தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பொங்கல் பண்டிகை கற்றுத் தரும் பாடங்கள்!

05:27 AM Jan 14, 2025 IST | admin
Advertisement

பொங்கல் என்பது தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவின் பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்படும் ஒரு பழமையான பண்டிகை. அபரிமிதமான அறுவடைக்கு சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இது தோன்றியதாக நம்பப்படுகிறது. இது நன்றி செலுத்தும் பண்டிகையாகும், அறுவடையில் தங்கள் பங்கிற்காக சூரிய கடவுள், கால்நடைகள் மற்றும் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நேரம். மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள பிணைப்பைக் கொண்டாடும் நேரம் இது.சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்கு கொண்டு வந்து, தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்தது வழிபட்டனர்.

Advertisement

நம் இந்தியா பழம்பெரும் நாடு. இங்கு பல மதம், ஜாதி, மொழி, பழக்க வழக்கம், உணவு என பல விதமான மக்கள் வசிக்கிறார்கள். ஆனால், இந்தியர்கள் என்ற ஒரு இழை நம் அனைவரையும் ஒன்றுபடுத்தி வைத்துள்ளது. நம் நாட்டில் கொண்டாடப்படும் அளவிற்கு எந்த நாட்டிலும் இத்தனை பண்டிகைகள் கொண்டாடப்படாது என்றால் அதை மறுப்பதற்கில்லை. நமது தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டாலே, நாம் பல வித விழாக்களை, பண்டிகைகளை கொண்டாடுகிறோம். அந்த வகையில், நம் தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையாக இருப்பது தைப் பொங்கல் பண்டிகை. உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை விவசாயத்திற்கான, விவசாயிகளுக்கான, விவசாயத்துக்கு உதவும், கதிரவன், பூமி, விலங்குகள், இவற்றுக்கான பண்டிகை. இவற்றைத் தவிர பொங்கல் பண்டிகை நமக்கு பல வாழ்க்கைப்பாடங்களையும் கற்றுத் தருகிறது.

Advertisement

என்ன? பண்டிகை பாடம் கற்றுக்கொடுக்குமா என ஆராய வேண்டாம். நம்மையும் சுமக்கும் இம் மண்ணில் இருக்கும் புல், பூண்டு, பறக்கும் பறவை, பாயும் புலி, பெய்யும் மழை, ஓடும் நதி, பொக்கை வாய் பாட்டி, படம் எடுக்கும் பாம்பு, பறக்கும் பட்டாம்பூச்சி, இரவில் வரும் நிலவு, தெருவில் ஓடும் சிறுவன், சில்லென் வீசும் காற்று, வள்ளென குரைக்கும் நாய்... இப்படி நம் அருகில் அனைத்திலும் நாம் கற்றுக்கொள்ள எவ்வளவோ பாடங்கள் இருக்கும் நிலையில், தமிழர்களின் முக்கிய பண்டிகையான தைப் பொங்கல் சொல்லும் பாடங்களும் ஏராளம் ஏராளம்!!

பழையன கழிப்போம்

பொங்கலுக்கு முந்தைய நாள் அதாவது மார்கழியின் கடைசி நாள் போகி கொண்டாடபடும். அக்கால தமிழன் முழுக்க இந்துவாய் இருந்தான், அது இந்துக்களின் சமய நம்பிக்கை விழாவாகவே அது கொண்டாடபட்டது. இந்துமதம் அறிவியலும் ஆன்மீகம் கலந்தது என நாம் அறிவோம், அப்படி போகி பண்டிகையிலும் ஏராளமான தத்துவமும் மருத்துவமும் உண்டு.மறுநாள் பண்டிகையெனில் முதல் நாள் வீட்டை சுத்தம் செய்தல் இந்துக்கள் மரபு , “அன்பே சிவம்” என்று மட்டுமல்ல “‘சுத்தத்வாத் சிவம் உச்யதே’ என்கிறது வேதம்.அதாவது சுத்தமே சிவம். போகி என்றால் அதை பல அர்த்தத்தில் சொல்லமுடியும், இந்துமதமும் அதை சொல்லிற்று எனினும் அதன் பொருள் ஒன்றே. அதாவது பழையன கழிந்து புதியன பெறுதல். தைபொங்கலுக்கு சீதேவி நம் வீட்டுக்கு வருவாள் அதற்கு முந்தைய நாளில் மூதேவியினை அனுப்பிவிட வேண்டும், அழுக்கும் பழைய பொருட்களும் இருக்குமிடத்தில் மூதேவி இருப்பாள், சுத்தமான இடத்தில் இருக்கமாட்டாள்ம், மூதேவியினை போக்கும் நாளே போகி என்றார்கள். உண்மையில் சுத்தம் இருக்குமிடத்தில் செல்வம் இருக்கும், கூடவே அதை அனுபவிக்க அமைதியும் இருக்கும் மேல்நாடுகளிலும் சில கிழக்காசிய நாடுகளில் அதை கண்கூடாக காணலாம். சுத்தம் அவ்வளவு முக்கியமானது, இது ஆன்மீகம் என்றால் ஆன்மீகம், உளவியல் என்றால் சுத்தமான இடத்தில் மனம் புத்துணர்ச்சி கொள்கின்றது தெளிவாகின்றது, தெளிந்த சிந்தனை வெற்றியினை கொடுக்கின்றது என்பது. இதைத்தான் அன்றே தத்துவரீதியாக சொல்லி வைத்தது இந்து மதம்.

மேலும் இன்றைய காலகட்டத்தில் நம்மிடம் இருக்கும் மிக முக்கியமான கெட்ட பழக்கம் என்ன? இதுவும் வேண்டும், அதுவும் வேண்டும், எதுவும் வேண்டும், எல்லாம் வேண்டும்!! இப்படி அனைத்தையும் வேண்டும் வெண்டும் என வீணாக சேர்த்து வைத்து தேவையானதை கோட்டை விட்டு விடுகிறோம். ஆனால், அந்த காலத்திலேயே போகி பண்டிகை (Bhogi Festival) மூலம், பழைவற்றை தீயில் போட்டு கொளுத்திவிட்டு, புதியவற்றுக்கு வழி விட வேண்டும் என புரிய வைத்துள்ளனர் நம் முன்னோர். பழையது என்பது பழைய பொருட்கள் மட்டுமல்ல, பழைய, தேவையில்லாத சிந்தனைகள், பழைய விரோதம், பழைய கவலைகள், பழைய பிடிவாதம் என அனைத்தையும் எரித்துவிட்டு, புதியவற்றை வரவேற்க காத்திருக்க வேண்டும் என்பதே போகி பண்டிகை கூறும் பாடம்.

இயற்கையை போற்றுவோம்

பண்டைய தமிழர்கள் இயற்கையுடன் பின்னிப் பிணைந்த வாழ்க்கை முறையை மேற்கொண்டனர். அவர்கள் இயற்கையை இறைவனாக எண்ணி, வணங்கியும் வாழ்த் தியும் வந்தனர். தாங்கள் வாழ்ந்த நிலப் பகுதியை இயற்கை அமைப்பின் அடிப் படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையாகப் பிரித்தனர். மலையும் மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி நிலம், காடும் காடு சார்ந்த பகுதி யும் முல்லை நிலம், வயலும் வயல் சார்ந்த பகுதி மருத நிலம், கடலும் கடல் சார்ந்த பகுதி யும் நெய்தல் நிலம், மணலும் மணல் சார்ந்த பகுதியும் பாலை நிலம் என வகைப் படுத்தப்பட்டிருந்தது. அவரவர் வாழ்ந்த நிலத்தில் நடை பெற்ற முதன்மையான தொழிலின் அடிப் படையில் விழாக்களை நமது முன்னோர் கள் கொண்டாடி வந்துள்ளனர். மருத நிலப் பகுதியில் வாழ்ந்த தமிழர், உழவுத் தொழிலை முதன்மையான தொழிலாகச் செய்து வந்தனர். அவர்கள் தங்களின் அறு வடைக் காலத்தில் அறுவடைத் திருநாளை வெகுசிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். உயிர்களின் அத்தியாவசியத் தேவை உணவு என்ற அடிப்படையில் அறுவடைத் திருநாள் தமிழர் பண்பாட்டின் முதன்மை யான அடையாளமாகி, அனைவருக்கு மான திருவிழாவாகியது. வெறும் கொண்டாட்டமாக இல்லாமல் அறுவடைக்கு உதவியாக இருந்த கால்நடைகள், கதிரவனுக்கு நன்றி சொல்லும் விழாவாகவும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் பொங்கல் பண்டிகையின் மிகப்பெரிய சிறப்பம்சம், இதன் மூலம் நாம் இயற்கைக்கு காணிக்கையாக செலுத்தும் நமது நன்றிக்கடன்தான். உழவு நமது வாழ்வின் அஸ்திவாரம். அதற்கு உறுதுணையாய் இருந்து நமக்கு உணவளிக்கும் விவசாயிகள், விவசாயம் செய்ய உதவும், கதிரவனுக்கு இந்நாளில் பொங்கல் படைத்து வழிபடுவது வழக்கம். வயலில் அறுவடையான புதிய அரிசியில் வெல்லம் கலந்து, புதுப்பானையில் (Pongal Pot) பொங்கலிட்டு, புதிய காய்கறிகளை ஒன்றாக சேர்த்து சமைத்து, கரும்புடன் சேர்த்து சூரியனுக்கு படையல் செய்து நாம் சூரியனுடன் சேர்த்து, மண், புழு, பூண்டு, நீர், நிலம் என இயற்கையின் அனைத்து அம்சங்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.

விலங்கின நண்பர்களுக்கு நன்றி கூறும் நன்னாள்

மனிதனின் வாழ்வில் மாடு என்கிற ஜீவன் பிரிக்க முடியாத ஒன்று. காரணம் காலை எழுந்ததும், பலரும் தன்னுடைய முதல் புத்துணர்வு பானமாக எடுத்து கொள்வது, பசும் பால் சேர்த்த, டீ, காபி, போன்றவை தான். தாய் பால் கிடைக்காத பல குழந்தைகளுக்கு, தாய் ஆவதும் பசு மாடுகள் தான். அதே போல் மாடுகள் சேத்தில் கால் வைத்து உழவு செய்தால் தான், நாம் சோற்றில் கூட கை வைக்க முடியும். எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பாராமல் நம்மை ஒவ்வொரு நாளும் வாழ வைத்து வரும் மாடுகளுக்கு நன்றி கூறும் விதமாக தான் தைப் பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகின்றது. மனிதர்கள் அனைவரும் சோற்றில் கை வைக்க உழவன் சேற்றில் காலை வைக்கிறான். உழவனுக்கு துணையாக, அந்த நிலத்தை உழுது, விவசாயத்தில் விவசாயிக்கு உற்ற துணையாக கைகொடுத்து கரை சேர வைக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் நாளாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகின்றது.

தமிழக மக்களால், மஹாலக்ஷ்மியாக பார்க்கப்படும் மாடு, பலரது வீட்டிலும் ஒரு விலங்காக பார்க்கப்படுவது இல்லை. அவர்களுடைய பிள்ளைகள், மற்றும் உறவு முறைகளாகவே பார்க்கப்படுகிறது. வீட்டில் வளர்க்கப்படும் ஒவ்வொரு மாடு மற்றும் ஆடுகளுக்கு, லட்சுமி, கறுப்பி, பொன்னி என பல்வேறு பெயர்களை வைத்து உணர்வு பூர்வமான அன்போடு அழைத்து வருகின்றனர் தமிழர்கள் என்றால் அது மறுக்க முடியாதது. அதன்படி இந்த நாட்களில் மாடுகளை நன்றாக அலங்கரித்து உழவர்கள் தங்கள் மாடுகள் மீது தங்களுக்கு உள்ள பெருமிதத்தை தெரிவித்துக்கொள்கிறார்கள்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

பொங்கல் கொண்டாட்டங்களின் நான்காவது நாள் காணும் பொங்கலாக கொண்டாடப்படுகின்றது. தங்கள் வழக்கமான பணிகளில் சதாசர்வகாலமும் ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்கள், தங்கள் உறவுகளை, நண்பர்களை சந்தித்து, அவர்களுடன் மகிழ்ச்சிகரமான பொழுதை கழிக்க வேண்டும் என்ற சிந்தனையில், நம் முன்னோர்கள் ஒரு நாளையே அதற்காக ஒதுக்கி இருக்கிறார்கள். சடங்கு என்று வந்துவிட்டால், அதை விட மனம் வராது என்று நினைத்து இந்த நாளை உருவாக்கிய அவர்களது சமயோஜித புத்தி வியக்க வைக்கிறது.

இந்த நாளில், நம் உற்றார், உறவினர், நண்பர்களைக் கண்டு அவர்களுடன் மகிழ்ச்சிகரமான பொழுதுகளை பரிமாறிக்கொள்கிறோம். பெரியோர்களை சந்தித்து ஆசி பெறுகிறோம். பலருடன் ஒன்றாகக் கூடி சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வருகிறோம். கிராமப்புறங்களில், காணும் பொங்கலன்று, பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், பட்டிமன்றங்கள், வீர சாகசப் போட்டிகள் என பல வித நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றது.

நன்றி நவிர்தல்

பொங்கல் பண்டிகை (Pongal Festival) நமக்கு சொல்லித்தரும் மிக முக்கியமான பாடம், நன்றி மறக்காமல் இருப்பது. நம்மில் எத்தனை பேர் நமக்கு உதவி செய்றவங்களுக்கு, அந்த உதவிக்கேற்ற நன்றியை தெரிவிக்கிறோம்? சொல்ல வேண்டும், கண்டிப்பாக சொல்ல வேண்டும். அது மனிதர்களாக இருந்தாலும், விலங்குகளாக இருந்தாலும், இயற்கையாக இருந்தாலும், நன்றி மறப்பது நல்லதல்ல.

பொங்கல் என்னும் பாடம்

நம் முன்னோர்கள் செய்துள்ள ஒவ்வொரு விஷயத்திலும் பல வித படிப்பினைகள் உள்ளன. அந்த வகையில், பொங்கல் என்ற ஒரு பண்டிகையில் எத்தனை வாழ்க்கைப்பாடங்களை புகுத்தி உள்ளார்கள் என்ற எண்ணம் வியப்பை அளிக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாடும்போதும் இந்த பாடங்களையும் எண்ணிப்பார்ப்பது நமக்கு நல்லது.பழமையின் துணைகொண்டு புதுமையை நோக்கி பயணிப்போம். நமக்கு உதவியவர்களை நாம் என்றும் மறவாமல் இருப்போம். மக்களும் மாக்களும் சமமே என்பதை உணர்வோம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என நட்பு பாராட்டுவோம். இப்படி நாம் நினைவில் கொள்ள வேண்டியவை பல உள்ளன. இவற்றை உரக்க சொல்லி உணர வைப்பது தைப் பொங்கல் திரு நாள்!!

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
pongalPongal Festivalஇயற்கைஉறவுகள்தமிழ்ர் திருநாள்தைப்பொங்கல்பண்டிகைபொங்கலின் வரலாறுபொங்கல்மாடு
Advertisement
Next Article