தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

வாழ்க்கை ஒருபோதும் இலக்கல்ல - பயணம்!

05:06 AM Dec 29, 2024 IST | admin
Advertisement

2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதமாக இருக்கலாம், வழக்கமான ஒரு காலை நேரத்தில் சென்னையின் ராயப்பேட்டை அடுக்ககத்தில் எழுந்து குளித்து முடித்து குளியறையில் இருந்து கதவைத் திறப்பதற்கு முயற்சி செய்தபோது கதவு முற்றிலுமாக Jam ஆகி இருந்தது. என்னுடைய முழு உடல் திறனையும் பயன்படுத்திக் கதவைத் திறக்க முயற்சி செய்தும் ஒரு பலனுமில்லை. கதவின் இடைவெளியில் நீரைப் பாய்ச்சினால் நெகிழ்வடைந்து திறந்து விடக்கூடும் என்ற நப்பாசையில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்ததில் மரத்தாலான அந்தக் கதவு ஊறி ஊதிக்கொண்டு இருந்த கொஞ்ச நஞ்ச வாய்ப்பையும் அடைத்து விட்டது. உயரமான குளியலறை, 10 அடிக்கு மேல் ஒரே ஒரு Ventilator இருந்தது, Commode மீது ஏறினால் ஓரளவு access கிடைக்கும், ஆனால், Commode உடைந்து போவதற்கான வாய்ப்பு இருந்தது. குளிக்க வரும்போது நேரத்தைப் பார்த்திருந்தேன், 7.30 மணி. அநேகமாக ஒன்றரை மணி நேரம் ஆகி இருந்தது. நேரமாக ஆக உடல் வியர்த்துக் கொட்டியது, போதிய ஆக்சிஜன் கிடைக்கவில்லை, அமர்ந்து பல்வேறு கோணங்களில் யோசித்துப் பார்த்தேன்.

Advertisement

10 மணிக்கு அலுவலக நண்பர்கள் சிலர் வருவதற்கான வாய்ப்பு உண்டு, அதுவரை உள்ளே இருப்பது கடினமானது, உடல் மெல்ல மெல்லக் களைப்படைந்து தளர்ந்து விட்டது. முன்வாசல் கதவை உட்புறமாக வேறு தாழிட்டிருந்தேன், Shower ஐத் திறந்து 15-20 நிமிடங்கள் வரை உடலை நனைத்துக் கொண்டேன், கொஞ்சம் ஆற்றல் கிடைக்கும், கதவைத் திறக்க முயற்சிப்பது, அல்லது Ventilator வழியாகக் கூச்சலிட்டு யாரையேனும் அழைப்பது என்று இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருந்தது.கதவு அசையக்கூட மறுத்தது, ஒரு வாய்ப்பு முற்றிலும் அடைபட்டது, இரண்டாவது வாய்ப்பான Ventilator வழியாகக் கத்துவது மட்டும்தான் ஒரே வழி, சுவற்றில் இருந்த சிறிய ஓரடுக்குப் பறப்பில் இடது கால் கட்டை விரலை மட்டும் ஊன்றியபடி பலமுறை கத்தினேன், எந்த எதிர்வினையும் இல்லை. மீண்டும் உடல் தளர்வடையத் துவங்கியது.இறுதியாக ஒருமுறை முயற்சி செய்யலாம் என்று அடிவயிற்றில் இருந்து பெருங்குரலெடுத்துக் கத்தினேன். எதுவும் அசைந்த மாதிரித் தெரியவில்லை. கொஞ்ச நேரத்தில் காலடித் தடங்கள் கேட்கத் துவங்கியது.

மறுபடி மேலேறிப் பார்த்தபோது அடுக்ககத்திற்கு வெளியே இருந்த கோவில் பூசாரி, காவலரிடம் "யாரோ பிளாட்டில் இருந்து கத்துகிறார்கள்" என்று சொல்லிக் கொண்டிருப்பது கேட்டது. அவர்கள் வெளியிலிருந்து உரத்த குரலில் "யாரு சார், என்ன ஆச்சு?" என்றார்கள். உடலும் மனமும் அப்போதுதான் இயல்பு நிலைக்கு வந்தது.நான் மீண்டும் மேலேறி Ventilator வழியாக "இரண்டு மணி நேரமாக குளியலறைக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறேன், உட்புறமாகத் தாளிட்டிருக்கிறேன், இன்னொரு சாவி மூன்றாவது மாடியில் ஆனந்த் சீனிவாசன் அவர்களுடைய வீட்டில் இருக்கிறது, வாங்கி வந்து திறங்க" என்று சொல்ல அடுத்த 10 நிமிடங்களில் வெளிப்புறமாக கம்பியால் நெம்பிக் கதவைத் திறந்தார்கள்.இப்போதும் அந்த நிகழ்வைக் குறித்து நினைத்துக் கொண்டால் ஒரு கடுமையான அதிர்ச்சி அலை பரவும், உடலும் மனமும் சில நிமிடங்கள் அழுத்தத்திற்கு ஆட்பட்டு விடும். இரண்டரை மணி நேரம் அடைபட்டிருந்தேன் என்று நினைக்கிறேன். இப்போது ஏன் இதை நினைவு கூர்கிறேன் என்றால்...?!

Advertisement

ஜூன் மாதம் 4 ஆம் தேதி பூமியில் இருந்து கிளம்பிய போயிங் ஸ்டார் லைனர் என்கிற விண்கலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் என்ற இரண்டு விண்வெளி வீரர்களோடு மறுநாள் பன்னாட்டு விண்வெளி மையத்தோடு இணைந்து கொண்டது. ஜூன் 14 அன்று திரும்ப வேண்டிய சூழலில் விண்கலத்தில் 5 இடங்களில் ஹீலியம் கசிவு ஏற்பட்டுத் தொடர்ந்து நான்கைந்து முறை அவர்களது பூமியை நோக்கிய பயணம் தள்ளிப் போனது. யோசித்துப் பாருங்கள், ஏறத்தாழ பூமியின் மேற்பகுதியில் இருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் மணிக்கு 28,000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றும் (16 முறை பூமியைச் சுற்றுதல்) ISS இல் நான்கு நாட்களில் திரும்ப வேண்டிய விண்கலம் பழுதாகி 6 மாதங்களாக விண்வெளியிலேயே சிக்கிக் கொள்வது எவ்வளவு மன அழுத்தம் தரக்கூடியதாக இருக்கும்?

உடல் தொடர்ந்து புவியீர்ப்பு விசையின்றித் தாறுமாறாக வேலை செய்யும், எலும்புகளுக்கான வேலையே இருக்காது. உண்மையில் நாம் திரும்பிச் செல்வோமா? இல்லையா? என்பது தெரியாது.ஆனால் எதற்கும் கவலைப்படாமல் "சுனிதா வில்லியம்ஸ்" முன்னெப்போதையும் விட நான் நல்ல உற்சாகத்தோடும், நலமுடனும் இருக்கிறேன் என்கிறார். எலான் மஸ்க்கின் SpaceX Capsule ஒன்று சுனிதாவையும், வில்மோரையும் மீட்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அநேகமாக 2025 பிப்ரவரி மத்தியில் இவர்கள் இருவரும் வீடு திரும்பக் கூடும். இதற்கிடையில் பன்னாட்டு விண்வெளி மையத்தைப் பராமரித்தல், விண்வெளியில் நடத்தல், ஸ்கைலைனரின் ஹீலியம் கசிவுகளை அடைத்தல் என்று தொடர்ந்து இருவரும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சுனிதாவுக்கு வயது 60, வில்மோருக்கு வயது 62, இவர்களை எது இயக்குகிறது? குளியலறையில் இரண்டரை மணி நேரம் சிக்கிக் கொண்டதே வாழ்நாள் மன அழுத்தத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கிறதே?அப்படியாக எப்படியாப்பட்ட சூழலிலும் உற்சாகமாக இருத்தல் ஒரு பழக்கம், மனித மனம் திடீரென்று காரணங்களே இல்லாமல் தொய்வடையும், பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஏதோ ஒன்றை நினைத்து அதிர்ந்து மனம் அழுத்தமடையும், தொடர்ந்து நேர்மறையான சிந்தனைகளோடு இயங்குதல் மட்டும்தான் வாழ்க்கையின் பொருளாக இருக்கும். சுனிதா சொல்வதைப் போல, "வாழ்க்கை ஒருபோதும் இலக்கல்ல, பயணம். துயரங்களையும், சவால்களையும் கூட நாம் எதிர்கொண்டு மகிழ்வுறுதலே நம்மிடம் இருக்கும் வழி, நமது பயணத்தை நாம் கொண்டாடுவோம்".

அன்புக்குரியவர்களே, சுனிதா வில்லியம்ஸ் இன்னொன்றையும் சொல்கிறார்."வாழ்வில் துணிவோடு உங்கள் கனவுகளை நனவாக்கும் முடிவுகளை எடுங்கள், பாதுகாப்பான சொகுசான நிலைகளில் இருந்து வெளியேறி சவால்களை எதிர்கொள்வது மட்டுமே வளர்ச்சிக்கான ஒரே வழி, அங்கிருந்து தான் நீங்கள் மேம்பாடடைகிறீர்கள்.".வேறு யாரேனும் தத்துவாசிரியர்கள் சொன்னால் கூட மேற்கண்ட சொற்களை நான் பெரிதாகக் கண்டு கொள்ள மாட்டேன். ஆனால், வாழ்வின் மறு நொடி நிச்சயமற்றது, உயிரைப் பணயம் வைத்து "நான் நலமாக இருக்கிறேன், விரைவில் வீடு திரும்புவேன்" என்று சுனிதா வில்லியம்ஸ் சொல்லும்போது சிரம் தாழ்த்திக் கேட்டுக் கொள்கிறேன்.

கை.அறிவழகன்

Tags :
astronautsissnasaspaceSpaceX CapsuleSunita Williamsசுனிதா வில்லியம்ஸ்மன உறுதிவிண்கலம்விண்வெளி
Advertisement
Next Article