For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் தினம்!

05:54 AM Dec 03, 2024 IST | admin
பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் தினம்
Advertisement

க்கிய நாடுகள் சபை வழிகாட்டுதல்படி 1992-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ஆம் தேதி சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில், மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளைப் புரிந்துகொள்வது, அவர்களைக் கண்ணியத்துடன் நடத்துவது மற்றும் அவர்களின் நல்வாழ்வு, உரிமைகள், அவர்களுக்கு உரிமை கொடுப்பது இந்த நாளின் நோக்கமாகும்.

Advertisement

மாற்றுத் திறனாளி என்படும் ஊனமுற்றோர் எனும் போது இவர்கள் நோயாளிகளாக அல்லாமல் சமூதாயத்தில் நம்பிக்கைக்குரிய பிரஜைகள் என்ற அடிப்படையில் நோக்கப்படுவதுடன் இவர்களும் மனிதாபிமான சிந்தனை மிக்கவர்களே என்பதை மையமாகக் கொண்டு உலகம் முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உலகின் மக்கள் தொகையில் பத்து வீதத்தினர் அதாவது 65 கோடிப் மக்கள் ஊனமுற்றவர்கள் என உலக சுகாதார நிறுவகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 80 வீதத்தினர் அதாவது 40 கோடிக்கு மேற்பட்டோர் மூன்றாம் உலக நாடுகளில் வாழ்கின்றனர். அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளிலுள்ள ஊனமுற்ற சிறாரில் 90 வீதத்தினர் பாடசாலைக்குச் செல்வதில்லை என்று ஐக்கிய நாடுகள் அறிக்கை கூறுகிறது. ஊனமுற்ற நிலையிலுள்ள 2 கோடிப் பெண்கள் அதனை கருவுற்ற காலத்திலோ அல்லது குழந்தைப் பிறப்பின் போதோ பெற்றுள்ளனர்.

Advertisement

1981-ம் ஆண்டை “சர்வதேச ஊனமுற்றோர் ஆண்டா”க அறிவித்த ஐக்கிய நாடுகள் சபை, 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் திகதியை சர்வதேச ஊனமுற்றோர் தினமாகவும் அறிவித்தது. அன்று தொடக்கம் இன்றுவரை ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் உலக நாடுகளால் ‘சர்வதேச ஊனமுற்றோர் தினம்” என அனுசரிக்கப்படுகிறது.உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இச்சூழலில் கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் சில நேரங்களில், சில காரணங்களால் சிலர் மாற்றுத் திறனாளிகளாய் பிறந்துவிடுகின்றனர், அல்லது சில விபத்துகள் அப்படி ஆக்கிவிடுகின்றன. பூச்சியாய் பிறந்தாலும் தளராது பறக்கிறது தட்டானெனும் தன்னிகரற்ற பறவை. தட்டானே எல்லாவற்றையும் விட்டு விடுதலையாகி சுதந்தர வானில் சுற்றித் திரியும்போது நாமேன் கவலைப்படவேண்டும்? உலகமே போற்றிப்புகழும் ஆற்றல் பெற்ற மாற்றுத்திறனாளிகள் ஏன் ஏன் வருந்தவேண்டும்?

கசந்த வாழ்க்கையை வசந்த வாழ்க்கையாய் மாற்றும் மூன்றாம் கையான நம்பிக்கையை மறந்துவிட்டு அவர்கள் ஏன் வருத்தத்தின் வாசலை தன் நிறுத்தத்தின் வாசலாய் எண்ணிக்கொண்டு துயர்படவேண்டும்? புழுவுக்கு ஆசைப்பட்டு தூண்டில் கொக்கியில் தொங்கிக்கொண்டிருக்கிற மீன்களாய் ஏன் மாறவேண்டும்? மறுப்பேதும் சொல்லாமல் வெறுப்பேதும் கொள்ளவேண்டாம். நம்மையே நாம் நொந்து கொள்ளவேண்டிய அவசியம் என்ன?

புறக்கணிப்புகள்கூடப் புரிதல்களோடே செய்யப்படுகின்றன, இருக்கிற இனிய வாழ்வுப்பொழுதுகளில் வெறுக்கிற சொற்களை வேகமாய் வீசுகிற மனிதர்கள் குறித்துக் கவலைவேண்டாம். நம் மனதில் பாரங்களை ஏற்றிய பாவங்களை அவர்கள் சுமந்துபோகட்டும். அவர்கள் சொன்ன சுடுசொற்களை மனதில் தேக்கி அவர்களுக்கு முன் சாதித்துக் காட்டுங்கள். உங்கள் திறன்களுக்கு நீங்கள் ஒருபோதும் திரைபோட்டு மறைக்கவேண்டாம். நம்மை ஏன் புறக்கணிக்கிறார்கள் என்று ஒருபோதும் நினைக்கவேண்டாம். ஜன்னலில் தெரியும் மின்னல் மாதிரி இன்னலில் தெரிகிறது என் வாழ்க்கை என்று இனியும் சொல்லவேண்டாம்.

மாற்றுத்திறனாளிகளின் அடையாளம் தடையாளும் அடையாளம். கூர்மையான அலகுகளால் அழகாகக் கொத்துகிற குட்டிக்குருவிகள் கூடத் தங்கள் பசியகற்றும் தானியங்களை நோக்கித் தானே பறக்கும்போது நாம் ஏன் சோகமாய் இருக்கவேண்டும்? எல்லாத் தடைகளையும் வலியோடும் வலிமையோடும் எதிர்கொண்டு முயற்சித்தேரை வடம்பிடித்து இழுபவர்களே சாதனை வரலாற்றில் இடம்பிடிக்கிறார்கள். கவலைப்படும்போது நாம் கரையானுக்கு இரையாகிற மரக்கட்டைகளைப் போல் மாறிப்போகிறோம். நம்மையே நாம் நொந்துகொள்ளும்போது, கைதவறிய மூட்டையிலிருந்து சிதறிப்போகிற சிறுஉருண்டைகள் மாதிரி உதறிப்போகிறது இந்த வாழ்க்கை.

அதே சமயம் டிசம்பர் 3 தேதியை உலக மாற்றுத்திறனாளிகள் தினமாய் கொண்டாடினாலும் இன்னும் அவர்களுக்கான சிரமங்களைச் சமூகம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது வருத்தம் தரும் உண்மைதான். பேருந்து நிலையங்களில் அவர்களுக்கான சிறப்பறைகள் கழிவறைகள் ஏற்படுத்தப்பட்டாலும் மிகக் குறைந்த தாழ்நிலை பேருந்துகளே உள்ள சூழலில் உயரமான படிக்கட்டுகளை உடைய பேருந்துகளில் அவர்களால் ஏற முடியாத அவலநிலைதான் இன்னும் உள்ளது. பொதுமக்கள் கூடும் பொது இடங்களில் இன்னும் அவர்கள் எளிமையாகப் பயணிக்கும் சரிவுப்பாதைகள் அதிகமாய் ஏற்படுத்தப்படவில்லை.விழித்திறன் இழந்தோர் தேர்வு எழுத உதவியாளர் தேவை என்பதால் பல கல்வி நிறுவனங்கள் அவர்களைப் பயிலச் சேர்த்துக்கொள்வதே இல்லை. விழித்திறன் குறைந்தோர் பயிலும் பள்ளிகள் தமிழ்நாடெங்கும் உருவாகவில்லை.அவர்களுக்கான பிரெய்லி எழுத்தில் தயாரிக்கப்பட்ட நூல்களும் தமிழில் குறைவு.நடக்க இயலாதோருக்குப் பயிற்சிதரும் இயன் முறை மருத்துவர்களைத் தன்னகத்தே பெற்ற மாற்றுத்திறன் படைத்தோருக்கான மையங்கள் இன்னும் அதிகமாக ஏற்படுத்தப் படவேண்டும்.ஆட்டிசம் எனும் புறஉலகச்சிந்தனைக்குறைவு உள்ள நிலையில் இந்தியாவில் 20 லட்சம் குழந்தைகள் உள்ள நிலையில் அவர்களுக்கு சிறப்புப்பயிற்சி தரும் சிறப்பாசிரியர்களைக் கொண்ட சிறப்புப்பள்ளிகள் இன்னும் அதிகாமாய் உருவாக்கப்படவேண்டும்.மனம் உடைந்து போகும் மாற்றித்திறனாளிகளுக்குத் தன்னம்பிக்கையூட்டும் தன்னம்பிக்கை மையங்கள் அதிகமாய் உருவாக்கப்படவேண்டும்.

இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளின் சாதனைகளை ஊக்கப்படுத்துவதும் அவர்கள் தளரும்போது தட்டிக் கொடுப்பதும்தான் நாம் செய்யவேண்டியது. விழுவதன் வலியை அழுவதன் மூலமாக அல்ல, எழுவதன்மூலமாகத்தான் நாம் காட்டவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement