For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பொருளாதார ஆய்வறிக்கையில் என்னதான் இருக்கிறது?

10:15 PM Mar 13, 2025 IST | admin
பொருளாதார ஆய்வறிக்கையில் என்னதான் இருக்கிறது
Advertisement

த்திய அரசு ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, இதுபோன்ற பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்வது வழக்கம். அந்த பாணியில் தமிழ்நாடு வரலாற்றில் முதல் முறையாக மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட ‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25’-ஐ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 13) வெளியிட்டார்.அப்போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலர் உதயச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement

இந்த ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

Advertisement

> 2021-22-ல் இருந்தே 8% அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தைத் தமிழ்நாடு தொடர்ந்து எட்டி வருகிறது. 2025-25லும் 8% அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

> தமிழ்நாடு 2023-24 ஆம் ஆண்டில் தேசிய உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 9.21% பங்களித்துள்ளது. 2023-24ல் மாநில உள்நாட்டு உற்பத்தியானது (ஜிஎஸ்டிபி) ரூ.27.22 லட்சம் கோடியை எட்டியுள்ளது. பெயரளவு வளர்ச்சி விகிதம் 13.71% ஆகவும், உண்மையான வளர்ச்சி விகிதம் 8.33% ஆகவும் உள்ளது.

> தமிழகத்தின் தனிநபர் வருமான வளர்ச்சியானது தொடர்ந்து பல ஆண்டுகளாக தேசிய சராசரியைவிட அதிகமாகவே இருந்து வருகிறது. 2022-23ல் ரூ.2.78 லட்சமாக இருந்தது; இது தேசிய சராசரியான ரூ.1.69 லட்சத்தைக் காட்டிலும் 1.64 மடங்கு அதிகமானதாகும். இதன் காரணமாக தனிநபர் வருமானத்தில் தமிழகம் நான்காம் இடம் வகிக்கிறது. மாநிலத்தின் தனி நபர் வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் தேசிய சராசரியை விட மேலே உள்ளது.

> 2023-24ல், சேவைத் துறையானது மாநிலத்தின் மொத்த மாநில உற்பத்தி மதிப்புக்கூட்டலில் (ஜிஎஸ்விஏ) 53.63% பங்களித்தது; அதற்கடுத்து இரண்டாம் நிலைத் துறை (33.37%), முதன்மைத்துறை (13%) பங்களித்துள்ளன. வளர்ந்த மாநிலங்களைப் போலவே மாநிலத்தின் இரண்டாம் நிலைத் துறையின் பங்கு 5% அளவில் அதிகரித்தால், வேலைவாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும்.

> தமிழ்நாட்டில் 2022-23-ல் 6% என்றிருந்த சில்லறை வர்த்தகப் பணவீக்கம், 2023-24ல் 5.4% ஆகவும், 2024-25ல் (ஜனவரி 2025 வரையில்) 4.8% ஆகவும் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் 2019-20ல் 6% என்றிருந்த நகர்ப்புர பணவீக்கம் 2024-25-ல் (ஜனவரி 2025 வரையில்) 4.5% ஆகக் குறைந்துள்ளது

> மொத்த பயிரிடப்பட்ட பரப்பளவில் நெல், மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, தினை வகைகள் உள்ளிட்ட உணவு தானியங்கள் 62% ஆகவும், எண்ணெய் வித்துகள், கரும்பு, பருத்தி போன்ற உணவு தானியமல்லாத பயிர்கள் 38% ஆகவும் உள்ளன. பயிர்ப்பரப்பில் நெல் தொடர்ந்து முதன்மை நிலை வகித்து வருகிறது. 2019-20ல் மொத்த பயிர்ப் பரப்பில் 32.1% ஆக இருந்த நெல்லின் பங்கு 2023-24ல் 34.4% ஆக அதிகரித்துள்ளது.

> தமிழக விவசாயிகளுக்கு பட்டியலிடப்பட்ட வணி வங்கிகள் வாயிலாக வழங்கப்படும் கடன் 2019-20ல் ரூ.1.83 லட்சம் கோடியிலிருந்து, 2023-24ல் ரூ.3.58 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

> 2024-ம் ஆண்டில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 14.55 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

> 2019-20 முதல் 2023-24 வரையான காலத்தில் தமிழ்நாட்டின் தொழில் துறைக்கு வர்த்தக வங்கிகள் அளித்துள்ள கடன் ரூ.2.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.3.01 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அந்நிய நேரடி முதலீடு ரூ.5,909 கோடியிலிருந்து ரூ.20,157 கோடியாக அதிகரித்துள்ளது.

> 2005-06 முதல் 2022-23 வரையான காலத்தில் தமிழ்நாட்டின் வறுமை நிலை (ஹெச்சிஆர்) 36.54%-லிருந்து வெறும் 1.43% என வெகுவாக குறைந்துள்ளது.

சமூகத் துறைக்கான செலவினங்களை தமிழக அரசு தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. 2019-20ல் ரூ.79,859 கோடியாக இந்த ஒதுக்கீடு, 2022-23 ஆம் ஆண்டில் ரூ.1.16 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது, என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன

.

இந்த ஆய்வறிக்கை வெளியானதை அடுத்து திட்டக்குழு செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் செய்தியாளர்களைச் சந்தித்து சொன்ன சேதி இதோ:

“பட்ஜெட் எனில் பொதுவாக அரசுக்கு எவ்வளவு வருமானம் வருகிறது? எது எதற்கு வரி விதிக்கப்படுகிறது? ஒன்றிய அரசிடமிருந்து எவ்வளவு நிதி வருகிறது? என்பதுதான் விவாதிக்கப்படும். ஆனால் பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது? விவசாயத்தில் என்ன நடக்கிறது? தொழில்துறையில் என்ன நடக்கிறது? என்பதெல்லாம் அதில் விவாதமாக வராது? துறை சார்ந்த மானிய கோரிக்கைகள் வரும்போது அந்தந்த துறை சார்ந்தவர்கள் மட்டுமே பேசுவார்கள். இந்த பொருளாதார அறிக்கை ஒட்டுமொத்த பொருளாதாரத்தை பேசும். கடந்த 5 ஆண்டுகளில் என்ன நடந்திருக்கிறது என்பதை ஆய்வு செய்து, பொருளாதாரம் உயர்ந்திருக்கிறதா? குறைந்திருக்கிறதா? என கட்டுரையாக கொடுத்திருக்கிறோம். இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழ்நாடு என்னென்ன சிக்கல்களை வரும் காலங்களில் எதிர்கொள்ளலாம் என்பதை சுட்டிக்காட்டுகிறோம். இதன் தொடர்ச்சியாக செயல்படுத்தப்படும் முன்னெடுப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறலாம்.” என்றார்.

இதற்கு ''மாநில பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதமாக நிலையாக இருக்கிறது… இந்த ஆண்டும் 8 சதவிகிதம் அல்லது அதற்கு மேலாக இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது எப்படி நடந்தது'? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

பதிலளித்த ஜெயரஞ்சன்,“பொருளாதாரம் விவசாயத்தை விட்டு நகர்ந்து, விவசாயம் அல்லாத பொருளாதாரமாக மாறி கொண்டிருக்கிறது. கால மாற்றங்களால் ஏற்படும் விவசாயத்தில் இருக்கக்கூடிய ஏற்ற இறக்கம் நமது பொருளாதாரத்தை பாதிக்காது. ஆனால் நாடு அளவில் என்ன நடக்கிறது என்பதை விட சர்வதேச அளவில் நடப்பது பொருளாதாரத்தை பாதிக்கும்.இந்தியாவிலேயே கார் உற்பத்தி அதிகமாக நடக்கும் மாநிலம் தமிழ்நாடுதான். ஏற்றுமதியும் அதிகமாக நடக்கும். டெக்ஸ்டைல்ஸ், லெதர், நான் லெதர் ஆகியவற்றையும் அதிகமாக உற்பத்தி செய்கிறோம். இந்த 5, 6 துறைகள் தான் இந்தியாவிலேயே பெரிய அளவில் உள்ளது. இப்போது எலெக்ட்ரானிக்ஸும் அந்த வரிசையில் உள்ளது.ரஷ்யா – உக்ரைனுக்கு இடையே நடக்கும் பிரச்சினை சர்வதேச சந்தையை பாதிக்கிறது என்றால் அது நம்மையும் பாதிக்கும். அமெரிக்கா ட்ரேடு வார் அறிவிக்கிறது என்றால் அதுவும் நம்மை பாதிக்கும்.சர்வதேச சந்தையில் நாம் பின்னி பிணைக்கப்பட்டிருப்பதால் அந்த சந்தை எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறதோ, அந்த பாதிப்பு நமக்கும் இருக்கும்.நாம் தொடர்ந்து வளர்வதற்கு காரணம் என்னவென்றால், இந்த மாதிரி ஒரு தொழில்துறை வளர்ச்சிதான். முதலில் சர்வீஸஸ், அடுத்து தொழில்துறை உள்ளது. தற்போது விவசாயம் சின்ன துறையாக இருக்கிறது” என்று கூறினார்.

தனிநபர் வருமான வளர்ச்சி குறித்து பேசிய அவர், “ஒரு காலத்தில் இந்திய சராசரியை ஒட்டியும், அதன் கீழேயும் இருந்த தனிநபர் வருமானம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துள்ளது. பரவலான வளர்ச்சி என்கிறபோது வருமானம் மக்களுக்கு சென்று சேர்வதால் தனி நபர் வருமானம் அதிகரிக்கிறது. இந்திய அளவில் தனி நபர் வருமானம் ஒரு ரூபாயாக இருந்தால் தமிழ்நாட்டில் 1.20 ரூபாயாக உள்ளது” என்று தெரிவித்தார்

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement