்கள். இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் காந்திஜியோடு இணைந்து செயல்பட்ட வினோபா பாவே, 1932ம் ஆண்டில் சிறை சென்றார். அந்தச் சிறை வாழ்வில் தன்னோடு இருந்த மற்ற கைதிகளுக்கு மராட்டியத்தில் கீதை சொற்பொழிவுகள் ஆற்றினார். இவர் நிகழ்த்திய மிகவும் உன்னதமான இந்த உரைகள் பின்னாளில், “கீதைச் சொற்பொழிவுகள்” என்ற பெயரில் புத்தகமாக வெளி வந்தன. பின்னர் இப்புத்தகம் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பல மொழிகளில் வெளியிடப்பட்டன. மேலும், கிறிஸ்தவப் போதனைகளின் சாரம், குரான் புனித நூலின் சாரம், கல்வி பற்றிய சிந்தனைகள் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.
வினோபா பாவே விடலைப் பருவத்தில் எடுத்த கன்னிமை உறுதிமொழியையும் அது குறித்தக் கோட்பாடுகளையும் கண்டு காந்திஜி மிகவும் வியந்து மதித்தார் எனச் சொல்லப்படுகிறது. சாதாரண ஒரு கிராமத்தவராக வாழ்ந்த வினோபா பாவே, தான் எதிர்கொண்ட பிரச்சனைகளுக்கு ஆழமான ஆன்மீகத்தால் தீர்வு காண முயற்சித்தார். இதுவே அவர் சர்வோதய இயக்கத்தை உருவாக்கக் காரணமானது. தேசப் பிரிவினையால் புண்பட்ட மக்களின் மனப் புண்களை ஆற்றவும் மக்களுக்குத் தேவைப்படும் கல்வி, தொழில், சுகாதாரம் ஆகியவற்றை அளிக்கவும் சர்வோதயத் தொண்டர்கள் புறப்பட்டனர். தங்கம், பணம் ஆகியவற்றைச் சம்பாதிக்கும் ஆசையை மக்கள் துறக்க வேண்டும் என்பதற்காக ‘காஞ்சன் முக்தி’என்ற இயக்கத்தை வினோபா பாவே 1950-ல் தொடங்கினார்.
1951-ல் தெலங்கானா பகுதியில் போச்சம்பள்ளியில் அவருடைய பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்த தாழ்த்தப்பட்ட மக்களிடம், அவர்களின் முக்கியத் தேவை என்ன என்று வினோபா கேட்டார். விவசாயம் செய்யத் தங்களுக்கு 80 ஏக்கர் நிலம் வேண்டும் என்றார்கள். “இதற்கு உங்களுடைய பதில் என்ன?” என்று கிராமத்தாரிடம் கேட்டார் வினோபா. “என்னுடைய 100 ஏக்கர் நிலத்தைத் தருகிறேன்” என்று ராமச்சந்திர ரெட்டி என்ற நிலச்சுவான்தார் அறிவித்தார். வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்த வினோபா பாவே, ‘பூமிதான இயக்க’த்தைத் தொடங்கினார். எதிர்பாராத வகையில், அன்றாடம் 200 ஏக்கர் முதல் 300 ஏக்கர் வரையிலான நிலங்கள் தானமாகக் கிடைத்தன. உத்தரப் பிரதேசத்தின் மங்ராத் என்ற கிராம மக்கள் தங்களுடைய முழு கிராமத்தையே கிராமதானமாகக் கொடுத்தனர்.
வினோபாஜி நாடு முழுக்க நடந்து 41,94,271 ஏக்கர் நிலங்களைத் தானமாகப் பெற்றார். அதில் 12,85,738 ஏக்கர் நிலங்கள் ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டன. 18,57,398 எதற்கும் பயன்படாத களர் நிலங்களாக இருந்தன. எஞ்சியவை மீது தானம் கொடுத்தவர்களின் வாரிசுகள் வழக்கு போட்டதால் முடிவு காணப்படாமல் போய்விட்டது.காற்று, தண்ணீர், வானம், சூரிய ஒளி போல நிலமும் இயற்கையின் கொடை. அதைத் தனிப்பட்ட நபர்கள் பேரில் சொந்த சொத்தாக அனுபவிப்பது கூடாது என்ற உயரிய நோக்கத்தை ‘பூமிதானம்’ வலியுறுத்தியது. ‘காந்தியம்’ என்பது கம்யூனிஸத்தின் அகிம்சை வடிவம் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளையர்கள்கூட வினோபாஜியை நடைப்பயணத்தின்போது சந்தித்து, தங்களுடைய ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டுச் சரண் அடைந்தார்கள். சிறையில் தண்டனையை அனுபவித்துவிட்டு வந்து, ஆசிரமத்தில் தங்களுக்கிடும் பணியைச் செய்வதாகக் கூறிச் சென்றார்கள்.
. இந்தியாவில் ஆறு ஆசிரமங்களை உருவாக்கியிருக்கிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக்கில் வினோபா பாவே பெயரில் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இவர் 1958ம் ஆண்டில் இரமோன் மகசேசே விருதைப் பெற்றார். இவ்விருதைப் பெற்ற முதல் நபர் இவர் ஆவார். வினோபா பாவே நோய்வாய்ப்பட்டு 1982ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி காலமானார். இவரது இறுதிச் சடங்கில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கலந்து கொண்டார். இந்தியாவின் உயரிய விருதான பாரத இரத்னா விருது, வினோபா பாவே இறந்த பின்னர் 1983ம் ஆண்டில் அவருக்கு வழங்கப்பட்டது.
“ஒரு நாடு ஆயுதங்களால் அல்ல, மாறாக, அறநெறி நடத்தையால் தன்னைப் பாதுகாக்க வேண்டும்”.
“ஒரு காரியம் உண்மையாய் இருக்கும் போது அதை நிலைநிறுத்த விவாதங்களைப் பயன்படுத்த வேண்டுமென்ற தேவை கிடையாது”. இக்கூற்றுக்களைச் சொன்ன வினோபா பாவே. இதே நவம்பர் 15 (1982)இல் காலமானார்
வாத்தீ அகஸ்தீஸ்வரன்