For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஜமா என்றால் என்ன?அப்படத்தின் ஸ்பெஷல் என்ன?

07:57 PM Jul 18, 2024 IST | admin
ஜமா என்றால் என்ன அப்படத்தின் ஸ்பெஷல் என்ன
Advertisement

‘கூழாங்கல்’ படத்தைத் தயாரித்த லேர்ன் அன்ட் டீச் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சாய் தேவானந்த் புரொடக்‌ஷனில் அறிமுக இயக்குநர் பாரி இளவழகன் டைரக்ட் செய்து , நடித்துள்ள படம் ‘ஜமா’. இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், மணிமேகலை, வசந்த் மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தெருக்கூத்து கலைகளில் பல குழுக்கள் இருக்கும் நிலையில் அதில் ஒரு குழுவினரை 'ஜமா' என அழைக்கின்றனர். அவர்களின் தெருக்கூத்து மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் சவால்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் பத்திரிகையாளர்கள் சந்தித்து பேசினர். அப்போது இயக்குநர் பாரி இளவழகன் பேசுகையில் "நான் தெருக் கூத்தை சார்ந்தவன். என்னுடைய கிராமத்தில் சொந்த பந்தங்கள் பலர் தெருக் கூத்தில் இன்றளவும் நடித்து வருகின்றனர். நடிகனாகணும்னு ஆசைப்பட்டு சினிமாவுக்கு வந்தேன். அதுக்காக முறையா நடிப்பு கத்துக்கிட்டேன். உதவி இயக்குநராகவும் வேலை செஞ்சிருக்கேன், சில குறும்படங்கள் எடுத்திருக்கேன். நடிக்க நிறைய முயற்சி பண்ணினேன். ஏழெட்டுப் படங்கள்ல சின்னச் சின்ன கேரக்டர்கள்ல நடிச்சிருக்கேன். நடிகனா ஒத்துக்க வைக்கிறதுக்கு ரொம்ப கஷ்டப்படுறோம். ‘இவன் நடிப்பான்’னு நம்பிக்கை இருந்தாலும், ஒரு பெரிய ரோலை இவன்கிட்ட கொடுத்தா சரியா பண்ணிடுவானான்னு யோசிக்கிறாங்க. அந்த நம்பிக்கை புது நடிகன்கிட்ட கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். ‘சரி, நமக்கு நம்மளே எழுதலாம். 10 லட்ச ரூபாய் இருந்தால்கூட எடுத்திடலாம்’னு நினைச்சுப் பண்ணின கதை ‘ஜமா.' நாடகக்குழுவை ஜமானு சொல்வாங்க. திருவண்ணாமலை மாவட்ட கிராமத்துல இருக்கிற நாடகக்குழுவையும் கூத்துக் கலைஞர்களையும் பத்தின கதை இது. நானே கதை எழுதி, இயக்கி, லீடு ரோல்ல நடிச்சிருக்கேன்...!

Advertisement

தற்போது வந்த கலைப் படைப்புகள், தெருக்கூத்தில் நடிப்பவர்கள் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் கஷ்டப்படுகிற மாதிரியும், அந்தக் கலை அழிவு நிலையில் இருப்பதாகவும் ஒரு தவறான முன்னுதாரணத்தை சொல்வதுபோல உள்ளது. ஆனால் அப்படி யாரும் கஷ்டப்படுவதில்லை. நான் தொடர்ந்து தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையைக் கவனித்து வருகிறேன். படத்தில் அவர்களின் வாழ்க்கை முறையில் எதைப் பற்றி பேச வேண்டுமென்றால், பெண் வேடமிட்டு நடிப்பவர்களை பற்றிதான் பேச வேண்டும், ஏனென்றால் அவர்கள் தான் கிண்டல், கேலிக்கு ஆளாக்கப்படுகிறார்கள். சில கிராமங்களில் அவர்களின் புடவை இழுத்து பாலியல் துன்புறுத்தலும் ஏற்படுகிறது, அதில் சிலவற்றை மட்டும்தான் படத்தில் காட்சிப்படுத்த முடிந்தது. எந்த அளவிற்கு உண்மையாக அவர்களைப் பற்றி கூறமுடியுமோ அந்த அளவிற்கு படத்தில் பேசியுள்ளோம்" என்றார்.

இந்த படத்துக்கு இளையராஜா கமிட் ஆனது குறித்து கேட்டப் போது '' அது ஒரு இன்ப அதிர்ச்சிதான்..இந்த படத்தின் ஸ்பெஷலே அவராகிவிட்டார்.ஆரம்பத்தில் யார் மியூசிக் பண்ணுனா நல்லாருக்கும்னு பேசிட்டிருந்தோம். அவங்க அவங்க ஐடியாக்களையும் ஆப்ஷன்களையும் எல்லோரும் சொன்னார்கள்.ஆனால் எனக்கு ராஜா சார் பண்ணினால் சூப்பரா இருக்கும் என்று தோணியது. அப்படி நான் ராஜா சார் பெயரைச் சொன்னதும் எல்லோருக்கும் ஷாக். ‘என்ன, விளையாடுகிறீர்களா? அவர் எப்படி நம்ம படத்துக்கு மியூசிக் பண்ணுவார்? எப்படி போய் கேட்பது?. வாய்ப்பே இல்லை' என்றெல்லாம் சொன்னார்கள். ‘நீங்க அவர் மேனேஜர் நம்பரை மட்டும் வாங்கிக் கொடுங்க. நான் பேசிப் பார்க்கிறேன். இல்லைன்னா இல்லைன்னு சொல்லட்டும். முயற்சி பண்ணலாம்'னு தயாரிப்புத் தரப்பிடம்  சொன்னேன்.வாங்கிக் கொடுத்தார்கள். பேசிட்டு நேரில் சாரை மீட் செய்ததும் ‘ஐயா, வணக்கம். நான் திருவண்ணாமலையில இருந்து வர்றேன்'னுதான் சொன்னேன். என் பெயரைக்கூட சொல்லவில்லை. திருவண்ணாமலை என்றால் அவருக்கு நெருக்கமா இருக்கும் என்று நம்பியே அப்படிச் சொன்னேன். ‘தெருக்கூத்து வெச்சு ஒரு படம் பண்ணியிருக்கேன். இந்தக் கதையைப் பத்தி எல்லோருக்கும் புரிஞ்சுக்க எட்டு நிமிஷத்துக்கு பைலட் ஷூட் பண்ணியிருக்கேன்'னு சொன்னேன். ‘போடு'ன்னு சொன்னார். போன்லயே அவருக்குக் காட்டினேன். பார்த்துட்டு என்னைப் பார்த்து சிரிச்சப்படியே கமிட் ஆயிட்டார்'' என்றார்.

தயாரிப்பாளர் கிடைத்த அனுபவத்தைக் கேட்டப் போது ,'' வசந்த் மாரிமுத்து என்ற நண்பர் ஆதரவில் இந்த் ஸ்கிரிப்டை எட்டு நிமிஷத்துக்கு பைலட் பிலிம் எடுத்தேன். ‘அயலி' தயாரிப்பாளர்கிட்ட காட்டினோம். ரொம்பப் பிடிச்சுப்போய் நெட்ப்ளிக்ஸ்ல சீரிஸா பண்ணலாம்னு சொன்னாங்க. ஆனா, எனக்குப் படமாதான் எடுக்க வேண்டும் என்று ஆசை . இந்தப் படத்தின் கேமராமேன் கோபால் கிருஷ்ணா, ‘எனக்குத் தெரிஞ்ச தயாரிப்பாளர் ஒருத்தர் இருக்கார். அவர்கிட்ட கேட்டுப் பார்க்கலாம்'னு சொல்லிக்கிட்டே இருந்தார்.

இவரும் சொல்லிக்கிட்டே இருக்காரேன்னு, அவர்கிட்ட போன்ல பேசி பைலட் பிலிமை அனுப்பி வெச்சேன். ரெண்டு வாரத்துல கூப்பிடுறேன்னு சொன்னவர், பார்த்த அடுத்த நிமிஷமே கால் பண்ணி படம் பண்ணலாம்னு சொல்லிட்டார். 15 நாள்ல ஆபீஸ் போட்டாச்சு. அப்புறம்தான், இவங்க ‘கூழாங்கல்' படத்தின் தயாரிப்பாளர்னு தெரிந்தது. ரெண்டு மாதத்தில் ஷூட் போனோம். 35 நாள்ல முடித்தும் விட்டோம்.’’ என்று தெரிவித்தார்.

நடிகர் சேத்தன் தனது கதாபாத்திரம் பற்றி விவரித்தப் போது, “’விடுதலை’ படத்தை பார்த்துவிட்டு தான் என்னை இந்த படத்தில் நடிக்க வைக்க அணுகினார்கள். அவர் என்னிடம் கதை சொல்வதற்கு முன்பு, இந்த கதை பற்றி பைலட் வீடியோ ஒன்றை எனக்கு அனுப்பினார். அந்த வீடியோ பார்த்ததும் இது சாதாரண வேடம் இல்லை என்பதை புரிந்துக்கொண்டேன். அதற்காக தான் கூத்து வாத்தியாரிடம் முறையாக பயிற்சி எடுத்துக்கொண்டதோடு, படப்பிடிப்பு தொடங்கும் சில நாட்களுக்கு முன்பாக படப்பிடிப்பு நடக்கும் கிராமத்திற்கு சென்று, தெருக்கூத்து கலைஞர்களுடன் பழகி, சில நுணுக்களை கற்றுக்கொண்டேன். நிச்சயமாக இந்த படம் என் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.” என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் கூறுகையில், ‘கூழாங்கல்’ போன்று ‘ஜமா’ படமும் சிறப்பான, மக்களுக்கான படமாக அமைந்திருக்கிறது. நயன்தாரா மூலம் முந்தைய படத்திற்கு  ஒரு அடையாளம் கிடைத்தது. அதுபோல் இந்த படத்தையும் மற்றவர்களிடம் கொடுக்க நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்களே நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம். ‘கூழாங்கல்’ படத்தை திரையரங்குகளில் வெளியிட தான் முயற்சித்தோம், ஆனால் அது முடியாமல் போய்விட்டது. ஆனால், இந்த படத்தை நிச்சயம் திரையரங்குகளில் தான் வெளியிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். காரணம், இந்த படத்தை மக்கள் பார்க்க வேண்டும், இந்த படம் மக்களை சென்றடைந்து, கமர்ஷியலாகவும் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். படமும் அதற்கு ஏற்றவாறு தான் இருக்கிறது.” என்றார்.

கோபால கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகவும், பார்த்தா எம்.ஏ படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ள இப்படம் ஆகஸ்ட் 2இல் ரிலீஸ் ஆக இருக்கிறது.

Tags :
Advertisement