ராஜா கிளி-பட விமர்சனம்!
மனிதனுக்கு இருக்க கூடாத குணங்களாக மண்ணாசை,பெண்ணாசை,பொன்னாசை என பெரியவர்கள் சொல்வார்கள்.எல்லாவற்றையும் விட ஒரு மனிதனை வீழ்த்துவது பெண்ணாசைதான்.புராணத்தில் சொல்லப்பட்ட ராவணன்,12 உலகத்துக்கு தலைவன்,5 கிரகங்கள் உச்சம் பெற்றவன்,சிறந்த சிவ பக்தன் அப்படிபட்டவன் வீழ்ந்தது சீதை என்ற பெண்ணினால்தான்.ராமனை பழிவாங்க தூக்கிவரப்பட்ட சீதை,அவர் மீது சபலப்பட்டதால் அதாவது அடுத்தவர் மனைவி மீது ஆசைபட்டதால் நேர்மையும்,பண்பும் கொண்ட ராவணன்,எல்லா சூழ்ச்சிகளும் செய்யக்கூடிய ராமனிடம் வீழ்ந்தான்.பெண்ணாசை கொண்ட மனிதனுக்கு,ஆபத்து நேரத்தில் யாரும் துணை வரமாட்டார்கள்.எவ்வளவு புகழ்,செல்வாக்கு இருந்தாலும் அவனது நிலை தலைகீழாகிவிடும் என்பதெல்லாம் பலரும் தெரிந்த நிலையிலும் இந்த ஆசையில் விழுவது சகஜமாகி விட்டதுடன், அதிகரித்துக் கொண்டும் போகிறது. இச்சூழலில் சரவணாபவன் அண்ணாச்சி & ஜீவஜோதி சப்ஜெக்டை மையமாக வைத்து ராஜாகிளியாக வழங்கி உள்ளார் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா . ஆம் அவர்தன் இப்படத்தை படத்தை இயக்கி இருக்கிறார்.
கதை என்னவென்றால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இல்லத்தை நடத்தி வரும் சமுத்திரக்கனி, மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், குப்பையில் இருப்பதை சாப்பிடும் தம்பி ராமையாவை அரவணைத்து தனது இல்லத்திற்கு அழைத்து வந்து பராமரிக்கிறார். அப்போது அவரிடம் இருக்கும் ஒரு டைரியை படிக்கும் போது, பல தொழில்களுக்கு சொந்தக்காரரான பெரும் செல்வந்தர் முருகப்பன் இவர் தான் என்பது தெரிய வருகிறது. அதாவது இந்த தொழில அதிபரான முருகப்பபா சென்ராயர் ( தம்பி ராமையா) சமூகத்தில் உயர்ந்த மதிப்புடன் இருந்த நிலையிலும் அவரை மனைவி சந்தேகக் கண்கொண்டே பார்க்கிறார். அதே சமயம் முருகப்பாவுக்கு, வேலை கேட்டு வந்த பெண்ணுடனும், வாக்கிங் போகும் வழியில் ஒரு பெண்ணிடமும் பழக்கம் ஏற்பட்டு அவர்களில் ஒருவரை 2ம் தாரமாக திருமணம் செய்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் இந்த பெண்கள் திசை மாறி செல்கின்றனர். இதனால் ஏற்பட்ட அசம்பாவித்தால் நடந்த கொலை வழக்கில் போலீஸ் பிடியில் சிக்கும் முருகப்பா தண்டனை பெற்று சிறைக்குள் போய் வெளியாகி நடுத்தெருவில் பைத்தியம் போல் அலைந்தவர் இவர் என்று தெரிந்த பின்னர் நடப்பது என்ன என்பதுதான் ராஜாகிளி
ஓட்டல் அதிபர் கெட் அப்பில் முருகப்பா சென்றாயர் கேரக்டரில் வெள்ளை வேட்டி சட்டை பாசமான பேச்சு என தொழிலகுபர் கதாபாத்திரத்தில் அத்தனை பொருத்தமாகவே நடித்தவர், பின் பாதியில் பிச்சைக்காரனாகவும் கலக்குகிறார். அடுத்த பெண்ணின் மீது சபலப்படும் காட்சிகள், வயது வந்தவர்களே முகம் சுளிக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் படம் முழுக்க தம்பி ராமையா மட்டுமே தோன்றுவதால் போனை நோண்ட வைத்து விடுகிறார் . அதே நேரம் மனநலம் பாதிக்கப்பட்டு தெருத் தெருவாக சுற்றித் திரியும் போது ரசிகனை மகிழ்ச்சி அடைய வைப்பதில் ஜெயித்து விடுகிறார். வாழும் ஓஷோ என்றழைக்கப்படும் சமுத்திரகனி அநாதை விடுதியின் உரிமையாளராக வந்து தம்பி ராமையாவை தத்து எடுத்துக் வளர்க்கிறார். வழக்கம் போல் அதே மில்லி மீட்டர் தாண்டாத நடிப்பு, அக்கறை, பரிதாபம் என்று பலவேறு பாவங்களை காட்டுவதாக நினைத்துக் கொண்டு தம்பி ராமையாவுக்காக வாதாடுகிறார். முதல் மனைவியாக தீபா சங்கர் அழகாக கவனிக்க வைக்கிறார். புஷ்பா பசுபலேட்டி வில்லியாக வருகிறார். அதிரகார வர்க்க பெண்ணாக ஐஸ்வர்யா வருகிறார்.
உண்மையில் நடந்த கதையை அப்படியே எடுத்திருப்பதால் எந்தவித தாக்கமும் நமக்குள் ஏற்படவில்லை. மாறாக பல இடங்களில் சலிப்பு ஏற்படுகிறது. மேலும் டபுள் மீனிங் நிறைந்த இந்தப்படத்தை அப்பாவை வைத்து இயக்கியதில் கொஞ்சமும் சங்கோஜமில்லாமல் டைரக்ட் செய்து இருக்கிறார் உமாபதி ராமையா. இத்தனைக்கும் இது முதல் படமாம். தேவையா என்று கேட்க வைத்து விடுகிறார்.
மொத்தத்தில் ராஜாகிளி - காக்கையாக்கும்!
மார்க் 2.25/5