அமெரிக்க பொருட்களென்றால் அதிக வரியா? இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
எங்கள் பொருட்களுக்கு நீங்கள் வரி விதித்தால், நாங்களும் உங்களுக்கு வரி விதிப்போம் என அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அவர் பதவி ஏற்க உள்ள நிலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில், அமெரிக்காவில் 1 பில்லியன் டாலருக்கு அதிகமாக முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து அனுமதிகளும் எளிதில் கிடைக்கும் என டிரம்ப் அறிவித்து இருந்தார்.
இது குறித்து மாநாட்டில் டிரம்ப் பேசியபோது, ''சில அமெரிக்கா பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிகம் விதிக்கப்படுகிறது. இந்தியா நிறைய வரிகளை விதிக்கிறது. பிரேசிலும் அதிக வரி விதிக்கிறது. அவர்கள் அதிக வரிகளை விதிக்க விரும்புகிறார்கள் என்றால், அதன்படி செயல்படட்டும். ஆனால் நாங்களும் அதே அளவுக்கு வரி விதிப்போம். எல்லா சூழ்நிலைகளிலும் அவர்கள் எங்களுக்கு வரி விதிக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு ஒரு சைக்கிளை அனுப்புகிறோம். எங்களிடம் ரூ.100 முதல் ரூ.200 வரை வசூலிக்கிறார்கள்.இந்தியா நிறைய கட்டணம் வசூலிக்கிறது. தொடர்ந்து அதிக வரி விதித்தால் நாங்களும் இந்தியாவுக்கு பரஸ்பர வரி விதிப்போம். இவ்வாறு அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கனடாவுக்கும் எச்சரிக்கை
இந்தியா மட்டுமின்றி சீனா, மெக்சிகோ மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளுடனான வர்த்தக விவகாரங்களை பற்றியும் டிரம்ப் குறிப்பிட்டு உள்ளார். இதனால், அவருடைய அடுத்த அரசில், பொருளாதார கொள்கைகளின் முக்கிய விஷயங்களில் ஒன்றாக கூடுதல் வரி விதிப்பது இருக்கும் என அவர் தெளிவுப்படுத்தி உள்ளார்.
அமெரிக்க எல்லை பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத போதை பொருட்கள் கடத்தல், அகதிகள் புலம்பெயர்தல் உள்ளிட்ட விவகாரங்களில் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளின் அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் 25 சதவீதம் அளவுக்கு வரி விதிக்க அவர் திட்டமிட்டு உள்ளார்.