தபேலா இசைக் கலைஞர் உஸ்தாத் ஜாகிர் உசேன் காலமானார்!
பிரபல தபேலா இசைக்கலைஞர் உஸ்தாத் ஜாகிர் உசேன் உடல்நலக் குறைவு காரணமாக, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்ட்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஜாகிர் உசேன் காலமானார். அவருக்கு வயது 73.
மும்பையில் மார்ச் 9, 1951-ல் பிறந்த ஜாகிர் உசேன் இசை உலகில் பெரும் புகழ்பெற்றவர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். இவரது தந்தை உஸ்தாத் அல்லா ரக்கா குரேஷியும் ஒரு சிறந்த தபேலா கலைஞர். தனது ஆரம்பக் கல்வியை மாஹிமில் உள்ள செயின்ட் மைக்கேல் பள்ளியில் முடித்த ஜாகிர் உசேன், மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
முன்னதாக சிறு வயதில் இருந்தே தபேலா வாசிப்பதில் சிறந்து விளங்கிய ஜாகிர் உசேன், வெறும் 11 வயதில் அமெரிக்காவில் தனது முதல் கச்சேரியை வெற்றிகரமாக நடத்தினார். தந்தையுடன் அவர் அந்த இசைக் கச்சேரியை நடத்தி இருந்தார். அதில் தனக்குச் சம்பளமாக ஐந்து ரூபாய் வழங்கப்பட்டதாகப் பின்னர் ஒரு நேர்காணலில் நினைவு கூர்ந்தார். வாழ்க்கையில் தான் பெற்ற அந்த ஐந்து ரூபாய்தான் மிக மதிப்புமிக்க சம்பாத்தியம் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். ஆரம்ப நாட்களில் ஜாகிர் உசேனுக்கு கடுமையான நிதி நெருக்கடிகள் இருந்தன. இதனால் வேறு வேலை செய்யச் சொல்லிக் கூட பலரும் அறிவுறுத்தினர். இருப்பினும், அதை எல்லாம் தாண்டி இசைத் துறைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
பொருளாதார சிக்கல் காரணமாக ஆரம்பக் காலத்தில் பல நாட்கள் அவர் ரயிலிலேயே பயணித்தார். அப்போது சில நேரம் அவருக்கு இருக்கை கூட கிடைக்காது. அப்போதெல்லாம் செய்தித்தாளை விரித்து தரையிலேயே கூட படுத்துத் தூங்குவாராம். ஆனால், அப்போதும் தனது தபேலாவின் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் உறுதி செய்து கொள்வாராம்.
அவரது முதல் ஆல்பமான 'லிவிங் இன் தி மெட்டீரியல் வேர்ல்ட்' (Living in the Material World) 1973ம் ஆண்டு வெளியானது. எந்தவொரு பொருளாக இருந்தாலும் அதில் இருந்து இசையை உருவாக்கும் வல்லமை கொண்டவர் ஜாகிர் உசேன். வீட்டின் சமையல் அறையில் உள்ள சாதாரண பொருட்களில் இருந்தும் கூட அட்டகாசமான இசையைக் கொண்டு வருவதில் கை தேர்ந்தவர்.. அவர் 1991-ல் பிளானட் டிரம்மிற்காக டிரம்மர் மிக்கி ஹார்ட்டுடன் இணைந்து பணியாற்றினார், இது கிராமி விருதை வென்றது.
பிந்தைய ஆண்டுகளில், ஜாகிர் உசேன் பல படங்களின் ஒலிப்பதிவுகளில் பங்களித்தார். ஜாகீர் உசேன் 1991-ல் சங்கீத நாடக அகாடமி விருது பெற்றார். அட்லாண்டாவில் நடந்த கோடைகால ஒலிம்பிக்கின் தொடக்க விழாவிற்கு இசையமைத்த குழுவில் இவரும் ஒருவராக இருந்தார். 2016-ம் ஆண்டு அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவால் வெள்ளை மாளிகைக்கு அனைத்து நட்சத்திர உலகளாவிய கச்சேரியில் பங்கேற்க அழைக்கப்பட்ட முதல் இந்திய இசைக்கலைஞர் ஆவார்.இந்த ஆண்டு, 66-வது கிராமி விருதுகள் வழங்கும் விழாவில், ஒரே இரவில் 3 கோப்பைகளை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவராக்கும்ர்.