டோக்கியோ விமான நிலையத்தில் தீப்பிடித்து எரிந்த விமானம்- வீடியோ!
டோக்கியோ (Tokyo-Haneda Airport) விமான நிலையத்தில் கடலோர காவல் படை விமானத்துடன், 379 பேர் பயணித்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் மோதி தீப்பிடித்து எரிந்தது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
நேற்றைய புத்தாண்டு தினத்தில் (01-01-24) ஜப்பானை அடுத்தடுத்து உலுக்கிய பயங்கர நிலநடுக்கங்கள் மற்றும் சுனாமி அலைகளால் 8 பேர் பலியானதாகவும், 30 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனையடுத்து, நிலநடுக்கம் காரணமாக இன்று (02-01-24) காலை வரை 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரே நாளில் மட்டும் 155 முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டன. இந்த நிலையில், விமானம் ஒன்று தரையிறங்கும் போது மற்றொரு விமானம் மீது பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில், ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் இன்று (02-01-24) ரன்வேயில் தரையிறங்கி கொண்டிருந்தது. அப்போது, கடலோர காவல்படையின் விமானம் மீது மோதி விபத்து ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. இதனால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் துணையுடன் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று விமானத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்துக்குள்ளான விமானத்தில் பயணிகள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது விமானம் நின்றதும், 379 பயணிகள், விமான ஓட்டிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அங்கு தயார் நிலையில் இருந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்து எவ்வாறு நேரிட்டது, இதில் பயணித்தவர்களுக்கு காயம் அல்லது உயிரிழப்பு நேரிட்டதா என்பது குறித்த தகவல்கள் உடனடியாக தெரியவரவில்லை. எனினும் இந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆக புத்தாண்டு தினத்தில் நாட்டையே உலுக்கிய நிலநடுக்கத்தை தொடர்ந்து தற்போது விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.