For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

அதிமுக எனும் கட்சி உருவான நாளின்று!

06:54 AM Oct 17, 2024 IST | admin
அதிமுக எனும் கட்சி உருவான நாளின்று
Advertisement

தி.மு.க.வில் இருந்து எம். ஜி.ஆர். நீக்கப்பட்ட நிகழ்ச்சி, தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை நீக்கியதை எதிர்த்து, கோர்ட்டில் எம். ஜி.ஆர். வழக்குத் தொடருவாரா? அல்லது, "நான்தான் உண்மையான தி.மு.க" என்று அறிவிப்பாரா? என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், எம்.ஜி.ஆர். அப்படி எல்லாம் செய்யவில்லை. அனகாபுத்தூர் இராமலிங்கம் என்பவர் அ.தி.மு.க. என்ற பெயரில் ஒரு கட்சியை பதிவு செய்திருந்தார். அந்தக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு எம்ஜிஆர் அதிமுகவிற்கு தலைமை தாங்கினார். கட்சிப் பதிவை விட்டுக் கொடுத்ததற்காக அனகாபுத்தூர் இராமலிங்கத்திற்கு மேல்சபை உறுப்பினர் (எம்.எல்.சி) பதவியும் அளித்தார். பின்னர் இக்கட்சி அ.இ.அ.தி.மு.க எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற பெயரில் புதுக்கட்சி 1972 இதே அக்டோபர் 17ந் தேதி இக்கட்சி விருட்சமானது..

Advertisement

அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரம், சட்டசபை உறுப்பினர்கள் காளிமுத்து, முனுஆதி, எஸ்.எம்.துரைராஜ், மண்டல மக்கள் தொடர்பு அதிகாரி கவிஞர் முத்துராமலிங்கம், மொழி துறை அலுவலர் கவிஞர் நா.காமராசன் ஆகியோர் ஆரம்ப கட்டத்திலேயே அ.தி.மு.க.வில் சேர்ந்தனர். சில நாட்களுக்குப்பின் நாஞ்சில் மனோகரன் இணைந்தார். கட்சியின் கொடி என்ன என்பதை எம்.ஜி.ஆர். அறிவித்தார். தி.மு.க. கொடி போலவே கறுப்பு, சிவப்பு நிறமுள்ள கொடியில், அண்ணாவின் படம் பொறிக்கப்படும் என்றார், எம்.ஜி.ஆர்.

Advertisement

அ.தி.மு.க. தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னை கடற்கரையில் நடந்தது. அக் கூட்டத்தில், கட்சியின் அமைப்பாளர் கே.ஏ.கிருஷ்ணசாமி பேசுகையில், "13 நாட்களில் அ.தி.மு.க.வுக்கு 6 ஆயிரம் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன. 10 லட்சத்துக்கு மேற்பட்டோர், உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டுள்ளனர்" என்று கூறினார். அவர் மேலும் பேசுகையில், "எம்.ஜி.ஆர். இதுவரை "புரட்சி நடிகர்" என்று அழைக்கப்பட்டு வந்தார். அது கருணாநிதி வழங்கிய பட்டமாகும். இனி எம்.ஜி.ஆர். "புரட்சித்தலைவர்" என்று அழைக்கப்படுவார்" என்று அறிவித்தார்.அக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசுகையில், "அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் அடங்கிய பட்டியல் விரைவில் கவர்னரிடம் கொடுக்கப்படும்" என்று குறிப்பிட்டார்.

பின்னர் எம்.ஜி.ஆர். புதுக்கட்சி தொடங்கி உள்ளது பற்றி, முதல் அமைச்சர் கருணாநிதியிடம் நிருபர்கள் பேட்டி கண்ட போது,நிருபர்கள் கேட்ட கேள்விகளும் கருணாநிதி அளித்த பதில்களும் சில் இதோ:-

கேள்வி:- புதுக்கட்சியில் போய் சேருகிறவர்கள் மீது நடவடிக்கை ஏதும் உண்டா?

பதில்:- அப்படி போய் சேருகிறவர்கள் உண்மையான தி.மு.கழகத்தினராக இருக்கமாட்டார்கள்.

கேள்வி:- கழகத் தலைவர் என்ற முறையில் உங்களிடம் கேட்கிறோம். இந்த போட்டி கட்சியினால் தி.மு.கழகத்திற்கு பலவீனம் எதுவும் உண்டாகுமா?

பதில்:- அப்படி எண்ணம் எள்ளளவும் கிடையாது. அண்ணா யார் யாரை உட்கார வைத்துக்கொண்டு ஒரு மாத காலம் விடிய விடிய பேசி கழகத்தை ஆரம்பித்தாரோ, அந்தக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட போது அண்ணாவை சுற்றி உட்கார்ந்திருந்த நாங்கள் இப்பொழுதும் அண்ணா உருவாக்கிய கழகக் கொள்கைகளின் காவலர்களாக இருக்கிறோம். லட்சோப லட்சம் தொண்டர்கள் இந்த கழகத்தைக்காக்க என்றென்றும் தயாராக இருக்கிறார்கள். எங்களிடம் சொத்துக்கணக்கு கேட்டவர் 1969 க்கு மட்டும் சட்டசபையில் கணக்கு வைத்துவிட்டு, அதற்கு பிறகு சட்டசபையில் எந்த கணக்கும் வைக்கவில்லை. சுருக்கமாக சொல்லப்போனால் எம்.ஜி.ஆர். தி.மு.கழகத்தில் இருந்து கணக்கு தீர்த்துக்கொள்ள விரும்பினாரே தவிர, கணக்கு பார்க்க விரும்பவில்லை. உலகத்தில் தன்னைத்தவிர தூய்மையானவர்களே கிடையாது என்றும், 18 ஆயிரம் கிளைக்கழக செயலாளர்களும், தொண்டர்களும் தூய்மை அற்றவர்கள் என்றும் குற்றம் சாட்டுவது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிற காரியம் ஆகும்.>>என்று கருணாநிதி கூறினார்.

மேலும் சென்னையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான நெடுஞ்செழியன் பேசுகையில்,"இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் அ.தி.மு.க. கரைந்து போய்விடும். அதற்கு இப்போது இருக்கும் சக்தி, ஒரு மாயத்தோற்றம்தான். ஒரு தனி மனிதரின் கவர்ச்சியே, அ.தி.மு.க.வின் அரசியல் பலம். தி.மு.க. அரசின் மீது எம். ஜி.ஆர். கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை." என நெடுஞ்செழியன் கூறினார். இதற்கிடையில் "அண்ணா தி.மு.க" என்ற பெயரில் கட்சி அமைக்கப்பட்டதை ஆட்சேபித்து, அண்ணாவின் மனைவி ராணி அம்மாள் வழக்குத் தொடர்ந்தார்.கட்சியின் பெயரில் அண்ணாவின் பெயர் இருக்கக் கூடாது. கட்சிக்கொடியில் அண்ணாவின் படம் இருக்கக்கூடாது' என்று கோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார். பிறகு, இந்த வழக்கை வாபஸ் பெற்றார்

© தகவல் உதவி ;  நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement