மூன்று மொழிக் கொள்கை:- தமிழ்நாட்டு வாழ் பெற்றோர்களுக்கு 12 கேள்விகள்!
இது அரசியல் கட்சிகளுக்கு இடையேயான பிரச்சனை மட்டுமே என்று கருதுகிறீர்களா?
இப்போது வரை தனியார் மெட்ரிக் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை ஹிந்தி ஒரு கூடுதல் பாடமாக இருக்கிறது (எனினும் அதில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை). அதனால் மாணவர்கள் பெற்ற பலன் என்ன?பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற ஹிந்தி பாடத்தில் தேறி இருக்க வேண்டும் என விதி வந்தால் என்னவெல்லம் நடக்கும் என நினைக்கிறீர்கள்?
கடந்த சில பத்தாண்டுகளில் ஆரம்பப்பள்ளி மாணவர்களின் பாடச் சுமை கூட பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் இன்னொரு மொழி அவசியம் என்னும் போது அந்த சுமையை பெரும்பாலான மாணவர்களால் தாங்க இயலுமா?
இப்போது இருக்கும் பாடச் சுமையை சமாளிக்க முடியாமல் பெற்றோர்கள் பாடத்திற்கு ஒரு டியூஷன் வைக்கும் நிலையில் இருக்கிறார்கள். செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள கணிதம் அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் வலுவான அடிப்படை கல்வி தேவை. அந்தப் பாடங்களை கற்பதற்கான நேரத்தைத் தியாகம் செய்து ஹிந்தியை கற்றுக்கொள்ள என்ன அவசியம் இருக்கிறது?
இணையம், செல்போன் மற்றும் அதிகப்படியான பொழுதுபோக்கு வாய்ப்புகள் இன்றைய குழந்தைகளின் கற்றல் திறனில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த புதிய நெருக்கடியின் போது உங்கள் குழந்தைகளுக்கு கூடுதலாக ஒரு மொழியை கற்பித்து கரை சேர்த்து விட முடியும் என்று நம்புகிறீர்களா?
இன்றைய பெற்றோரால் வேலை மற்றும் வாழ்வியல் நெருக்கடி காரணமாக குழந்தைகளின் கல்விக்காக நேரம் செலவிட இயலவில்லை. ஏழைகளால் சிறப்பு வகுப்புகளுக்கு செலவிட இயலாது எனும் போது கற்றல் பிரச்சனை உள்ள மாணவர்கள் என்ன செய்வார்கள்? இடைநிற்றல் அதிகமாவதன் மோசமான பின் விளைவுகள் குறித்து உங்களுக்கு ஏதேனும் தெரியுமா?
உத்திர பிரதேசத்தில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வில் ஹிந்தி பாடத்தில் தோல்வியடைகிறார்கள். இந்தியா முழுக்க ஆண்டுக்கு 65 லட்சம் பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வுகளில் தோல்வி அடைகிறார்கள். இதையெல்லாம் சரி செய்ய முயலாத பாஜக அரசு தமிழ்நாட்டு மாணவர்கள் மூன்றாவதாக ஒரு மொழியை கற்றுக் கொண்டே ஆக வேண்டும் என ஸ்பெஷல் அக்கறை காட்டுவதற்கு என்ன காரணம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?
குழந்தை பிறப்பு விகிதம் கணிசமாக குறைவதால் அடுத்த 20 ஆண்டுகளில் ஜப்பானில் மட்டும் சுமார் 70 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் வெளிநாட்டவர்க்கு கிடைக்கப் போகின்றன. ரயில்வே உள்ளிட்ட ஒன்றிய அரசின் ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கையை விட இது இரண்டு மடங்கிற்கும் அதிகம். இப்படி உலக அளவில் ஏராளமான வாய்ப்புகள் உருவாகப் போகின்றன. ஹிந்தியை மல்லுக்கட்டி படிப்பது இந்த உலகளாவிய வேலைவாய்ப்புக்கு எந்த வகையில் உதவி செய்யும்?
பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை, தொழில் நுட்ப வளர்ச்சியில் சீனாவிடம் ஏற்பட்ட தோல்வி, பெருகிவரும் சிறார் குற்றங்கள், பெருகிவரும் கற்றல் குறைபாடு, உற்பத்தி துறையில் சரிவு, விவசாய உற்பத்தியில் சரிவு இவை எல்லாம் இந்தியா கடந்த சில ஆண்டுகளாக எதிர்கொள்ளும் சவால்கள். இவை உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நேரடியாக சிதைக்கக் கூடியவை. இதுகுறித்து மோடி அரசு கவலைப்பட்டதாக எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
50 ஆண்டுகளுக்கு முன்பு வேலை வாய்ப்பு இல்லாமல் முறுக்கு விற்கவும் பருப்பு விற்கவும் வட இந்தியாவிற்கு வேலை தேடிச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. போதுமான பொழுதுபோக்கு இல்லாமல் தூர்தர்ஷனில் வந்த ஹிந்தி நிகழ்ச்சிகளை பார்க்க ஹிந்தி தேவையாக இருந்தது. இன்று ஹிந்தியை கற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்பதற்கான காரணங்கள் என்ன இருக்கின்றன?
ஹிந்தி ஒரு கட்டாய பாடமாக்கப்பட்ட பிறகு மத்திய அரசு நடத்தும் எல்லா வகையான தகுதி தேர்வுகளையும் ஹிந்தியில் மட்டுமே எழுத வேண்டும் என்று அறிவித்தால் என்ன செய்வீர்கள்?
உயர்கல்வி சேர்க்கை முதல் மத்திய அரசு பணிகள் வரை எல்லாவற்றையும் ஹிந்தி பேசும் மாணவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் அளவுக்கு வசதியாக இருக்கிறீர்களா?