ரெப்போ விகிதம் 6.5% ஆகவே தொடரும்!
ரிசர்வ் பேங்க் எனப்படும் ஆர்பிஐ நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) அதன் முக்கிய வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாக தொடர முடிவு செய்துள்ளது. ஆர்பிஐ-ன் 6 பேர் கொண்ட நிதிக் கொள்கைக் குழு, தொடர்ந்து ஒன்பதாவது முறையாக ரெப்போ விகிதத்தை மாற்றாமல் தொடர்வது என முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்ததாஸ் கூறுதையில், "வளர்ந்து வரும் மேக்ரோ பொருளாதாரம், நிதி நிலைமைகள் மற்றும் ஒட்டுமொத்த கண்ணோட்டம் ஆகியவைகளை தீவிரமாக ஆராய்ந்த பின்னர், எம்பிசி குழுவின் ஆறு உறுப்பினர்களில் 4:2 என்ற அடிப்படையில், ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவீதமாகவே தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிதிக் கொள்கைக் குழு வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேலையில் பணவீக்கத்ததைக் கட்டுப்படுத்தும் வகையில் பண விநியோகத்தை குறைப்பதில் (withdrawal of accommodation) கவனம் செலுத்தும்" என்று தெரிவித்தார்.இந்திய வங்கிகளும்,நிதி நிறுவனங்களும் சமீபகாலமாக டாப் அப் ஹோம் லோன் (Home loan top-up) வழங்குவது அதிகரித்து வரும் போக்கு குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளில் தெரிவித்தார். மேலும் அவர் சில நிதி நிறுவனங்கள் விதிமுறைகளைப் பின்பற்றாமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.குறிப்பாகத் தங்கக் கடன் போன்ற பிற பிணையக் கடன்களுக்கு டாப் அப் லோன் வழங்கப்படுவதும், டாப் அப் ஹோம் லோன் பெறுவோரின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வேகமான வளர்ச்சி கணிசமான அபாயத்தை ஏற்படுத்துகிறது என்று ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் எச்சரித்துள்ளார்.
நிலையான வைப்பு வசதிக்கான வட்டி விகிதம் 6.25 சதவீதமாகவும், விளிம்பு நிலை வசதிக்கான வட்டி விகிதம் மாற்றம் இல்லாமல் 6.75 சதவீதமாக தொடரும். இதனிடையே, ரிசர்வ் வங்கி நிதியாண்டு 25-க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யை 7.2 சதவீதமாக கணித்துள்ளது. அதேநேரத்தில் நிதியாண்டுக்கான பணவீக்க முன்னறிவிப்பு 4.5 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
விகிதம் மாற்றப்படாததால் என்ன நடக்கும்?
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாக நிலையாக விட்டுவிட்டதால், ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து வெளிப்புற பெஞ்ச்மார்க் கடன் விகிதங்களும் அதிகரிக்காது, கடனாளிகளுக்கு அவர்களின் மாதாந்திர தவணைகள் (இ.எம்.ஐ) அதிகரிக்காது. இருப்பினும், மே 2022 மற்றும் பிப்ரவரி 2023 க்கு இடையில் ரெப்போ விகிதத்தில் 250 பி.பி.எஸ் உயர்வின் முழு பரிமாற்றம் நடக்காத நிலையில், கடன் வழங்குபவர்கள் நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தின் (எம்.சி.எல்.ஆர்) விளிம்புச் செலவுடன் இணைக்கப்பட்ட கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தலாம். மே 2022 முதல் 250 பி.பி.எஸ் பாலிசி விகித உயர்வுக்கு பதிலளிக்கும் விதமாக, வங்கிகள் தங்கள் ரெப்போ-இணைக்கப்பட்ட ஈ.பி.எல்.ஆர்.,களை மேல்நோக்கி திருத்தியுள்ளன. மே 2022-ஜூன் 2024 இல் வங்கிகளின் நிதி அடிப்படையிலான 1 ஆண்டு சராசரி செலவு விகிதம் (MCLR) 168 பி.பி.எஸ் ஆக அதிகரித்துள்ளது.