அமெரிக்காவில் திருநங்கைகளுக்கு எந்த உரிமையுமில்லை!டிரம்ப்
டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் அமெரிக்காவில் ஆண் மற்றும் பெண் என்ற, இரண்டு பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் எனவும் திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை என்றும் திருநங்கைகளுக்கு எதிரான சட்டத்தில் முதல் நாளே முதல் கையெழுத்திட உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் பாலினத்தவரான LGBTQ சமூகத்தினரின் உரிமைகளுக்கு எதிராக அதிக அழுத்தம் கொடுக்கும் வகையில் அவர் பேசியுள்ளார். LGBTQ பிரச்சினைகள் சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்க அரசியலை பெரிதும் தாக்கம் செலுத்த வரும் சூழலில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், தான் அதிபராக பதவியேற்க உள்ள முதல் நாளிலேயே “திருநங்கைகளின் பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துவோம்” என்று பேசியுள்ளார். ஃபீனிக்ஸ், அரிசோனாவில் இளம் பழமைவாதிகளுக்கான நிகழ்வில் பேசிய டிரம்ப், “குழந்தைகள் இடையேயான பாலியல் சிதைவை நிறுத்தவும் , திருநங்கைகளை ராணுவத்திலிருந்து வெளியேற்றவும், எங்கள் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து வெளியேற்றுவேன்.பெண்களின் விளையாட்டுகளில் இருந்து ஆண்களை விலக்கி வைப்பேன். ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலினங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ கொள்கையாக இருக்கும். இதற்கான நிர்வாக உத்தரவுகளில் முதல் நாளே கையெழுத்திடுவேன்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கடந்த வாரம், அமெரிக்க காங்கிரஸ் தனது வருடாந்திர பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரித்தது. அதில் பாதுகாப்பு படையில் வேலை செய்பவர்களின் குழந்தைகளின் பாலினத்தை உறுதிப்படுத்தும் சில பராமரிப்புக்கான நிதியுதவியைத் தடுப்பதற்கான ஏற்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கு எதிராக டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்புகளும், அரசின் நடவடிக்கைகளும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், திருநங்கைகளின் உரிமைகள் பறிக்கப்படுவதாக, டிரம்புக்கு எதிராக ஒரு தரப்பினர் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.