சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி!
நம் நாட்டை புனர்நிர்மாணம் செய்தவர் சுவாமி விவேகானந்தர். இளைஞர்களை மிகவும் நேசித்தவர்; இளைஞர்களிடம் பெரிதும் நம்பிக்கை கொண்டவர். தன்னிடம் ஆற்றல் மிக்க நூறு இளைஞர்கள் இருந்தால் போதும் உலகத்தையே மாற்றி அமைக்க முடியும் என்று, இளைஞர்களை போற்றியவர். அதனால்தான் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை தேசிய இளைஞர்கள் தினமாகக் கொண்டாடுகிறார்கள்.
இப்போது கொல்கத்தா என்றழைக்கப்படும் கல்கத்தாவில் 1863-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாள் விஸ்வநாத தத்தருக்கும், புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்த சுவாமி விவேகானந்தருக்கு குடும்பத்தினர் வைத்த பெயர் “நரேந்திரநாத் தத்தா”. நரேந்திரநாத்தின் ஆன்மிக குரு இராமகிருஷ்ண பரமஹம்சர் ஆவார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த சுவாமி விவேகானந்தர் இளைஞர்கள் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தார். அதனால்தான் அவர் பிறந்த ஜனவரி 12ஆம் நாளை நடுவண் அரசு `தேசிய இளைஞர் தினமாக' அறிவித்தது. அதன்படி ஆண்டுதோறும் தேசிய இளைஞர் தினம் நாடு முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. "ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு அடிகோலாக இருப்பவர்கள் இளைஞர்கள்தான். அவ்விளைஞர்களை நல்வழிப்படுத்தி ஒழுக்கமான பாதையில் அழைத்துச் சென்றால் போதும். அதுவே நாட்டின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.
ஒழுக்கமே ஒரு மனிதனை உயர்ந்த இடத்துக்கு அழைத்துச்செல்லும் ; ஒழுக்கமே ஒரு மனிதனை பக்குவப்படுத்தும் ; ஒழுக்கமே ஒரு மனிதனை மேன்மைப்படுத்தும் ; ஒழுக்கமே எல்லாவற்றுக்கும் முதன்மையாகும். மேலும் அவற்றை உணர்த்தும் வகையில் இளைஞர்களிடம், உன்னுள் அனைத்து ஆற்றல்களும் இருக்கின்றன. உனக்கு நிகர் நீயே. உன் மீது நம்பிக்கை வை. உன்னால் எதுவும் முடியும் என ஆணித்தரமாக வலியுறுத்தினார் சுவாமிஜி. அதனடிப்படையில்தான், 100 இளைஞர்களை என்னிடம் ஒப்படையுங்கள். இந்திய திருநாட்டை உலகளவில் உயர்த்திக் காட்டுகிறேன்" என அவர் தீர்க்கமாக உரைத்தார். "தன்னம்பிக்கை உள்ளவர்களால் மட்டுமே தலைசிறந்த மனிதர்களாக உருவெடுக்க முடியும்" என்பதே சுவாமி விவேகானந்தரின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்.
ஒரு நம்பிக்கை வரும் முன்னதாக பல சந்தேகங்கள் நமக்குள் கிளம்பும், சந்தேகத்திற்கான விடை தெரியவந்ததும் நம்பிக்கையானது வேறூன்றி நிற்கும். அதே போல், சிறு வயதில் நரேந்திரருக்கு கடவுள் இருக்கிறாரா என்ற சந்தேகம் நிறைய இருந்தது. யாரிடமும் இதற்கான சரியான பதில் கிடைக்காத நேரத்தில், அவருடைய கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர் ஒருவர் மூலமாக ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி முதன்முதலில் கேள்விப்பட்டார். அத்தருணத்திலிருந்து ஸ்ரீராமகிருஷ்ணரை நேரில் சந்திக்க ஆர்வம் கொண்டிருந்தார்.
1881ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு நாள், தக்ஷினேஷ்வரில் உள்ள காளி கோயிலுக்கு ஸ்ரீராமகிருஷ்ணர் வருவதைத் தெரிந்துக்கொண்ட நரேந்திரன் அவரை சந்திக்க சென்றார். ஸ்ரீராமகிருஷ்ணரை கண்டதும் நரேந்திரனுக்கு இனம் புரியாத ஈர்ப்பு அவர்மேல் எழுத்தது. அவரிடம் கடவுள் குறித்த தனது சந்தேகத்தை கேட்டு தெரிந்துக்கொள்ளலாம் என்று நினைத்த நரேந்திரன் "ஐயா, நீங்கள் கடவுளைப் பார்த்தீர்களா?" என்று கேட்டார். நரேந்திரனின் கேள்விக்கு சிறிதும் தயங்காமல் ஸ்ரீராமகிருஷ்ணரும் பதிலளித்தார்: “ஆம், நான் உங்களைப் பார்ப்பது போல் அவரையும் தெளிவாகப் பார்க்கிறேன், மிகவும் தீவிரமான அர்த்தத்தில் மட்டுமே பார்க்கிறேன்.” என்றார். மேலும் கடவுளின் மீதான இருந்த பல சந்தேகங்களுக்கெல்லாம் ராமகிருஷ்ணர் அவருக்கு விடையளித்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணரின் தூய்மையான தன்னலமற்ற அன்பினால் கவரப்பட்ட நரேந்திரன், அவருக்கு சிஷ்யராக மாறினார். அதனால் ஸ்ரீராமகிருஷ்ணர் தங்கியிருந்த தஷினேஷ்வருக்கு அடிக்கடி செல்ல ஆரம்பித்து, இறுதியில் தனது ஆன்மீகவழியை தேர்ந்தெடுத்துக்கொண்டார். பின்னர், குருவின் போதனைகளை ஏற்று துரவறவாழ்க்கையை மேற்கொண்டு தனது பெயரை சுவாமி விவேகானந்தர் என்று மாற்றிக்கொண்டார். குருவின் காலத்திற்கு பிறகு சீடர்கள் அனைவரும் ஒன்று கூடி விவேகானந்தரை குருவாக ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் குருவின் போதனைகளை பரப்புவதற்காக இந்தியா முழுவதும் சுற்றுபயணத்தை மேற்கொண்டார். மக்களின் பயங்கரமான வறுமை மற்றும் பின்தங்கிய நிலையைக் கண்டு ஆழ்ந்து வருந்தினார். இந்தியாவின் வீழ்ச்சிக்கு உண்மையான காரணம் மக்கள் புறக்கணிப்புதான் என்பதை புரிந்துகொண்டு, அதை வெளிப்படையாக அறிவித்த இந்தியாவின் முதல் மதத் தலைவர் அவரே.
அவர் சந்தித்த வெகுஜனங்களுக்கு இரண்டு வகையான அறிவு தேவைப்பட்டது,
1.அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த அவர்களுக்கு உலக அறிவு மற்றும் ஆன்மீக அறிவு தேவை.
2. அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டி, அவர்களின் தார்மீக உணர்வை வலுப்படுத்த வேண்டும்
ஆகியவைதான்
இந்த இரண்டு வகையான அறிவையும் மக்களிடையே எவ்வாறு பரப்புவது? என்று யோசித்த சமயத்தில் அவருக்கு கிடைத்த பதில் கல்விதான்.
1893 இல் சிகாகோவில் உலக மதங்களின் பாராளுமன்றம் நடைபெறுவதைப் பற்றி கேள்விப்பட்டு அதில் கலந்து கொள்ள விரும்பினார். ஏனெனில் பாராளுமன்றம் போன்ற ஒரு இடத்தில்தான், தனது குருவின் செய்தியை உலகிற்கு முன்வைக்கவும், வெகுஜன மக்களை மேம்படுத்துவதற்கு நிதி சேகரிக்கவும் இயலும் என்று விரும்பி அமெரிக்காவிற்கு சென்றார்.செப்டம்பர் 1893 இல் நடைபெற்ற உலக சமயப் பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகள் அவரை 'தெய்வீக உரிமையால் சொற்பொழிவாளர்' என்றும் 'மேற்கத்திய உலகிற்கு இந்திய ஞானத்தின் தூதுவர்' என்றும் மக்கள் புகழ காரணமாய் அமைந்தன. பாராளுமன்றத்திற்குப் பிறகு, சுவாமி விவேகானந்தர் கிட்டத்தட்ட மூன்றரை வருடங்கள் ஸ்ரீ ராமகிருஷ்ணர் வாழ்ந்த மற்றும் போதித்த வேதாந்தத்தை, அமெரிக்காவிலும், லண்டனிலும் பரப்பினார்,அவர் ஜனவரி 1897 இல் இந்தியா திரும்பினார். இந்தியாவில் அவருக்கு எல்லா இடங்களிலும் உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. அவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியான சொற்பொழிவுகளை நிகழ்த்தினார், அப்பொழுது இவரின் சொற்பொழிவு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கல்கத்தாவில் 1897 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி ராமகிருஷ்ணா மிஷன் என்ற அமைப்பை நிறுவினார். இதன் மூலம் பல சமூக சேவைகள் செய்து வந்தார். பல ஏழை மக்கள் இவரது அமைப்பால் நலம்பெற்றனர். அவரது வாழ்நாள் முழுவதும் இந்தியாவில், துறவறம் மற்றும் பொது மக்களை ஊக்குவித்து, வழிகாட்டியாகக் கழித்தார். இடைவிடாத பணி, குறிப்பாக சொற்பொழிவுகள் மற்றும் மக்களை உற்சாகப்படுத்துதல் என்ற பரபரப்பிலேயே அவர் வாழ்வு இருந்ததால், அவரது உடல்நிலை இளம்வயதிலேயே மோசமடைந்தது. 1902 ஜூலை 4 இரவு தனது 39 வது வயதில் காலமானார்
இளைஞர்களுக்கு ஓர் உந்து சக்தியாக திகழ்ந்த 39 வயது வரை வாழ்ந்த இளைஞரின் பிறந்த நாளைத்தான் நாடெங்கிலும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடி வருகிறோம்.“நீங்கள் பாரத்தை அறிந்து கொள்ள வேண்டுமானால், சுவாமி விவேகானந்தரின் நுால்களைப் படியுங்கள். அவரிடத்தில் எல்லாமே ஆக்கபூர்வமானவை, அழிவை நோக்கி எடுத்துச் செல்லும் எதுவும் அவரிடமே கிடையாது. மனிதன் முழுமையான ஆண்மை உருக்கொண்டு விழித்து எழுவதையே விவேகானந்தரின் நற்செய்திகள் கற்பிக்கின்றன. ஆகவே தான் அவருடைய உபதேசத்தால் நம் இளைஞர்கள் துாண்டப்பட்டு, தொண்டின் மூலமும், தியாகத்தின் மூலமும் விடுதலைக்கான வழிகளில் பணிபுரிந்தனர்,” என்றார் ரவீந்திரநாத் தாகூர்.