ஹோட்டல் சாப்பாட்டை விரும்புவோர் எண்ணிக்கை எகிறுகிறது!
“உயிர் வாழ்வதற்காக உண்; உண்பதற்காக உயிர் வாழாதே” என்றொரு பழமொழியின் படி, நாம் உயிர் வாழ உணவு அவசியமான ஒன்று. அடிப்படைத் தேவைகளில் கூட முதலிடம் என்றும் உணவுக்குத் தான். இந்தச் சூழலில் நாம் உண்ணும் உணவு நல்லவையாக இருக்க வேண்டுமல்லவா! அதற்கு எப்போதுமே வீட்டு சாப்பாடு தான் நல்ல தேர்வு. வீட்டில் சமைக்கப்படும் சமையலில் சுவை குறைவாக இருந்தாலும், எந்தவித கலப்படமும் இருக்காது. மேலும், குறைந்த நபர்களுக்கு சமைக்கப்படுவதால், வீட்டு சமையல் தரமாகவும் இருக்கும். ஆனால் இந்திய தலைநகர் டெல்லியில் ஹோட்டலில் சாப்பிடுவோர் எண்ணிக்கை, 2024ல் 32 சதவீதம் அதிகரித்துள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் என்ன உண வகை சாப்பிடுகிறார்கள் என்பது பற்றி ஸ்விக்கி மற்றும் பெயின் அண்டு கம்பெனி சார்பில் ஆய்வு நடத்தினர். அந்த அறிக்கையில் டெல்லிவாசிகள் அதிகாலையில் தோசையைத்தான் விரும்பி சாப்பிடுகிறார்கள்; வெகு சிலரே இட்லியை விரும்பி சாப்பிடுகிறார்கள் என தெரியவந்துள்ளது.
இது குறித்து டெல்லியில் ஹோட்டல் நடத்தி வருபவரிடம் கேட்டப் போது,''எங்களுக்கு டெல்லியில் பல கிளைகள் உள்ளன. அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையில் பார்த்தால் வாடிக்கையாளர்கள் வருகை 50 சதவீதம் இருக்கும். பெரும்பாலும் எளிதில் ஜீரணிக்கின்ற உணவையே விரும்பி சாப்பிடுவார்கள். தோசை, இட்லி அடுத்து பூரி வகைகள் மற்றும் சப்பாத்தியை விரும்புகிறார்கள்'' என்று தெரிவித்தார்.
இந்திய உணவு சேவைத்துறையின் 2024ம் ஆண்டு ஆய்வின்படி டெல்லியில் ஹோட்டலில் சாப்பிடுவோர்களின் எண்ணிக்கை 32 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதன் அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இன்றைய நவீன வாழ்க்கை முறையில், வேலை பளு, நேரக் கட்டுப்பாடுகள் காரணமாக, பலர் வீட்டில் சமைத்து சாப்பிடுவதை விட வெளியே சாப்பிடுவதையே அதிகம் விரும்புகின்றனர். குறிப்பாக, ஹோட்டல்களில் கிடைக்கும் பல்வேறு வகையான உணவுகள், அதன் சுவையால் மக்களை வெகுவாகக் கவர்ந்திழுக்கின்றன. ஆனால், தினசரி ஹோட்டலில் சாப்பிடுவது உடல் நலத்திற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். ஹோட்டல்களில் வழங்கப்படும் உணவுகள் பெரும்பாலும் சுவைக்காகவே தயாரிக்கப்படுகின்றன. இதில், கொழுப்பு, சர்க்கரை, சோடியம் அதிகமாகவும், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் குறைவாகவும் இருக்கும். இதனால், தினமும் ஹோட்டலில் சாப்பிடுபவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இது ரத்தசோகை, எலும்பு பலவீனம், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
ஹோட்டலில் சமைக்கப்படும் உணவுகளில் செயற்கை சுவையூட்டிள் மற்றும் செயற்கை நிறமூட்டிகளும் பயன்படுத்தப்படுவதால், அது உடல் நலத்திற்கு தீங்கானது. வேலையின் காரணமாக வெளியூரில் தனியாகத் தங்கியிருப்பவர்களுக்கு ஹோட்டல் உணவு தான் பிரதான உணவாக இருக்கிறது. இதனுடைய பாதிப்பு இப்போது தெரியாது. இருப்பினும், வருங்காலத்தில் இதன் பாதிப்பை நம்மால் உணர முடியும். அந்த சமயத்தில் அடிக்கடி ஹோட்டலில் சாப்பிட்டு நம் உடல்நலத்தை நாமே கெடுத்துக் கொண்டோமே என்று வருந்துவதில் எந்தப் பயனும் இருக்காது.