நாடு - விமர்சனம்!
பஸ் ஆக்ஸிடெண்ட் ஒன்றை மையமாக வைத்து‘எங்கேயும் எப்போதும்’ என்ற ஒரு அழகான காதல் கதையை கொடுத்தவர், நாடு சுதந்திரம் அடைந் ததில் இருந்து மலைவாழ் மக்களுக்கு சரியான சாலை வசதிகள் இல்லை, மக்கள் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் இல்லை என்பதை ’மருத்துவர் இல்லாத மருத்துவமனை’ என்னும் மையக்கரு மூலம் நாடு என்ரடைட்டிலில் சமூகத்தில் கொஞ்சம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்திருக்கிறார்கள். கொஞ்சம் சலிப்பூட்டினாலும் பல லட்சங்கள் செலவு செய்து எடுக்கப்படும் சினிமாவுக்கு ஓர் அர்த்தம் வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டி அசத்தி விட்டார்கள்.
அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத கொல்லிமலையில் ஏகப்பட்ட சின்னச் சின்ன கிராமங்கள் இருக்கிறது. அந்த கிராமங்களுக்கு ஒரு அரசு மருத்துவமனையும் இருக்கிறது. ஆனால், அந்த மருத்துவமனையில் பணியாற்ற டாக்டர்கள் விரும்புவதில்லை. இதனால், அந்த மருத்துவமனைக்கு அரசு நியமிக்கும் மருத்துவர்கள் ஒரு வாரத்தில் பணி மாறுதல் பெற்றுக்கொண்டு சென்றுவிடுகிறார்கள். மருத்துவமனை இருந்தும் சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் அந்த கிராமத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கிறது. அப்படி ஒரு சூழலில் தான் அந்த ஊரைச் சேர்ந்த நாயகன் தர்ஷனின் தங்கையும் இறந்து போகிறார். இதற்கிடையே, ஊர் மக்களின் போராட்டத்தின் பலனாக, அந்த ஊர் மருத்துவமனையில் பணியாற்ற மருத்துவரான மகிமா நம்பியார் வருகிறார். அவரும் வழக்கம் போல் ஒருவாரம் பணியாற்றிய பிறகு பணி மாறுதல் பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றுவிடலாம் என்ற மனநிலையோடு தான் வருகிறார். ஆனால், மகிமாவை எப்படியாவது தங்களது ஊரில் நிரந்தரமாக தங்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு திட்டமிடும் ஊர் மக்கள் அதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட, இறுதியில் அவர்கள் நினைத்தது நடந்ததா?, இல்லையா? என்பதே ‘நாடு’ படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் ‘பிக் பாஸ்’ புகழ் தர்ஷன் தன் பாத்திரத்தின் பல அறிந்து மிக சரியாக நடித்து ஸ்கோர் செய்கிறார். பல இடங்களில் அமைதியாக நடித்திப்பவர், அழுகின்ற காட்சிகளில் பார்வையாளர்களையும் கண்கலங்க வைத்துவிடுகிறார். நாயகியாக நடித்திருக்கும் மகிமா நம்பியார் அழகான டாக்டராக வந்த இடத்தில் புலியைக் கண்டு மிரள்வது, டீ கூட போடத் தெரியாத மக்கள் தனக்காக ஃபாஸ்ட் ஃபுட் தயாரித்துக் கொடுக்கும் அளவுக்கு மாறுவதைக் கண்டு நெகிழ்வது, தனக்குப் பொருத்தமில்லாத இடத்தில் சிக்கிகொண்ட எரிச்சலை காட்டிக் கொள்ளாமல் நோயாளிகளுக்கு முழுமனதோடு சிகிச்சையளிப்பது என்று கமிட் ஆன ரோலுக்கு வலு சேர்த்து பாஸ் மார்க் வாங்கி விடுகிறார்..
ம்ேலும் ஊர் தலைவராக நடித்திருக்கும் சிங்கம் புலி, தனது வழக்கமான நகைச்சுவை மூலம் சில இடங்களில் சிரிக்க வைத்தப்படி கதைக்கு ஏற்ற கதாபாத்திரமாக வலம் வந்திருக்கிறார்.காஃபி டே பணியாளராக நடித்திருக்கும் இன்ப ரவிகுமார் தனது நடிப்பு மற்றும் நகைச்சுவை மூலம் கவனம் ஈர்க்கிறார். மாவட்ட ஆட்சியராக நடித்திருக்கும் அருள்தாஸ் மற்றும் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் என படத்தில் இடம்பெறும் அனைத்து நடிகர்களும் திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.
கேமராமேன் கே.ஏ.சக்திவேல் கொல்லிமலை அழகை மட்டுமின்றி மலைவாழ்மக்களின் வாழ்வியலை நீட்டாக காட்டி இருக்கிறார்.. சி.சத்யா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் கதையோட்டத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது.
மலைவாழ் மக்கள் சார்ந்த கதையென்றாலே அங்குள்ள வளத்தை சூறையாட திட்டமிடும் அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனம், நோய் பரப்பும் ரசாயன தொழிற்சாலை நிறுவ முயலுதல் என்று உப்புமாத்தனாமாக யோசிக்காமல் நீட் அரசியல், மாறி வரும் உணவு பழக்கம் போன்ற விஷயங்களை தொட்டு செல்லும் நாடு கவனிக்கவைக்கிறது
மார்க் 3/5