For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சிறுதொகை முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புகள் அருகிப்போன காலமிது!

10:02 AM Oct 21, 2024 IST | admin
சிறுதொகை முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புகள் அருகிப்போன காலமிது
Advertisement

நேற்றைய நீயா நானா இன்றியமையாத ஒன்று. பல்வேறு இணையவழி ஏமாற்றுகளில் சிக்கிக்கொண்டு காசினையோ வாழ்க்கையையோ இழக்க நேர்ந்ததைப் பற்றியது. பலப்பல ஏமாற்றுகளில் தெரிந்தோ தெரியாமலோ அகப்பட்டவர்கள் தத்தம் படுபாடுகளைக் கூறினார்கள். அவற்றில் சிலவற்றை நாம் கேள்வியுற்றிருக்கிறோம் என்றாலும் வேலை ஏமாற்றுகளில் வெளிநாட்டில் சிக்கிக்கொண்டோரின் கதைகள்தாம் மிகவும் கொடுமை. அவர்களில் பெரும்பாலோரின் இடர்ப்பாடு ஏதேனும் ஒரு வகை இணையவழி ஏமாற்றில் மாட்டிக்கொண்டு பணத்தை இழந்ததாகவே இருந்தது. சிறப்பு விருந்தினரில் ஒருவராகக் கலந்துகொண்ட நான் பணத்தை இழப்பவர்களைச் சுற்றி இயங்கும் பல நிலவரங்களைப் பற்றிப் பேசினேன்.

Advertisement

இன்றைய உலகம் பெரும்பொருள்மதிப்பு சார்ந்து இயங்குகிறது. பொருட்படுத்தத்தக்க மதிப்பான தொகை என்பது முன்பு ஆயிரங்களில் இருந்தது. இன்று ஆயிரத்தைத் தாண்டி இலட்சங்களில் போய்க்கொண்டிருக்கிறது. என் தாயார் முதல் பத்தாயிரத்தைச் சேர்த்தபோது உலகின் பெரும்பணக்காரியாக உணர்ந்ததை அண்ணாந்து பார்த்திருக்கிறேன். ஆனால், இன்றைக்குப் பத்தாயிரம் என்பது எளிய தொகை. எனில், ஆயிரங்களில் இலட்சங்களில் மிகைப்பணம் வைத்திருக்கும் காலத்தில் வாழ்கிறோம். இன்றைக்குக் கைப்பணம் என்பதே ஆயிரத்தில்தான் இருக்கவேண்டும். இத்தகைய சேர்ப்புத் தொகை ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. அது வெறுமனே வங்கியில் இருக்கக்கூடும். இன்றைக்கு ஒவ்வொருவரிடமும் உள்ள ஆயிரங்களில் / இலட்சங்களில் ஆன மிகைப்பணத்திற்கு நம்முன்னுள்ள வளர்ச்சி மிக்க முதலீட்டு வாய்ப்புகள் என்னென்ன ? வங்கி அஞ்சலகம் உள்ளிட்டவற்றின் வைப்புநிதித் திட்டங்களைத் தவிர வேறு ஒன்றுமேயில்லை. அங்கே ஆண்டுக்கு ஏழு விழுக்காடு வட்டி கிடைக்கும். பத்தாயிரம் என்பது ஆண்டுக்கு எழுநூறு மட்டுமே வளரும். பணவீக்கத்தொட்டு தொடர்புபடுத்துகையில் எழுநூறு என்னும் வளர்ச்சி ஒன்றுமேயில்லை. மக்கள் வேறுவகை முதலீட்டு வாய்ப்புகளைத் துழாவுகிறார்கள்.

Advertisement

எண்ணிப் பாருங்கள், இன்றைக்கு ஐம்பதாயிரம், ஒரு இலட்சம் என முதலிட்டு ஒன்றில் இணைந்துகொள்ள மக்களுக்கு வாய்ப்பே இல்லை. தேநீர்க்கடை வைத்திருப்பவர்கூட கடிஅ முன்பணம், கடை உள் ஒப்பனை, கண்ணாடிப்பெட்டிகள், கட்டமைப்புகள், பன்னிற விளக்குகள் என நாற்பது இலட்சங்கள் முதலீடு என்கிறார். அந்த நாற்பது இலட்சத்தை வணிகத்தின் வழியாகத்தான் எடுக்க வேண்டும். மறு விற்பனை மதிப்பே அதற்குக் கிடையாது. சிறுதொகைக்கு நம்முன்னே முதலீட்டு வாய்ப்புகளே இல்லாத காலத்தில் வாழ்கிறோம். இல்லையேல் அந்தத் தொகையை வங்கியிலேயே/கையிலேயே வைத்திருக்க வேண்டியதுதான். (நம்மிடமுள்ள சிறுதொகைக்கு வேறு முதலீட்டு வாய்ப்புகளே இல்லை என்ற நிலையால்தான் பங்குச்சந்தையில் பங்கேற்பவர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு கதை.)

இத்தொகையை ஏதேனும் ஒருவகையில் முதலிட்டு ஒரு சிறுவருமானத்தை அடைய இயலாதா என்று மக்கள் தேடத் தொடங்குகிறார்கள். அது இயற்கையே. அக்கம்பக்கம், அண்டை அயலார், உறவுநட்பு என்று கடன்கொடுத்தால் என்னாகும் என்பது ஊரறிந்த உண்மை. ஐம்பதாயிரம் கொடுத்தால் நாள்தோறும் ஆயிரம் வருமானம் என்பதில் தொடங்கி திங்கள்தோறும் ஐயாயிரம் வருமானம் என்று வகைவகையான ஏமாற்றுத் திட்டங்களோடு பலரையும் எதிர்கொள்கிறார்கள். இத்தகைய ஒன்றெய்தி நூறிழக்கும் சூதுத் திட்டங்களின் உண்மை முகத்தை அறியாமல் மக்கள் அத்தகைய ஏமாற்று முதலீடுகளில் மாட்டிக்கொண்டு பணத்தை இழக்கிறார்கள். இவற்றில் மறைநாணய வணிகம், வெளிநாட்டுச் செலாவணி வணிகம், பங்குச் சந்தை எதிர்கால வாய்ப்புவணிகம் எனப் பலவும் உண்டு. இவ்வகையான ஏமாற்றுகளில்தான் யாரோ ஒருவரிடம் நம்பிக் கொடுத்து இழக்கிறார்கள். இத்தகைய வணிகங்களில் முறையான கல்வி இல்லாமல் ஒருவர் நேரடியாகவே இறங்கினாலும் இழப்பினைச் சந்திக்க நேரலாம்.

பங்குச் சந்தை போன்றவற்றில் நாள்பட்ட முதலீடு மட்டுமே இறுதியில் வெல்லுமே தவிர, பல்வேறு வகை வணிக முறைகள் இறுதியில் இழப்பில் முடியவே வாய்ப்பு. அதனால்தான் எல்லாப் பெருமுதலீட்டாளர்களும் முதலீடு செய்துவிட்டு ஆண்டுக்கணக்கில் அமைதியாகக் காத்திருக்கிறார்கள். நம் மக்களுக்கு எல்லாமே உடனடியாக வேண்டும். திங்கள்தோறும் வருமானம் வேண்டும். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற வேட்கையில் ஏதேனும் ஒருவகை இணையவழி முறைகளில் ஏமாறிவிடுகிறார்கள். அத்தகைய ஏமாற்றுக்குத் தூண்டியவரில் ஒருவர் நட்பாகவோ உறவாகவோ இருப்பார். ஏனென்றால் நம்மை அறியாதவர்களால் நமக்கு எவ்விடையூறும் இருப்பதில்லை. இத்தகைய வளர்ச்சியுள்ள நாட்டுப் பொருளியல் போக்கில் இன்னும் நல்ல விழுக்காட்டில் வங்கிகள் வைப்புத் தொகைக்கு வட்டி வழங்கினால் மக்கள் வங்கியை விட்டு எங்கும் செல்லமாட்டார்கள்.

ஆனால், வங்கியினர் தங்கள் வணிக முறையை முற்றிலும் மாற்றியெடுத்துச் சென்றுவிட்டார்கள். நமக்காக இன்னொருவர் பொருளீட்டித் தரமாட்டார் என்கிற உண்மையை உணரவேண்டும். தொகையை ஈட்டுவதைவிடவும் அதனை வைத்திருந்து காப்பாற்றுவது இன்னும் பெரும்பாடு. கைப்பேசி, இணையம் உள்ளிட்டவற்றைக் கையாள்வதில் மிகுந்த பொறுப்புணர்வு வேண்டும். கண்ணில் படுகின்ற எல்லாத் தளங்களையும் திறந்து பார்ப்பானேன் ? இணைய வழியில் பொருள் வாங்குவது என்றால் அமேசான், பிளிப்கார்ட்டுக்கு அப்பால் போகவேகூடாது. பிற தளங்கள் என்றால் அவற்றில் பொருள்களைப் பார்வையிட்டுவிட்டு அருகேயுள்ள கடைகளில் போய் வாங்கிக்கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டம் சிறுதொகை முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புகள் அருகிப்போன காலகட்டம். வேறு வாய்ப்புகள் நம்மைச் சுற்றிலும் இறைந்து கிடக்கின்றன என்று யாரேனும் கூறினால் நம்பாதீர். ’இழக்காத ஒவ்வொரு உரூபாயும் புதிதாக ஈட்டுகின்ற ஒவ்வொரு உரூபாய்க்கு நேர்’ என்பதனை உணர்ந்திருங்கள்.

கவிஞர் மகுடேஸ்வரன்

Tags :
Advertisement