வங்கதேசத்தில் கலவரம்: பொது ஊரடங்கு உத்தரவு அமலானது!
வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள போராட்டக்காரர்கள், இனி மக்கள் யாரும் அரசுக்கு வரி செலுத்தக் கூடாது என்றும், அரசு ஊழியர்கள் மற்றும் மற்றும் ஜவுளித் துறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் நாடு தழுவிய ஒத்துழையாமை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். கட்டிடங்கள், வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் கையெறி குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்களும் போலீஸார் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 14 போலீஸார் உள்பட 88 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தில் பாகிஸ்தானுடனான போரில் உயிர் நீத்த தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு பணியில் 30 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கு எதிராக மாநிலத்தில் உள்ள மாணவ அமைப்பினர் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். கடந்த மாதம் நாடு முழுவதும் மீண்டும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது மாணவர்களுக்கும், ஆளுங்கட்சியினர், போலீஸ் மற்றும் காவல்துறையினருக்கும் இடையே மூண்ட வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இன்று இதற்கு நீதி கேட்டும், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலக வலியுறுத்தியும் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாக்காவின் மத்திய ஷாபாக் சதுக்கத்தில் ஏராளமான போராட்டக்காரர்கள் தடிகளை ஏந்தியபடி நிரம்பியிருந்தனர். அப்போது, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். அதற்கு எதிராக ஆளுங்கட்சியினரும் தெருக்களில் ஒன்று கூடினர். அப்போது இரு தரப்புக்குள்ளும் ஏற்பட்ட வன்முறையில் 91 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து உள்ளூர் காவல்துறை அதிகாரி அல் ஹெலால் தெரிவிக்கையில், 'மாணவர்களுக்கும் ஆளும் கட்சியினருக்கும் இடையே மோதல்கள் நடந்தன. டாக்காவின் முன்ஷிகஞ்ச் மாவட்டத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டபோது ஒருவர் தலையில் வெட்டப்பட்டார், மற்றொருவருக்கு துப்பாக்கிச் சூட்டு காயங்கள் இருந்தன' என்றார்.
மற்றொரு அதிகாரி, ஆளும் கட்சி அலுவலகத்தை போராட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். நகரம் முழுவதும் போர்க்களமாக மாறிவிட்டது' எனக்கூறினார். மேலும், இன்றைய வன்முறையில் டாக்கா, போக்ரா, பாப்னா, ரங்பூர் மற்றும் சில்ஹெட் ஆகிய வடக்கு மாவட்டங்களிலும், மேற்கில் மகுராவிலும், கிழக்கில் கொமிலாவிலும், தெற்கில் பாரிசல் மற்றும் ஃபெனியிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வெடித்த மோதலில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதை தொடர்ந்து போராட்ட குழுக்களின் தலைவர்களில் ஒருவரான ஆசிப் மஹ்மூத், அடுத்தகட்ட போராட்டத்துக்கு தயாராக இருக்கும்படி ஏற்கனவே ஆதரவாளர்களை முகநூலில் கேட்டுக்கொண்டுள்ளார். இன்று நடந்த போராட்டம்கூட சமூக வலைத்தளங்களில்தான் பெரும்பாலும் அறிவிக்கப் பட்டிருந்தது. போராடும் மாணவர்கள் அமைப்பில் நாட்டின் சில முன்னாள் ராணுவ அதிகாரிகளும் இணைந்துள்ளனர். மேலும், திரைப்பட நட்சத்திரங்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் உட்பட பெரும்பாலானோர் போராட்ட இயக்கத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.இந்த சூழலில், வங்கதேசத்தை ஆளும் அவாமி லீக்கின் பொதுச் செயலாளர் ஒபைதுல் குவாடர், அரசுக்கு தங்கள் ஆதரவைக் காட்ட நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுமாறு கட்சி ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதே சமயம் நேற்று முப்படை தளபதிகள், காவல் துறை தலைவர் உட்பட பல்வேறு பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய பிரதமர் ஷேக் ஹசீனா "அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மாணவர்கள் இல்லை. அவர்கள் தீவிரவாதிகள். நாட்டை சீர்குலைக்கும் நோக்கில் அவர்கள் இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மக்கள் இந்த நாச வேலையை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். மேலும் பொது ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்