கலிஃபோர்னியா & லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளில் பயங்க்ரக் காட்டுத் தீ!
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவி உள்ளதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. தெற்கு கலிஃபோர்னியாவின் வனப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீ பலத்த காற்று காரணமாக மற்ற பகுதிகளுக்கும் அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பெரும் தொழிலதிபர்கள் வீடுகள் அமைந்துள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகர புறநகர் பகுதியை தீ சூழ்ந்துள்ளது.
அப்பகுதியிலிருந்து மக்கள் உடனடியாக வெளியேற தீயணைப்புத்துறை உத்தரவிட்டதை அடுத்து வாகனங்கள் உள்ளிட்ட உடமைகளை விட்டுவிட்டு சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேறினர். இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவியதால் ஏராளமான வீடுகள் பற்றி எரிகின்றன. இதுவரை 5 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான வனப்பகுதி மற்றும் குடியிருப்பு பகுதிகளை காட்டு தீ அழித்து விட்டதாக மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வனத்தை ஒட்டிய லாஸ் ஏஞ்சலஸ் நகர பகுதியில் உள்ள 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் ஆபத்தை எதிர்கொண்டுள்ளதால் தீயினை கட்டுப்படுத்தும் பணியில் கலிஃபோர்னியா தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.