சாலா - விமர்சனம்!
இந்த குடி குடியை கெடுக்கும் என்று தெரிந்தும் கூட குடிமகன்களும் குடிகாரர்கள் சங்கம் வைத்து குடித்து வருகிறார்கள். இப்போதெல்லாம் குடிக்கு அடிமையாகாதவர்களை விரல் விட்டு எண்ணக்கூடிய நிலையில்தான் இருந்து வருகிறார்கள். அந்த அளவுக்கு தமிழகத்தில் உள்ள நகரம் முதல் பட்டிதொட்டிகள் வரை குடிமகன்கள் நாளுக்கு நாள் பெருகி கொண்டுதான் வருகிறார்கள். இதனைச் சுட்டிக் காட்டி மதுவுக்கு எதிரான பிரசார படங்கள் எத்தனையோ வந்து போயுள்ளன. என்றாலும் அந்த குடி என்னும் விஷ பழக்கம் குறித்து காமெடி,ஆக்ஷன்,காதல்,எதிர்பார்க்காத திருப்பங்கள் உள்ளிட்ட சகல கமர்ஷியல் விசயங்களையும் அளவாக மிக்ஸ் செய்து இயக்குநர் எஸ்.டி.மணிபால், அறிமுக நாயகனை வைத்துக் கொண்டு சமூகத்திற்கான ஒரு படத்தை சாலா என்ற டைட்டிலில் வழங்கி கவர முயன்றிருக்கிறார்.
அதாவது சார்லஸ் வினோத் மற்றும் அருள்தாஸ் இருவரும் பகையாளிகள். அங்குள்ள பார்வதி என்ற மதுபானக் கூடம் எனப்படும் பாரை (Bar) கைப்பற்ற பல வருடங்களாக இருவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.அருள்தாஸை தனது குருவாக நினைத்து அவருடன் இருப்பவர் தான் ஹீரோ தீரன். ஆறடி உயரத்தில் ஆயிரம் பேரை அடிக்கும் அளவிற்கு உடல் வலிமையோடு அருள்தாஸுக்கு பக்க பலமாக நிற்கிறார் தீரன். தொடர்ந்து வட சென்னையில் நிறைய மதுபான கூடங்களை திறக்க திட்டமிடுகின்றனர். அதே சமயம், மதுவிற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்தும் பல சட்ட போராட்டங்களையும் நடத்தி வருகிறார் நாயகி ரேஷ்மா. இதனால், ஊருக்குள் இவருக்கு எதிரிகள் அதிகம். அதே சமயம் ரேஷ்மா மீது தீரனுக்கு ஒரு காதல் பார்வை. இச்சூழலில் சார்லஸ் வினோத் அருள்தாஸை திட்டமிட்டு சிறைக்குள் தள்ளிவிட்டு மதுபான கூடத்தைக் கைப்பற்ற திட்டமிடுகிறார் சார்லஸின் போக்கை அறிந்து நேரடியாகக் களத்தில் இறங்க, யாருக்கு வெற்றி என்பதை விட , ஹீரோயின் ரேஷ்மாவின் மதுக்கடைகளை மூடும் போராட்டம் என்ன ஆனது என்பதே சாலாக் கதை.
இதுவரை சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கும் தீரன் இந்த படத்தில் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். ஆறடி உயரம், கட்டுமஸ்தான உடம்பு என்று முரட்டுத்தனமாக இருந்தாலும், குழந்தைத்தனமான தனது நடிப்பால் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருப்பவர், நடனம் மற்றும் சண்டைக்காட்சிகளில் அசத்துகிறார். ஆக்ஷன் ஹீரோவுக்கான அனைத்து தகுதிகளும் கொண்ட தீரன், நடிப்பில் மட்டும் கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கொண்டால் கோலிவுட்டில் தொடர்ந்து நாயகனாக பட்டய கிளப்பலாம். ஹீரோயினாக நடித்திருக்கும் ரேஷ்மா வெங்கடேஷுக்கு புரட்சிகரமான வேடம், அதன் வெயிட்டைப் புரிந்து நன் நடித்திருக்கிறார். காதல் காட்சிகள் இல்லை என்றாலும் நாயகனின் மனதில் இடம் பிடித்தது போல் தனது போராட்ட குணத்தால் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்துவிடுகிறார்.
வில்லன் கேரக்டரில் நடித்திருக்கும் சார்லஸ் வினோத் வழக்கம் போல் அசத்துகிறார்.நாயகனி நண்பராக வரும் ஸ்ரீநாத் சிரிக்க வைப்பதில் ஜெயித்து விடுகிறார் . அருள்தாஸ், சம்பத் ராம், யோகிராம், பள்ளி மாணவர்களாக நடித்திருக்கும் மூன்று பேர் உள்ளிட்ட அனைவரும் தங்களது பங்களிப்பைச் சரியாக செய்திருக்கிறார்கள்.வழக்கம்போல ரவுடிகளுக்கு சினிமா போலீஸாக வரும் சம்பத் ராம், கடைசி காட்சியில் வழக்கம் போல் தன் நேர்மையை வெளிப்படுத்தி சல்யூட் வாங்கிச் செல்கிறார் .மியூசிக் டைரக்டர் தீசன் இசையில் பாடல்கள் மட்டுமின்றி, பின்னணி இசையிலும் இன்னும் அக்கறைக் காட்டி இருக்கலாம். .ஆனா வசனங்கள் ஒவ்வொன்றும் அடடே ரகம். தமிழ்ப் படங்களில் இப்படிச் சரியான வசனங்களைக் கேட்டு வெகு காலமாகி விட்டது !
போதைப் பழக்கத்திர்கு நம் மக்கள் எப்படி அடிமையாகி கிடக்கிறார்கள் என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கும் டைரக்டர் மணிபால், மூன்று பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் நிலை, அவர்கள் மூலம் உருவாக்கப்படும் வீடியோ ஆதாரம், போன்றவற்றால் அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்போடு திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார். அதிலும் க்ளைமாக்சில் ஒரு விபத்து காட்சி மூலம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் காட்சி மூலம் ஒட்டு மொத்த திரையரங்கையே அதிர வைத்து விடுவதில் ஸ்கோர் செய்து விடுகிறார்
முத்தாய்ப்பாக மதுவிற்கு எதிரான ஒரு படம் எனக்கூறி மதுவின் வாடையை அதிகமாக வீச வைத்து விட்டார்கள்
என்றாலும் இந்த சாலா - கட்டிங் மட்டுமே
மார்க் 2.75/5