கூடுதல் நேரம் பணிபுரிந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தொகையை ரிட்டர்ன் கேட்கும் எஸ்பிஐ!
மோடி அதிரடியாக அறிவித்த பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு கூடுதல் நேரம் பணிபுரிந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தொகையைத் திருப்பிச் செலுத்துமாறு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தனது ஊழியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
2016ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதியன்று பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு வங்கி ஊழியர்கள் கூடுதல் நேரமாகத் தொடர்ந்து 14 மணி நேரம் பணிபுரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது. சில ஊழியர்களின் விடுமுறை விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன. அதைச் சரிக்கட்டுவதற்காக அவர்களுக்குக் கூடுதல் தொகையும் வழங்கப்பட்டது.
2017ஆம் ஆண்டில், பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகுதான் எஸ்பிஐயின் துணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் & ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் ஆகிய வங்கிகள் இணைக்கப்பட்டன. தற்போது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிர்வாகம் தனது அனைத்து மண்டல தலைமை அலுவலகங்களுக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், பணமதிப்பழிப்பு அறிவிப்பின் போது, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் கிளைகளில் பணிபுரிந்தவர்களுக்கு மட்டுமே கூடுதல் தொகை வழங்கப்பட வேண்டும் எனவும், மற்ற ஊழியர்களுக்குக் கூடுதல் தொகை வழங்குவதற்கு முந்தைய நிர்வாகங்களே பொறுப்பு எனவும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிர்வாகம் பொறுப்பல்ல எனவும் கூறப்பட்டுள்ளது.