For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தங்கலான் - விமர்சனம்!

12:37 PM Aug 16, 2024 IST | admin
தங்கலான்   விமர்சனம்
Advertisement

கே.ஜி,எஃப் ஒன், கேஜிஎப் 2 என தங்க சுரங்கம் பற்றி சுவையான சினிமாக்ககள் வந்திருந்தாலும் தங்கலான் அதற்கு முந்தைய காலகட்டத்தை தொடும் கதையாக வந்திருக்கிறது தங்கலான். ஒடுக்கப்பட்ட மக்கள் தமிழ்நாட்டில் இருந்து கோலாருக்கு எப்படி கொண்டு செல்லப்படுகிறார்கள் அவர்கள் எப்படி அடிமை போல் அங்கு நடத்தப் பட்டிருக்கிறார்கள் என்பதை வழக்கம் போல் தான் சார்ந்த அரசியல் மட்டுமே பேசி தங்கலானை தரம் தாழ்த்தி விட்டார் ரஞ்சித். என்னவோ தாழ்ந்த சாதியினர் மட்டுமே தான் இந்த அடிமைத்தனத்திற்கு ஆட்பட்டது போல காட்டி அதே அதிகார வர்க்கத்திற்கு பிற சாதியினர் பட்ட அவதி எல்லாம் எடுத்து கூற இன்னொருவர் வருவாரோ என்ற பீதியை கிளப்பிவிட்டார். அதே சமயம் , அழுக்கான தோற்றமும், கோவணமும், கறை படிந்த பற்களும், துருத்தித் தெரியும் தொந்தியுயுமாக விக்ரம் மீண்டும் தன் மெனக்கெடலை நிரூபித்து மிரட்டி இருகிறார். மேலும் சில குறைகள் இருந்தாலும் தியேட்டருக்கு போய் பார்த்தே ஆக வேண்டிய படமிது என்பதில் சந்தேகமில்லை

Advertisement

அதாவது பிரிட்டிஷ் காலகட்டத்தில் ஒருபுறம் மிராசுகளின் பிடியில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் அடிமைகள் போல் சிக்கி தவிக்கின்றனர். நிலம் ஒடுக்கப் பட்டவர்களுக்கு சொந்தமானது, அந்தக் காட்டை திருத்தி உழைத்து நெல்லை விளைய வைப்பதும் ஒடுக்கப்பட்ட வர்கள் வேலை ஆனால் அவர்களுக்கு எதுவும் சொந்தமில்லை. அவர்களை அடிமை போல் நடத்தும் மிராசுகளுக்கு தான் அத்தனையும் சொந்தம். பொறுத்து பொறுத்து பார்த்த தங்கலான் ஆதிக்க மிராசுவை எதிர்க்க துணிகிறான் .அந்த நேரம் பார்த்து தங்கம் கிடைக்கும் இடத்தில் சுரங்கம் தோண்டி தங்கம் எடுத்து தர வேண்டும் என்று தங்கலானிடம் பிரிட்டிஷ் அதிகாரி கேட்பதுடன் அதற்கான சம்பளமும் தருகிறேன் தங்கத்தில் பங்கும் தருகிறேன் என்று வாக்குறுதி தருகிறார். அதை நம்பி யானைமலை பக்கம் உள்ள பகுதியில் தங்கத்தை எடுக்க தனது கூட்டத்தினரை தங்கலான் அழைத்துச் செல்கிறான். அவர்களால் தங்கம் வெட்டி எடுக்க முடிந்ததா? அந்த தங்கத்தில் அவர்களுக்கு பங்கு கிடைத்ததா? என்பதற்கெல்லாம் கிளைமாக்ஸ் ரத்தமும் சதையுமாக பதில் அளிப்பதே தங்கலான் கதை..!

Advertisement

ஆக்டர் விக்ரம் சொல்லவே வேண்டியதில்லை. தனது அற்புதமான நடிப்பினால் அவரது கதாபாத்திரத்திற்கு ஆழத்தையும் நுணுக்கத்தையும் கொண்டு வருகிறார். வசீகரிக்க வைக்கிறார். இதயத்தை நொறுக்குகிறார். விரக்தியிலிருந்து மன உறுதி வரை பலவிதமான உணர்ச்சிப் பெருக்குகளை முகபாவனையாலும் உடல் மொழியாலும் வெளிப்படுத்தி தங்கலானாகவே வாழ்ந்திருக்கிறார். கங்கம்மாவாக பார்வதி. கணவன், பிள்ளைகள் மீது அன்பு கொண்டவராக தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். ஆரத்தி கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன். தங்க வளம் நிறைந்த காட்டை காப்பாத்தும் அரசியாக நடிப்பில் மிரட்டி இருக்கிறார். தங்கலானுடைய மூதாதையர் காடையனுடன் வரும் சண்டைக் காட்சிகளில் திரையரங்கில் அப்ளாஸ்களை அள்ளுகிறார் ஆரத்தி.

மியூசிக் டைரக்டர் ஜி.வி.பிரகாஷ் ஆஹா .. ஓஹோ பேஷ் பேஷ் -சொல்ல வைத்து விட்டார். தொடக்கம் முதல் இறுதி வரை மிரட்டியிருக்கிறார். பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே தங்கலானை ஒரு படி உயர்த்தி விட்டது. பல காட்சிகளில் தங்கலானைக் காப்பாற்றுவதே ஜி.வி.யின் பின்னணி இசைதான்.

"இது எங்க மண்ணு. எல்லா உரிமையும் எங்களுக்கு உண்டு. யாரும் எங்களை வெளியேற்ற முடியாது. இது எங்க உழைப்புல கிடைச்ச தங்கம். இதுல எப்படி பங்கில்லன்னு சொல்ல முடியும். பூணூல் போட்டா செத்தா வைகுண்டம் நேரா போலாம் அப்டின்னு சொல்றாங்களே. ராமானுஜர் இதைச் செஞ்சவர் தானே. இப்ப நாங்களா போட்டுக்கறோம். அதனால என்ன?" என்று கேட்கும் பசுபதி என்று ஒடுக்கப்பட்டோர், அதிகாரம் படைத்தோர் தொடர்பான வசனங்கள் படம் எங்கும் விரவி தன் சாதி அரசியலை மட்டுமே  முன்னிலைப்படுத்தி முகம் சுளிக்க வைத்து விடுகிறார் ரஞ்சித்.

சண்டைக்காட்சிகள் நன்றாகப் படமாக்கப்பட்டிருந்தாலும் நம்பகத் தன்மை கொஞ்சம்  மிஸ்ஸிங். மேலும் சிறுத்தை, பாம்புகள், எருமை மாடு கிராபிக்ஸ் எல்லாம் ரொம்ப சுமார் ரகம். ஏகப்பட்ட செலவு செய்த படக்குழு இதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். மேலும் வரலாற்றையும் அரசியலையும் உள்ளடக்கி நேரடியாக கதையைச் சொல்லியிருந்தால் படத்தோடு பார்வையாளர்கள் தங்களை இணைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் கதை சொல்லலில் தொன்மம், மேஜிக்கல் ரியலிசம், குறியீடு என்று பா.ரஞ்சித் தானும் குழம்பி, படத்தையும், நம்மையும் போட்டு குழப்பியி விட்டார்.

ஆனாலும்  உடல் பொருள் ஆவி அத்தனையும் தருவார்கள் என்பவர்களே அதனை இந்த கதாபாத்திரத்திற்காக தந்து இருக்கும்  விக்ரமுக்காக பார்த்தே ஆக வேண்டிய படமிது!

மார்க் 3.75/5

.

Tags :
Advertisement