For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

உலக தேனீக்கள் நாள்

07:27 AM May 20, 2024 IST | admin
உலக தேனீக்கள் நாள்
Advertisement

னிதனுக்கு எல்லா வகையிலும் முன்னோடியாக இருப்பது தேனீக்கள்தான் என்றால் நம்ப முடிகிறதா.. நம்ப முடியவில்லை என்றாலும் அதான் நிஜம்.. சுறுசுறுப்புக்கு எடுத்துக்காட்டு தேனீக்கள். இதனிடம் இருந்து உழைப்பை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். தேனீக்கள் பல வழிகளில் மனிதர்களுக்கு உதவியாக உள்ளன. தேனீக்களை பாதுகாக்க வலியுறுத்தி மே 20ல் உலக தேனீக்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் ஸ்லோவேனியாவில் நவீன தேனீக்கள் வளர்ப்பு முறைகளின் முன்னோடியான அன்டோன் ஜன்சா என்பவரின் பிறந்த தினம் தான் மே 20. அவரது பிறந்த நாளில் தான் தற்போது தேனீக்கள் தினம் கொண்டாடப்படுகிறது. 2016 ஆம் ஆண்டில் தேனீ வளர்ப்பாளர் சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பான அபிமோண்டியா மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆகியவற்றின் உதவியுடன் ஸ்லோவேனியா குடியரசினால் இந்த தினத்தை கடைபிடிப்பதற்கான பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்தே 2017 ஆம் ஆண்டு உலக தேனீக்கள் தினத்தின் பரிந்துரையானது உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் 40வது பதிப்பின் போது கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 2017 ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையானது மே 20 ஆம் தேதியை உலக தேனீக்கள் தினமாக ஒரு மனதாக அறிவித்தது.

Advertisement

பொதுவாக ஒரு தேன் கூட்டை பார்த்தால் என்ன தோன்றும் அதில் தேன் இருக்கும் தேனீக்கள் இருக்கின்றன என்று மட்டும் தானே. ஆனால் அதில் உள்ள பிரம்மாண்டத்தை பார்த்து இருக்கிறீர்களா?. ஒரு தேன் கூட்டில் குறைந்தபட்சமாக 80,000 தேனீக்கள் இருக்கும். அதில் ஒரே ஒரு ராணித் தேனீ மட்டும்தான் இருக்கும். 250-க்கும் அதிகமான ஆண் தேனீக்கள் இருக்கும். இதில் ஆண் தேனீக்கள் 90 நாட்கள் வரை உயிருடன் இருக்கும். ஆனால், ராணித் தேனீ 2 லிருந்து 7 வருடம் வரை உயிருடன் இருக்கும். வேலைக்கார தேனீக்கள் அதிகபட்சமாக 42 நாள்கள் உயிருடன் இருக்கும். இராணித் தேனீ ஒரு நாளைக்கு 2,000 முதல் 3,000 முட்டைகள் வரை இடும். வருடத்துக்கு 5 இலட்சம் முதல் 7 இலட்சம் வரை முட்டைகள் இடும். தன் மொத்த வாழ்நாளில் ஏறத்தாழ 1 மில்லியன் முட்டைகள் வரை உருவாக்கும்.

Advertisement

கொஞ்சம் டீட்ய்லா சொல்வதானால் , ,மனிதன் எப்படி இயங்கவேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணம் இந்த தேனீக்கள்தான். ஒரு கூட்டிலிருக்குற ஆயிரக்கணக்கான தேனீக்கள்ல ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு குழுவை அமைச்சு, மனுஷனைவிட அபாரமா செயல்படுதுங்க தேனீக்கள். கூட்டிலிருந்து எந்தத் திசையில, எவ்வளவு தூரத்துல, எந்தப் பூவுல தேன் இருக்குதுங்கிறதைப் பார்த்துட்டு வந்து, அதை நடன மொழியில சொல்றதுக்காகத் தகவல் தொடர்புக்குழு. சொல்லும் தகவலைப் புரிஞ்சுகிட்டு, அதுங்க சொன்ன திசையில போயி, தேனை எடுத்துட்டு வர்ற பொருள் சேகரிக்கும் குழு; தேனை எடுக்கப் போய், குறிப்பிட்ட பூவுல உக்கார்ந்ததுமே அதுல இருகுற ஏதாவது ஒரு விஷயத்தால (ரசாயனங்கள் உள்ளிட்ட) உடம்பு சரியில்லாம போயிடுற தேனீக்களுக்கு வைத்தியம் பார்க்குற மருத்துவக்குழு; மருத்துவத்துக்குப் பயனில்லாம இறந்துபோற தேனீக்களைக் கூட்டிலிருந்து அப்புறப்படுத்துற துப்புரவுக்குழு; இளம் தேனீக்களைப் பராமரிக்குற தாதிக்கள் குழு... இப்படியொரு ஒழுங்கோட தேனீக்கள் வாழுற வாழ்க்கையைப் பார்த்தா, நாமெல்லாம் சும்மா..?'னு வாய்விட்டு உங்களையும் அறியாம கூப்பாடு போட்டுடுவீங்க!

ஒரு கூட்டில் மூன்று வகையான தேனீக்களின் கூட்டணி இருக்கும்.

ஒரேயொரு இராணித் தேனீ
ஆயிரக்கணக்கான ஆண் தேனீக்கள்
பல்லாயிரக்கணக்கான வேலைக்காரத் தேனீக்கள்..
இனவிருத்தி வேலை இராணித் தேனீக்கு மட்டுமே!
உயிர்வாழுங் காலம் என்று பார்த்தால் இராணித் தேனீ 3 வருடங்கள்.
வேலைக்காரத் தேனீ 35 நாட்கள்
ஆண் தேனீக்கள், இராணித் தேனீயுடன் உறவு கொண்டவுடன் மடிந்து விடும்.

தேனீக்களுக்கு மொத்தம் 6 கால்கள் உள்ளன. அது தன் இறக்கைகளை ஒரு நிமிடத்துக்கு 11,400 முறை வேகமாக அடிக்கும். அதாவது ஒரு வினாடிக்கு 190 முறை அடிக்கும். ஒரு மணி நேரத்தில் 25 கி.மீ வேகத்தில் பறந்து செல்லும். இவை தேன் சேகரிக்கும் முறை உலகின் சிறந்த உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பமாகும். முதலில் பூக்களில் உறிஞ்சம் தேனை தன் உடலிலுள்ள தேன் பையில் சேகரித்துக் கொள்ளும்.. இந்தத் தேன் சமிபாடு அடையாமல் தேனீயின் வயிற்றில் இருக்கும் நொதியங்களுடன் சேர்ந்து திரவமாக மாறிவிடும் . கூட்டுக்கு திரும்பி வரும் தேனீக்கள், கூட்டின் வாசலில் காத்திருக்கும் தேனீக்களிடம் , வயிற்றிலுள்ள திரவத்தை ஒப்படைக்கும். இதற்காக ஏப்பமிட்டு, ஏப்பமிட்டு தேன் பையிலிருக்கம் திரவத்தை வெளியில் கொண்டுவந்து எதிர் தேனீயின் வாயில் கொட்டும். ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான் ஒரு துளி தேன் சேரும். இதோடு கதை முடியவில்லையே..!

கூட்டைப் பராமரிக்கும் தேனீக்கள் அந்தத் திரவத்தை, கூட்டின் ஓர் ஓரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி, அதில் “இன்வர்டோஸ்”invertose என்னும் நொதியத்தை சேர்க்கும். பிறகு அந்தத் திரவத்திலிருந்து நீர்த்தன்மை வற்றிப் போவதற்காக தன் இறக்கையை ஆட்டி ஆவியாக்கும். அதன் பின்னர் தேனைப் பாதுகாக்க ஒருவகை மெழுகைப் பூசி வைக்கும். இங்கேதான் நாம் விரும்பிச் சுவைக்கும் தேன் கிடைக்கின்றது. ஒரு பெரிய தொழிற்சாலை இயங்குவது போன்ற கட்டமைப்பை உணர முடிகிறதல்லவா?

இப்படியெல்லாம் கட்டுப்பாட்டோட வாழுற அந்தத் தேனீக் கூட்டம், முழுக்க முழுக்க வாழுறது தனக்காக இல்லீங்க... ஊருக்காக, உலகத்துக்காக. பல்வேறு ஜீவராசிகளுக்காக அதுங்க வாழுது. அதாவது அயல் மரகந்தச்சேர்க்கை மூலமா தாவர இனங்களை வாழ வைக்குது. ஆடு, மாடு, மனுசன், புழு, பூச்சினு பல ஜீவராசிகளுக்கும் உணவு கிடைக்கிறதே இந்தத் தாவரங்களாலதானே! அதை விவசாயம்ங்கிற பேருல நாம, ஒரு தொழிலாக்கி, காலகாலமா செய்துட்டிருக்கோம். உலகத்துல இருக்கற அதிஉன்னதமான புனிதத் தொழில்ல, முதல இருக்குற ஒரு தொழில்னா... தேனீக்கள் செய்ற மகரந்தச்சேர்க்கையைச் சொல்லலாம். கிட்டத்தட்ட நாம செய்துகிட்டிருக்கிற விவசாயத்துக்கும் மேலான தொழில்.

மனிதன் உண்ணுகிற உணவில் 75 சதவீதத்திற்கு மேல் தேனீக்களின் அயல் மகரந்த சேர்க்கை மூலம் உண்டாகிறது என்பதை விஞ்ஞானம் உறுதிப்படுத்தி உள்ளது. இதுவே தேனீக்கள் இந்த உலகில் எந்த அளவிற்கு பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினம் என்பதை காட்டுகிறது அல்லவா.!? ஆக இயற்கையின் அற்புதங்களில் இதுவும் ஒன்று புரிகிறதா?.....இந்த தேனீக்கள் விவசாயம் இல்லைன்னா, மனுச மக்க மட்டுமில்லீங்க... எந்த ஜீவராசியுமே இங்க உயிர் வாழ முடியாது. அதனால தேனீக்களை இந்த உலகத்துல இருக்க ஒவ்வொரு ஜீவராசியுமே கைத்தொழணும், சூரியனுக்கு இணையா இல்லையா..?!

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement