வந்த கணக்கும் பொய்…! செத்த கணக்கும் பொய்….!!
கும்பமேளாவில் குளித்தால் புனிதம் என நம்புவோர் குளிக்கட்டும் ! நமக்கொன்றும் நட்டமில்லை . அது அவர்கள் நம்பிக்கை .நம் கேள்வி எல்லாம் காதில் பூ மாலையே சுற்றும் ரீல்கள் பற்றித்தான்…. !கும்பமேளாவில் இதுவரை 90 கோடிப்பேர் / 80 கோடிப்பேர் / 60 கோடிப்பேர் வந்து புனித நீராடி பாவம் தொலைத்து புண்ணியம் பெற்றதாய் மொட்டை சாமியார் அடித்து விடுகிறார் … மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 45 விழுக்காடு முதல் 65 விழுக்காடு வரை நீராடியதாய் நீரில் கணக்கு எழுதுகிறார் …!இந்திய மக்கள் தொகையில் பாதிக்கு மேல் வந்ததாக கதை விடுகிறார்கள் …!
இவர்கள் சொல்கிற கணக்கில் இந்தியாவில் வாழும் இரண்டு பேரில் ஒருவர் கட்டாயம் கும்பமேளாவுக்கு போயிருக்க வேண்டும் .வீட்டுக்கு ஒருவராவது போயிருக்க வேண்டும் . இப்படி சொல்வது காதில் பூ அல்ல பூமாலையே சுற்றும் வேலைதானே!நாம் நன்கு அறிவோம் தமிழ்நாடு கேரளாவில் இருந்து போனவர்கள் மிகமிகமிகக் குறைவே ! தென் இந்தியா வடகிழக்கு மாநிலங்களிலிருந்து போனவர்களும் குறைவே.முஸ்லீம்கள் கிறுத்தவர்கள் போயிருக்க வாய்ப்பில்லை . இந்தி பெல்ட் எனப்படும் மாநிலங்களில் போவோர் அதிகம் . உ.பி யிலேயே பாதிப்பேர் போயிருக்க மாட்டார்கள்!
ஒரு நாளைக்கு இவ்வளவு பேர் பயணிக்க முடியும் ?60/90 கோடிப்பேரை கொண்டு சேர்க்க திருப்பி அனுப்ப எவ்வளவு ரயில் தேவை ? எவ்வளவு வாகனங்கள் தேவை? தங்க வைக்க எவ்வளவு இடம் தேவை? இவ்வளவு பேர் நீராட முடியுமா? இடம் போதுமா ? இவற்றையெல்லாம் கணக்கிட முடியும் .விஞ்ஞான வழி உண்டு! அந்த கணக்கு ஒரு நாளைக்கு சில லட்சங்கள் என்பதே அதிகம் . அதுவே பெரும் நெரிசலாகும் ..!
எப்படி கணக்கிட்டாலும் இவர்கள் அளந்துவிடுகிற 90 /60 கோடி என்பது சாத்தியமே அல்ல .எண்ணிக்கையை விடுங்கள் … நாங்கள் வாயை மூடிக் கொள்கிறோம் !பெருங்கூட்டத்தை திரட்டி மத உணர்வை உசுப்பி மூடநம்பிக்கையை ஊட்டி சாதித்தது என்ன ? குளித்தவருக்கெல்லாம் பாவம் தொலையும் எனில் இனி எல்லோருக்கும் வேலை கிடைக்குமா ? விலைவாசி குறையுமா ? கிரிமினல்தனங்கள் இல்லாமல் ஆகுமா ?
உ பி சிறைக் கைதிகளுக்கு புனித நீரை லாரிகளில் அனுப்பி தொட்டிகளில் நிரப்பி புனித நீராட வைத்தார்களாம் … அப்படியெனில் அவர்கள் பாவம் தொலைந்து விட்டதே இன்னும் ஏன் சிறையில் அடைக்க வேண்டும்?[ அட ! சத்தமாகச் சொல்லாதீர்கள் ! சிறையில் இருக்கும் சங்கிகளுக்கெல்லாம் புனிதநீர் தெளித்து அனுப்பிவிடப் போகிறார்கள் ! ]
அரசு கொட்டிய பணம் எவ்வளவு ? அதன் பலன் என்ன ? அகோரி சாமியார் களும் அம்மண சாமியார்களும் வசூலித்த கோடிக்கணக்கான நிதிக்கு கணக்கு உண்டா ? வருமான வரி உண்டா?கும்பமேளாவில் நெரிசலில் செத்தவர்கள் ரயில் நிலையத்தில் செத்தவர்கள் உண்மைக் கணக்கு வெளியே சொல்லப்பட்டது உண்டா ? சொல்லாமல் மறைத்தது மட்டுமல்ல; அது குறித்த எல்லா செய்திகளையும் இரட்டடிப்பு செய்ய ஆணையிட்டது மட்டுமே மெய் !வந்த கணக்கும் பொய் … செத்த கணக்கும் பொய் … மக்களின் நம்பிக்கையை தங்கள் மதவெறி அரசியலுக்கு மூலதனமாக்கி விளம்பர வெளிச்சத்திம் முங்கியதே மிச்சம் !!!
சாதாரண மனிதன் பொய் சொன்னால் பாவம் ! சங்கிகள் பொய் சொன்னால் அது மகா புண்ணியம் போலும்! யோகி வார்த்தைகளைப் போல் சொல்வதாயின் , “ சங்கிகள் பார்வையில் கோமியம் அமிர்த நீர் ஆனது போல் சாக்கடை புனித நீராகும் ; புத்தியுள்ளவன் பார்வையில் மாட்டு மூத்திரம் ,சாணி ,சாக்கடை என்பது புலனாகும் !”