மக்களே மக்களுக்கான பாதுகாப்பு!
உலகம் முழுவதும் பாலஸ்தீன இனப் படுகொலையை எதிர்த்துப் பெரும் திரளாய் மக்கள் போராடுகிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து உதவியுடன் இசுரேல் படுகொலையைத் தீவிரப்படுத்துகிறது. இசுரேலைப் பாதுகாக்க அமெரிக்கா மேற்கு ஆசியாவில் தாக்குதலை நடத்துகிறது. ஈரானில் குண்டு வெடிப்பை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மூலமாக நடத்தி 200 பேரைக் கொன்றார்கள். ஈராக்கில் தாக்குதலை நடத்தியுள்ளது. லெபனான் மீது தாக்குதல் நடத்துகிறது. சிரியாவின் தலைநகர் டெமாஸ்கஸ் மீது குண்டு வீசுகிறது. அமெரிக்கப் படைகளைத் தம் நாட்டிலிருந்து வெளியேற வேண்டுமென ஈராக் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பை அமெரிக்கா உதாசீனப்படுத்தி, தாம் ஈராக்கில் இருப்பதற்கான தேவை உள்ளதாகச் சொல்கிறது.
பிற நாட்டில் அத்துமீறித் தன் ராணுவத்தை நிறுத்தி வைக்கும் அமெரிக்க ஆக்கிரமிப்பு வெறியை யாரும் கண்டிக்கவில்லை. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக யேமனின் படைகள் பாப்-எல்-மெண்டெப் கடல் சந்தியை அடைத்திருப்பதால் இசுரேலுக்குச் செல்லும் கப்பல்கள் தடைப்படுகின்றன. இதனால் இசுரேலின் ஹைஃபா துறைமுகம் ஆள் அரவமின்றி மாறிவிட்டது. இது அதானியின் கையில் இருக்கும் துறைமுகம். இதன் மீது இரு நாட்களுக்கு முன் குண்டு வீசப்பட்டது. யேமனின் தடையை நீக்கிக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக அமெரிக்கக் கப்பல்படை அறிவித்தது. உலக நாடுகளுக்கும் அறைகூவல் விடுத்தது. எவரும் சேர்ந்தபாடில்லை. இந்தத் தடையால் இசுரேல் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் செல்கிறது.
இந்நிலையில் அல்ஜீரியாவின் வான் பரப்பில் நுழைந்து இசுரேல் நோக்கிச் சென்ற அமெரிக்க விமானப் படை விமானத்தைத் திருப்பி அனுப்பியது அல்ஜீரியா. லிபியா தனது கடற்பரப்பில் இசுரேலின் கப்பலை அனுமதிக்கப் போவதில்லை எனும் செய்தி வெளியாகி இருப்பதாகச் சொல்லப் படுகிறது. லெபனானில் இருந்து இசுரேல் நோக்கிய தாக்குதலை ஹிஸ்புல்லா மேற்கொள்கிறது. அதன் தளபதிகள் கொல்லப்பட்டபோதும் அது தன் தாக்குதலை நிறுத்தவில்லை. இசுரேலைக் கடல் முற்றுகைக்குள் யேமனும், லெபனானும் தள்ளுகின்றன. ஈரானின் தளபதிகள் மீது தாக்குதல் நடத்தி அமெரிக்கா கொலை செய்கிறது. மேற்கு ஆசியாவில் கிட்டத்தட்ட 40,000 படைகளை அமெரிக்கா வைத்துள்ளது.
இசுரேலுக்கு சவுதி, அமீரகம், ஜோர்டான் அரசுகள் மறைமுக உதவிகள் செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இசுரேலுக்கான கச்சா எண்ணையைத் துருக்கி இன்றும் அனுப்பிக்கொண்டிருக்கிறது. துருக்கி அதிபர் இசுரேலைக் கடுமையாக எச்சரித்துக்கொண்டே மறுபுறம் அவரது மகன் நடத்தும் நிறுவனம் மூலமாக இசுரேலுக்கு அனுப்பப்படும் பொருட்களைத் தடை செய்ய மறுக்கிறார்.
நேட்டோ படையில் இருக்கும் துருக்கி இசுரேல் மீதான நெருக்கடியைக் கொண்டு வரவில்லை. ஆனால் இந்நாடுகளில் சாமானிய மக்கள் லட்சக்கணக்கில் திரள்கிறார்கள். சவுதி, அமீரகம், ஜோர்டான், எகிப்து போன்ற நாடுகள் கைகோத்திருந்தால் பாலஸ்தீனம் மீதான கொடூரப் போர் இரண்டு நாட்களில் முடிவுக்கு வந்திருக்கும். இந்த நிலையில் இசுரேலுக்கு எதிராக, இனப்படுகொலை குற்றச்சாட்டு வழக்கைச் சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா பதிவு செய்தது. மிக நேர்த்தியாகத் தொகுக்கப்பட்ட இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணைக்கு முன் தினம் போப்பாண்டவர் இசுரேலைக் கண்டித்து அறிக்கை வாசிக்கிறார். பாலஸ்தீனம் மீதான இசுரேலின் கொடூரப் போர் இலங்கையின் போர் மாதிரியைக் கொண்டது.
இதே சமயம், காசா படுகொலை சாட்சிகளுடன், கண் முன்னே காணொளியாக உலகம் காண்கிறது. ஊடகம் நிற்கிறது, ஊடகவியலாளர்கள் படுகொலை ஆகிறார்கள். ஆனாலும் போரை நிறுத்த இயலவில்லை. ஐ.நா அமைப்பு மட்டுமல்ல, அதன் ஊழியர்கள் 120 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உலகெங்கும் இசுரேலிய ஆதரவுப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதை அரசியல் செயல்பாட்டாளர்கள் அம்பலப்படுத்துகிறார்கள். ஹமாஸின் செயல்களைக் கண்டியுங்கள் என்பதை அறிவுசீவிகள் புறந்தள்ளிவிட்டார்கள். வி.புலிகள் மீது குற்றம் சுமத்திவிட்டு அமைதி காக்கும் அறமற்ற இந்திய - தமிழக அறிவுசீவிகளைப் போல அல்லாமல், இசுரேலின் ஜியோனிசத்தை நோக்கிக் கேள்வி எழுப்புகிறார்கள். ஜியோனிசத்தை யூதர்களே இப்போது எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இசுரேலிய உழைக்கும் வர்க்கத்தை ஏன் ஹமாஸ் வென்றெடுக்கவில்லை என இந்தியப் போலிப் புரட்சியாளர்களைப் போல வறட்டுவாதத்தை மேற்குலக இடதுசாரிகள் பேசவில்லை. நோவாபால் ஹரிரியின் புலம்பல்கள், அதற்கு முட்டுக் கொடுத்த சைஜக் போன்ற இசுரேலிய சமரசவாதிகளின் கதையாடல்கள் எடுபடவில்லை. பாலஸ்தீன தேசிய விடுதலையை இடதுசாரி உலகம் அங்கீகரிக்கிறது.
1945க்குப் பின் பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தி வெளியேற்றிய 'நக்பா' நிகழ்வை ஒட்டியே இலங்கைப் பேரினவாதமும் சோல்பெரியை சாதகமாக்கிக்கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றித் தமிழர்களை வெளியேற்றும் திட்டத்தை 1949ல் நடத்துகிறது. இரண்டு நிகழ்வும் கிட்டத்தட்ட சம காலத்தவை. பாலஸ்தீனத்தைப் போல ஈழமும் 16,000 சதுர கிலோமீட்டரை 20 - 30 ஆண்டுகளுக்குள் இழந்தார்கள், தமிழ் மக்கள் தொகையில் இரு மில்லியனை நாடற்றவர்களாக இலங்கை மாற்றியது. அமெரிக்க - இங்கிலாந்து ஆதரவுடன் இசுரேலின் ஜியோனிசம் வலிமையான ராணுவக் கட்டமைப்பை உருவாக்கியது. இதே மேற்குலக, இந்தியப் பார்ப்பன அதிகாரிகளின் உதவியோடு இலங்கை சிங்களப் பேரினவாதம் வலிமையான ராணுவத்தைப் பெற்றது. 1983ல் இலங்கை சிங்கள இராணுவம் 12,000 எனும் அளவில் இருந்தபோது ஒட்டுமொத்தத் தமிழ்ப் போராளிகளின் எண்ணிக்கை 40,000. தமிழ்ப் போராட்டம் வெற்றியடைந்து, இலங்கை ராணுவம் சரணடையக்கூடிய நிலையை மாற்றப் பல்லாயிரக்கணக்கான படைகளை இந்தியா இறக்கியது, போராளிக் குழுக்களுக்கு உள்ளாக முரணை வளர்த்துச் சமநிலையை மாற்றியது.
இதேபோல பாலஸ்தீனத்தின் படையை முடக்குவதில் சக அரபு நாடுகள் ஒத்துழைத்தன. ஈரானின் உதவி இல்லாமல் போயிருக்கும் எனில் ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுத்தீஸ் எழுந்திருக்க முடிந்திருக்காது. இந்த மக்கள் படைகளே இன்று இசுரேல், மேற்கு உலகப் படைகளை எதிர் கொள்கின்றன. ஒருவகையில் ஈரானின் மீதான நேரடியான மேற்கு உலகப் போரைத் தடுத்தும் வருகின்றன. பாப்-எல்-மாண்டெப், ஹோர்முட்ஸ் ஆகிய உலகின் போக்கைத் திசை மாற்றும் வலிமை கொண்ட கடல் சந்தியை ஈரான் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இப்போராளிக் குழுக்களே காரணம். இப்பிராந்தியம் முழுமையும் தமக்கான அரசியலையும், சாமானிய இசுலாமிய மக்களுக்கான பாதுகாப்பையும் உருவாக்கியதன் வழியாக ஈரான் பிராந்திய வலிமை கொண்டதாக மாறியிருக்கிறது.
மாறாக, இந்தியாவின் பார்ப்பனியத்தின் தமிழின விரோதக் கொள்கைகள், இலங்கை, இந்தியக் கடல் பரப்பிற்கு உள்ளாக அமெரிக்க, சீனக் கடல் படைத் தளத்தை உருவாக்கும் அளவு தோல்வியில் முடிந்துள்ளது. தெற்காசிய பிராந்தியத்தின் ஆற்றல்மிகு படைகளாக எழுந்த புலிகளை அழித்ததன் மூலமாக இப்பிராந்தியத்தை மேற்குலகிற்கும், சீனாவிற்கும் தாரை வார்த்தார்கள் தமிழகப் பார்ப்பனர்கள். இதில் 'தி இந்து' ராம், சு.சாமி, சோ ஆகியோரின் பங்களிப்பு மிக மிகக் காத்திரமானது. பர்மா போராளிக் குழுக்கள், பங்களாதேசப் போராளிகள், நேபாளப் போராளிகள், ஈ.ழப் போராளிகளை அழித்ததன் மூலமாக நிரந்தரப் பகையை அண்டை நாடுகளில் இந்தியா உருவாக்கியதற்குக் காரணம், இந்திய வெளியுறவுப் பாதுகாப்புத் துறைகள் பார்ப்பன ஆதிக்கத்தின் கீழ் இருந்ததே காரணம். இந்த நாடுகள் மட்டுமல்லாது, தற்போது மாலத்தீவு, பூடான் போன்ற மிகச் சிறு நாடுகள் சீனத்துடன் கைகோர்க்கின்றன. உள்நாட்டிற்குள் சாமானிய மக்களைச் சனதானத்தின் கீழ் அடக்குகிறது, அண்டை நாடுகளில் மேலாதிக்க மனோபாவத்தின் கீழ் முரண்படுகிறது.
எல்லா வகையிலும் இந்தியப் பார்ப்பனிய ஆளும் வர்க்கம் இந்தியாவைத் தோல்வியடைந்த நாடாக மாற்றிவிட்டது. இது நம் மீது பேரழிவைக் கொண்டு வருவதைத் தவிர்க்க இயலாது. பாலஸ்தீன அழிவிற்கு ஏன் தென்னாப்பிரிக்கா நீதி கேட்கச் செல்கிறது? நேற்று ஈழம், இன்று பாலஸ்தீனம், கடந்த நாட்களில் ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, லெபனான் என அழிவுக்கரங்கள் நீண்டன. இது நாளை யாரை வேண்டுமானாலும் அழிக்கலாம். இதை நிறுத்தியாக வேண்டும். இது மானிட குலத்திற்கு எதிரானது. பாலஸ்தீனப் போர் ஆப்பிரிக்காவிற்கும் பரவும், ஆசியாவில் விரிவடையும். ஈரானுடன் மோதல் துவங்கும் எனில், அமெரிக்காவின் பாதுகாப்பான கடல்தளமாகத் திருகோணமலை மட்டுமல்ல, காட்டுப்பள்ளித் துறைமுகமும் முக்கியத்துவம் பெறும்.
அப்படி எனில் தமிழ் கடல் பரப்பும், நிலப்பரப்பும் இராணுவ முக்கியத்துவம் பெறும். இலங்கை கடற்படைத் தாக்குதலில் இருந்தே தமிழரைக் காக்காத இந்தியப்படை உலகளாவிய போரில் என்ன பாதுகாப்பைச் செய்துவிடும்? ஈ.ழ அரசியலின் சர்வதேசத் தன்மையைப் பார்ப்பனிய ஆதிக்கத்தைப் புரிந்து கொள்ளாத எவரும் முழுமையான அரசியல் நோக்காளர்களாக முடியாது. ஈ.ழ அரசியல் தமிழ்நாட்டுக்கு எதற்கு எனக் கேட்பவர்கள், ஈ.ழ - இலங்கை அரசியலில் எதற்காகப் பார்ப்பனக் கூட்டம் இன்றளவும் அதிதீவிர ஆர்வம் காட்டுகிறது என்பதற்கு பதில் தேடட்டும். சிங்களனோடு பார்ப்பனர்களுக்கான உறவு வலுப் பெற்றுக் கொண்டிருக்கும் எனில், தமிழர்கள் மட்டும் ஏன் பிரிந்து நிற்க வேண்டும் என்பதற்கும் பதில் கண்டறியட்டும். பாலஸ்தீனத்திற்குச் சக சாமானியர்களே குரல் கொடுக்கிறார்கள். உலகளாவிய கட்சி அரசியல் தோற்றிருக்கிறது. கட்சி - ஆட்சி கடந்து மக்கள் பாலஸ்தீனத்திற்காகக் குரல் எழுப்புகிறார்கள், போராடுகிறார்கள். மக்களே மக்களுக்கான பாதுகாப்பு என்பதை வரலாறு மீண்டும் நமக்குச் சொல்கிறது.