நம்ம சென்னை டமிலன் ஸ்ரீராம் கிருஷ்ணனுக்கு டிரம்ப் வழங்கிய உயர் பதவி!
உலகின் பெரியண்ணா என்று சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) அறிவியல் தொழில்நுட்ப முதுநிலை ஆலோசகராக சென்னை தமிழர் ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், தனது அரசில் பணியாற்றுபவர்களை தேர்வு செய்யும் பணியில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி, தொழிலதிபர்கள் எலான் மஸ்க் உள்ளிட்ட பலருக்கு தங்களின் அரசின் முக்கிய பொறுப்புகளை கொடுத்துள்ளார். அந்த வகையில் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்பிஐ - FBI) இயக்குநராக தனக்கு நெருங்கிய நம்பிக்கையாளரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் பட்டேலை ட்ரம்ப் நியமித்தார். உளவுத்துறை இயக்குநராக துளசி கப்பார்டை தேர்வு செய்தார். மேலும் விவேக் ராமசாமி உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரும் டிரம்ப்பின் அரசு நிர்வாகத்தில் இடம்பிடித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்தியாவை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தொடர்பான அறிவியல் தொழில்நுட்ப முதுநிலை ஆலோசகராக நியமித்துள்ளார். தொழில் முனைவோரான ஸ்ரீராம் கிருஷ்ணன், எழுத்தாளர் மற்றும் முதலீட்டாளர் ஆவார். முன்னதாக, மைக்ரோசாப்ட், டுவிட்டர், யாகூ, பேஸ்புக் நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார்.
'பிரபல தொழிலதிபரான டேவிட் சேக்ஸூடன் பணியாற்றிய ஸ்ரீராம் கிருஷ்ணன், ஏ.ஐ.,க்கான அமெரிக்க தலைமை பொறுப்பை கவனிக்க இருக்கிறார். அரசின் ஏ.ஐ., கொள்கையை வடிவமைக்க இருக்கும் இவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான அதிபரின் ஆலோசனைக் குழுவிலும் இடம்பெற்றுள்ளார்,என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். புதிய பதவி குறித்து ஸ்ரீரம் கிருஷ்ணன், “ஏஐ துறையில் அமெரிக்காவை தொடர்ந்து முன்னிலைப்படுத்துவதை உறுதி செய்து, நாட்டிற்கு சேவையாற்ற இருப்பதை பெருமையாகக் கருதுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
அடிசினல் ரிப்போர்ட்:
1980களின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் மிடில் கிளாஸ் ஃபேமிலியில் பிறந்தவர் ஸ்ரீராம் கிருஷ்ணன்.. 1990களில் அவரது அப்பா கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். அதுவே ஸ்ரீராம் கிருஷ்ணனின் வாழ்க்கையை மொத்தமாகப் புரட்டிப் போட்டு இருக்கிறது. அப்போது இணைய வசதி இல்லை என்ற போதிலும், அவர் புத்தங்களைப் படித்து தினசரி கோடிங் பயிற்சி செய்வாராம். இதுவே அவரை கணினி நோக்கித் தள்ளி இருக்கிறது. ஸ்ரீராம் கிருஷ்ணன் எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியில் படித்தவர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் முதலில் வேலைக்குச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், விண்டோஸ் அஸூரில் பணியாற்றி இருக்கிறார். அப்போது தான் அவர் விண்டோஸ் அஸூர் புரோகிராமிங் என்ற புத்தகத்தையும் அவர் எழுதினார். தொடர்ந்து 2013ம் ஆண்டு அவர் பேஸ்புக் நிறுவனத்தில் இணைந்தார். பேஸ்புக் செயலி மற்றும் விளம்பரம் சார்ந்த வருவாய் அதிகரிப்பது ஆகியவற்றில் ஸ்ரீராம் கிருஷ்ணன் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பங்கு வகித்துள்ளார்.
தொடர்ந்து ஸ்னாப் என்ற நிறுவனத்தில் சில காலம் வேலை செய்த அவர், 2019 முதல் ட்விட்டர் தளத்தில் வேலை செய்து வருகிறார். இடையில் சில காலம் யாகூ தளத்திலும் அவர் வேலை செய்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி இருந்தார். அப்போது பலரையும் அவர் வேலையை விட்டு அனுப்பி இருந்தார். இருப்பினும், அப்போது தான் ஸ்ரீராம் கிருஷ்ணனுக்கும் எலான் மஸ்க்கிற்கும் இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டது. அப்போது முதல் இருவரும் இணைந்து பணியாற்றி வரும் சூழலில் தான், இப்போது அவர் அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஏஐ துறை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வாத்தீ அகஸ்தீஸ்வரன்