'தீரர் சத்திய மூர்த்தி`!
சத்தியமூர்த்தி என்கிற பெயரே, உண்மையையும் நேர்மையையும் உணர்த்தும் ஒரு அடையாளமாக நிற்பதை நாம் அறிவோம். யார் இந்தச் சத்தியமூர்த்தி? என்றால், பெருந்தலைவர் காமராஜரின் அரசியல் குரு என ஒரு வரியில் பதில் கூறலாம். அந்த ஒரு வரியில் தீரர் சத்திய மூர்த்தியின் கீர்த்தி நமக்கு புலப்படும்.
சிறந்த வழக்கறிஞராக விளங்கிய எஸ். சத்தியமூர்த்தி தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட ஒப்பற்ற தலைவராவார். என்ன ஒன்று :1937-38 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது, இந்தியை ஆதரித்து உரக்க குரல் கொடுத்தவர்
சத்தியமூர்த்தி 1939 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி தலைவராகப் பணியாற்றிய பொழுது, சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியது. அது நாட்டில் இரண்டாம் உலகப் போர்நடைபெற்றுக் கொண்டிருந்த இக்கட்டான காலகட்டம். தண்ணீருக்காக மக்கள் கஷ்டப்படுவதையும் கண்ணீர் விடுவதையும் சத்தியமூர்த்தியால் பொறுத்துக் கொள்வதற்கு இயலவில்லை. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க பிரிட்டிஷ் அரசுடன் அவர் பல முறை வாதாட வேண்டியதும் போராட வேண்டியதும் வந்தது. அதன் விளைவாக உருவாக்கப் பட்டதுதான் பூண்டி நீர்தேக்கம். அந்த நீர்தேக்கம்தான் இப்பொழுது சத்தியமூர்த்தி சாகர் நீர்தேக்கம் என அழைக்கப்படுகிறது.
சத்திமூர்த்தி ஒப்பாரும் மிக்காருமில்லா தேசியவாதியாகவும் செயல்பட்டார். சுதேசி இயக்கத்தில் தன்னை முழுமையாக அற்பணித்து, தீவிர ஈடுபாடு கொண்டு செயல்பட்டர். இதனைப் பொறுத்துக் கொள்ளாதப் பிரிட்டீஷ் அரசாங்கம் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அதைத் தொடர்ந்து 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்திற்காக மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
காந்தியடிகளின் உப்பு சத்தியாகிரகத்தை தமிழகத்தில் முன்னின்று நடத்தியவர் சத்தியமூர்த்தி. இதிலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காந்தியடிகளோடு சத்திய மூர்த்திக்கு நெருக்கமான உறவு இருந்தது. அதனால் அவர் நடத்தும் போராட்டங்கள் அனைத்திலும் சத்தியமூர்த்தியைக் கலந்து கொள்ளச் செய்வார்.
இப்படிதான் ஒருமுறை, காந்தியடிகள் தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்த வேண்டும் என முடிவு செய்தார். அதில் ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு தலைவரை கலந்து கொள்ளச் செய்வது என்றும் தீர்மானித்தார். தமிழகத்தில் அந்தச் சத்தியாக்கிரகத்தை நடத்துவது சத்தியமூர்த்தி என காந்தியடிகள் முடிவு செய்தார். அந்தச் சமயத்தில் சென்னைப் பல்கலைக் கழகம் சத்தியமூர்த்திக்குத் துணைவேந்தர் பதவி அளிப்பதற்கு முன் வந்தது. உடனே அவர் காமராஜரிடம் கலந்தாலோசித்தார். அதற்கு அவர், “நீங்கள் அப்பதவியை ஏற்றுக் கொண்டால் காந்தியடிகள் நடத்தும் தனிநபர் சத்தியாக்கிரப் போராட்டத்தில் கலந்து கொள்ள இயலாது, எனவே அப்பதவியை ஏற்க வேண்டாம் எனக் கூறினார். அதனால் சத்தியமூர்த்தி, துணைவேந்தர் பதவியை வேண்டாம் என உதறிவிட்டார். ஒரு பல்கலைக் கழகத்தின் கௌரவமிக்க மிக உயரிப் பதவியைக் கூட நம் நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்காகத் துச்சமென நினைத்து உதறித்தள்ளிய உயர்ந்த உள்ளத்திற்குச் சொந்தக்காரர் சத்தியமூர்த்தி என்றால் அது மிகையாகாது.
பிறரை வசீகரிக்கும் பேச்சாற்றல் எப்படி அவருக்குள் இருந்ததோ அதைப்போன்றே எழுத்தாற்றலும் அவருக்குள்ளே இருந்தது. 1910 முதல் 1917 வரை பத்திரிகைகளில் செய்திகள், கட்டுரைகள் எழுதி வந்தார். நாட்டு நடப்புகள் பற்றி அவர் எழுதிய செய்திகளும் கட்டுரைகளும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தன.
அவர் 1954 முதல் 1963 வரை தமிழ் நாட்டின் தலைசிறந்த முதலமைச்சராக இருந்த காமராஜருக்கு ஒரு சிறந்த அரசியல் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். இரண்டு முறை திறம்பட செயல்பட்ட காமராஜரின் ஆட்சிகாலத்தை தமிழக அரசியலில் பொற்காலம் எனப் போற்றப்படுவதற்கு சத்தியமூர்த்தியின் வழிகாட்டலே காரணமாக இருந்தது. 1936 ஆம் ஆண்டு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்தெடுக்கப்பட்ட சத்தியமூர்த்தி, காமராஜரை பொதுச் செயலாளராகவும் நியமித்தார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற போது காமராஜர், முதலில் சத்தியமூர்த்தி வீட்டுக்குச் சென்று, சுதந்திரக்கொடியை ஏற்றி, தன்னுடைய குருவின் மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்தினார். தமிழக முதலமைச்சராக பதவியேற்ற காமராஜர் முதலில் சத்தியமூர்த்தி வீட்டுக்கு சென்று, அவருடைய புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தியுள்ளார். மேலும், அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு ஆற்றிய தொண்டை நினைவுகூறும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமையகத்திற்கு “சத்தியமூர்த்தி பவன்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
பூண்டி நீர்தேக்கம் இவரால் தொடங்கப்பட்டு 1944 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், கட்டி முடிக்கப்பட்டபோது இவர் உயிருடன் இல்லை. இவருடைய முதன்மை சீடரான காமராஜர் அந்த நீர்தேக்கத்திற்கு “சத்தியமூர்த்தி சாகர் அணை” என தனது குருவின் பெயரைச் சூட்டினார்.
ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராகத் தொடர்ந்து குரலெழுப்பியதின் காரணமாகச் சிறையில் தள்ளப்பட்டு சித்திரவதைக்கு ஆளான ஒப்பாரும் மிக்காருமில்லாத் தலைவர் சத்தியமூர்த்தி, முதுகுத்தண்டு காயத்தினால் அவதிப்பட்டு 1943 ஆம் ஆண்டு இதே மார்ச் 28 ஆம் தேதி சென்னை மருத்துவமனையில் தன்னுடைய 55 வது வயதில் சுதந்திர இந்தியாவின் விடியலைக் காணாமலே நம்மிடமிருந்து விடைபெற்று விட்டார்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்” என்பது பொய்யா மொழிப் புலவரின் மெய்யானக் கூற்று. அதற்கிணங்க ஒரு மனிதன் மண்ணில் வாழும் போது, அவன் எவ்வளவுதான் பொருளும், பதவியும், அந்தஸ்தும் அடைந்திருந்தாலும், அவனின் குணாதிசயங்கள் போற்றுதலுக்குரியதாக இருந்தால் மட்டுமே அவன் மறைந்த பின்பும் இவ்வையகத்தில் மக்களின் மனங்களில் நிஜமாக வாழ்ந்து கொண்டிருப்பான். அதற்கு தலைசிறந்த ஓர் உதாரணப் புருஷனாக வாழ்ந்தவர்தான் சத்தியமூர்த்தி.
இவ்வையம் உள்ளளவும் அவர் கீர்த்தி நிலைத்திருக்கும் என்பது திண்ணம்.