For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

முதுபெரும் மலையாள எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயர் காலமானார்!

05:05 AM Dec 26, 2024 IST | admin
முதுபெரும் மலையாள எழுத்தாளர் எம்  டி  வாசுதேவன் நாயர் காலமானார்
Advertisement

டந்த சில தினங்களுக்கு முன்பு கடும் நெஞ்சு வலி காரணமாக கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாசுதேவன் நாயருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, எனினும் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்துவந்த நிலையில், புதன்கிழமை (டிச.25) வாசுதேவன் நாயர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 91. இன்று வியாழக்கிழமை மாலை அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

எம்.டி.வாசுதேவன் நாயர் மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர். அவரது பல்வேறு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு அண்மையில் ‘மனோரதங்கள்’ என்ற பெயரில் ஆந்தாலஜியாக வெளியானது. மலையாள இலக்கியம் மற்றும் திரையுலகில் அழியாத முத்திரை பதித்த எம்.டி.வாசுதேவன் நாயர் பத்ம பூஷண் விருது பெற்றவர். இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீடம் விருது கடந்த 1996-ம் ஆண்டு அவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் சிறந்த திரைக்கதைக்காக 4 தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

Advertisement

மொத்தம் 54 படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ள அவர் 7 படங்களை இயக்கியுள்ளார். பல்வேறு விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளனர். வாசுதேவன் நாயரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வாசுதேவன் நாயரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள எழுத்தாளர் ஜெயமோகன், "மலையாள எழுத்தாளர் என்னும் ஆளுமையின் வெளிப்பாடு எம்.டி. வாசுதேவன் நாயர். எந்த அரசியல்வாதி முன்னரும், எந்த அதிகாரபீடம் முன்பிலும் அவர் ஒரு கணமும் வணங்கியதில்லை. அவர்கள் தன்னை வணங்கவேண்டும் என எண்ணுபவராகவே நீடித்தார். எம்டியின் 'ஆணவம்' புகழ்பெற்றது. சென்ற ஆண்டு அவருடைய 90 ஆவது ஆண்டுவிழாவை கேரள அரசு ஒரு மாநில விழாவாகவே கொண்டாடியது. பள்ளிகள் தோறும் அவருடைய பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. ஆனால் அந்த விழாவிலேயே முதல்வரின் ஆடம்பரத்தை வெளிப்படையாகக் கண்டிக்க அவர் தயங்கவில்லை. ஆனால் அதே எம்.டி மூத்த படைப்பாளிகள், கதகளி கலைஞர்களின் கால்தொட்டு வணங்கும் பணிவு கொண்டவராகவும் நீடித்தார். எழுத்தாளனுக்குரிய நிமிர்வு மட்டுமே கொண்டு ஒவ்வொரு கணமும் வாழ்ந்தவர், வெற்றிகளையும் சாதனைகளையும் மிக இயல்பாக நிகழ்த்தி முன்சென்றவர்." என புகழாரம் சூட்டியுள்ளார்.

எம்.டி மாத்ருபூமி வார இதழின் ஆசிரியராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் பினராயி விஜயன், மலையாள இலக்கியத்தை உலக இலக்கியத்தில் முன்னணிக்குக் கொண்டு வந்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்."இது மலையாள இலக்கிய உலகுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த கேரளாவுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு" என்று விஜயன் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எம்.டி. வாசுதேவன் நாயருக்கு வாசகர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தும் வகையில் டிசம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கேரள மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. டிசம்பர் 26ஆம் தேதி நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் உள்பட அனைத்து அரசு நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Tags :
Advertisement