லாந்தர் - விமர்சனம்!
பொதுவாக சினிமாக்களில் சஸ்பென்ஸ் திரில்லர் ஜார்னர் என்றாலே அநேக டைரக்டர்கள் லான் - லீனர் முறை அல்லது பேர்லர் ஸ்டோரி என்று சொல்லக் கூடிய ஒரே சமயத்தில் நடக்கும் இரண்டு கதைகள் போன்ற அம்சங்களை தங்களது திரைக்கதைக்கு பக்கபலமாக பயன்படுத்திக் கொள்வது வழக்கம். அத்தகைய ஒரு வழக்கமான பாதையில் தான் இந்த படத்தின் இயக்குநர் சாஜி சலீமும் பயணித்திருக்கிறார்.சாலையில் நடந்து செல்லும் முகம் தெரியாத மர்ம நபர், எதிர்படுபவர்களை கடுமையாக தாக்குகிறார், அவர் யார்?, அவரது பின்னணி என்ன? என்பது தான் கதையின் மையப்புள்ளி. அப்படி ஒரு கருவை எடுத்திருக்கும் டைரக்டர் ஸ்கீரின்பிளேயில் சொல்லியிருக்கும் ஏகப்பட்ட விசயங்கள், நாயகன் விதார்த்தையும், காவல்துறையின் செயல்பாடுகளையும் மட்டம் தட்டுவது போல் இருப்பது ரொம்ப டம்மி பீஸாக்கி விட்டது. அதே சமயம், திரைக்கதையில் இடம்பெறும் மற்றொரு கதை மற்றும் அதன் கதாபாத்திர வடிவமைப்புகள் படத்திற்கு சற்று கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுத்தாலும், அதில் நடித்தவர்களால் அந்த பகுதியும் ரசிகர்கள் மனதில் நிற்காமல் போகிறது.
கோவை மாநகரில் உதவி காவல் ஆணையராக இருக்கும் அரவிந்த் (விதார்த்) மிக நேர்மையான அதிகாரி. கோவை மாநகரில் ஒரு நாள் இரவில் கருப்பு ரெயின் கோட் போட்ட ஒரு சைக்கோ மனிதன் ஒரு ஆயுதத்தை பயன்படுத்தி கண்ணில் படுவோரை எல்லாம் அடித்து கொலை செய்து வருகிறான். இவனைப் பிடிக்கும் முயற்சியில் சில காவல் அதிகாரிகளும் படுகாயம் அடைகிறார்கள். ஒருவனை சந்தேகப்பட்டு விரட்டி செல்கிறது காவல் துறை. விரட்டிச் செல்லும்போது அந்த நபர் காவல் துறையினரின் வாகனம் மோதி இறந்து விடுகிறார். ஆனால், இவர் கொலைகாரன் இல்லை என்று தெரிய வருகிறது. பட்டுக்கோட்டையில் கொலைகாரனுக்கு ஒரு லீட் கிடைக்கிறது. இந்த லீடை வைத்து ஒரு பயணம் செய்கிறது காவல் துறை. அந்த கொலையாளியை பிடிக்க காவல் துறையால் முடிந்ததா என்பதுதான் மீதி கதை.
ஹீரோவாக ஐ.பி.எஸ் ஆபிசர் வேடத்தில் நடித்திருக்கும் விதார்த், ஐசக்கன்னா என்று ஆசைப்பட்டு கமிட் செய்தாலும் அந்த ரோலுக்கு உரிய வலு சேர்க்க தவறி விட்டார். நாயகியாக நடித்திருக்கும் ஸ்வேதா டோரத்தி, இளம் தம்பதியாக நடித்திருக்கும் விபின் மற்றும் சஹானா, பசுபதிராஜ், கஜராஜ், மீனா புஷ்பராஜ், மதன் அர்ஜுனன் என படத்தில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
கேமராமேன் ஞான சவும்தார் காட்சிகளை படமாக்கியிருக்கும் விதம் ஆர்வத்தைத் தூண்டுகிறது. கதை முழுவதும் இரவு நேரத்தில் நடந்தாலும் எந்த ஒரு இடத்திலும் உறுத்தல் இல்லாத ஒளிப்பதிவின் மூலம் படத்தின் தரத்தை உயரத்தியிருக்கிறார். மியூசில் டைரக்டர் எம்.எஸ்.பிரவீனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு ஓரளவு மட்டுமே கைகொடுத்திருக்கிறது.
மொத்தத்தில், இந்த லாந்தர்-ரில் போதிய வெளிச்சமில்லை
மார்க் 2/5