இந்திய பெண்களின் தங்க மோகம்; உலக தங்க கவுன்சில் அதிர்ச்சி தகவல்!
நம் இந்திய மக்கள் பெரும்பாலும் தங்கத்தின் மீது அதிக மோகம் கொண்டுள்ளனர். இதனால் தங்கத்தின் விலை எவ்வளவு ஏறினாலும் அதன் விற்பனை மட்டும் இந்தியாவில் குறைவதில்லை. தங்கத்தின் மீதான அதீத மோகத்திற்கு என்ன தான் காரணம் என்று அலசினால், ஆசையும், கௌரவமும் என்ற இரண்டு விஷயங்கள் தான் நம் கண் முன் வந்து நிற்கிறது. ஒரு சிலர் இதையும் தவிர்த்து வருங்கால சேமிப்பிற்கான சிறந்த முதலீடாகவும் தங்கத்தைப் பார்க்கின்றனர். இந்நிலையில் உலகின் ஒட்டுமொத்த தங்க இருப்பில், இந்திய பெண்களிடம் இருக்கும் தங்கத்தின் அளவு 11 சதவீதம் என்று உலக தங்க கவுன்சில் அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக முதல் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
ஆம். இந்தியாவில்தான் தங்கம் வெறும் சேமிப்பு அல்லது சொத்தாக மட்டுமல்லாமல், பாரம்பரியம், பழக்க வழக்கம், நமது வாழ்முறையை நிர்ணயிக்கும் ஒரு பொருளாகவும் இருந்து வருகிறது.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இந்தியர்கள் தங்கம் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்திய பெண்களுக்கும் தங்கத்துக்கும் அந்த அளவுக்குப் பிரிக்க முடியாத தொடர்பும் நெருக்கமும் உள்ளது. அந்த வகையில், பெண்கள் எப்போதும் தங்கத்தை வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். சிறுக சிறுக சேமித்து பெரும்பாலும் பெண்கள் வாங்குவது என்னவோ தங்க நகைகள்தான்.தங்க நகைகள் இன்றும் ஒரு கவுரவத்தின் அடையாளமாகவும், நிதிச் செல்வத்தின் அடையாளமாகவும் உள்ளது.சில பெண்கள் தங்கள் அழகை மேம்படுத்திக் கொள்ளும் ஆசையில் தங்கத்தை விரும்புகிறார்கள். சில பெண்கள் மகள்களின் திருமணத்திற்காக தங்கம் வாங்கி சேர்த்து வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும், தங்கத்தின் மீதான மோகம் நம் நாட்டுப் பெண்களுக்கு அதிகம் என்பதை மறுக்க இயலாது.
இந்த நிலையில், உலக தங்க கவுன்சிலின் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அதில் இந்தியப் பெண்களிடம் சுமார் 24 ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக கூறியுள்ளது. இது உலகின் மொத்த தங்க கையிருப்பில் 11 சதவீதம் ஆகும்.
தங்க கையிருப்பில் முதல் 5 நாடுகளின் மொத்த தங்க இருப்பைக் காட்டிலும் இந்திய பெண்கள் தங்க நகையாக வைத்திருக்கும் தங்கத்தின் அளவு அதிகம் என்றும் கூறியுள்ளது.
அதாவது, அமெரிக்காவில் 8,000 டன் தங்கம், ஜெர்மனியிடம் 3,300 டன் தங்கம், இத்தாலி 2450 டன் தங்கம், பிரான்ஸ் 2,400 டன் தங்கம், ரஷ்யா 1900 டன் தங்கம் கையிருப்பில் வைத்திருக்கிறது. ஆனால் இவை எல்லாவற்றையும் கூட்டினாலும் இந்தியப் பெண்களின் தங்க நகைக்கு ஈடாகாது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாத்தீ அகஸ்தீஸ்வரன்