For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

குடவோலை -கொஞ்சம் டீட்டெயில்!

09:59 AM Apr 12, 2024 IST | admin
குடவோலை  கொஞ்சம் டீட்டெயில்
Advertisement

ன்னும் சில தினங்களில் இந்தியப் பொதுத்தேர்தல் வரவிருக்கிறது. அப்படி வரும் ஒவ்வொரு தேர்தலின் போதும், பொதுவாக அனைவரும் உத்திரமேரூர் சோழர் காலக் கோவிலில் இருக்கும் குடவோலை முறை குறித்த கல்வெட்டினைப் பற்றிப் பரவலாகப் பேசுவார்கள். பிரதமர் மோதியும் தனது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இதைப்பற்றிக் குறிப்பிட்டார்.இந்த ஆண்டின் குடியரசு தின விழாவில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்ட அலங்கார ஊர்தியும் உத்திரமேரூர் கல்வெட்டையே சித்தரித்தது. ஆனால் உத்திரமேரூர் சோழர் காலக் கல்வெட்டுக்கு 123 ஆண்டுகள் முன்னரே, பாண்டியர் காலத்தில் திருநெல்வேலியில் இந்த தேர்தல் முறை நடந்திருப்பற்கான ஆதாரங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆம்.. தமிழ்நாட்டில் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் நடந்துள்ளது. அதிலும் பாண்டியர்கள் ஆட்சியில் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது

Advertisement

அதெல்லாம் சரி.. குடவோலை என்றால் என்கிறீர்களா? அது கிராம நிர்வாக சபை உறுப்பினரை தேர்ந்து எடுக்க பழங்காலத்தில் பயன்பட்ட தேர்தல் முறை. இந்த முறையில் கிராமத்தின் பகுதி வாரியாக மக்கள் கூடி, தகுதியான உறுப்பினர்கள் பெயர்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவார்கள். பிறகு அதை மொத்தமாகக் கட்டி, ஒரு பானையில் போட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பார்கள்.

Advertisement

குடவோலை முறை 9வது நூற்றாண்டு முதல் 16ஆம் நூற்றாண்டு வரை நடைமுறையில் இருந்தது. இதற்கான ஆதாரமாக கி.மு. 907 முதல் 955 வரை ஆண்ட மன்னன் முதலாம் பராந்தகன் காலத்திய மூன்று கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இதில் இரண்டு உத்தரமேரூரிலும், மற்றொன்று தஞ்சைப் பள்ளிப்பாக்கம் கிராமத்திலும் கிடைத்துள்ளன.

குற்றமற்றோரையும் தகுதியுள்ளோரையும் மட்டுமே தேர்தலில் நிற்கச் செய்தார்கள். அவர்கள் பெயர்களை ஓலைகளில் எழுதி மக்கள் எதிரில் அவற்றைக் குடத்தில் இட்டுக் குலுக்குவார்கள். பின்னர், சிறு பிள்ளையைக் கொண்டு ஓர் ஓலையை எடுக்கச் செய்து அதில் வரும் பெயருடைய நபரையே தேர்ந்தெடுக்கப்பட்டவராகக் கொண்டு போட்டி பூசலின்றி தேர்தல் நடந்தது.

முறைகேடுகள் அகற்றுதல் :
இக்காலத்தில் தேர்தல் பெட்டியில் முறைகேடு, வோட்டுச் சாவடியில் முறைகேடு, வோட்டு எண்ணுவதில் முறைகேடு என்று செய்திகள் வருகின்றன. இது போன்ற குறைபாடுகள் வராமலிருக்க அக்காலத்தே வழி செய்திருக்கிறார்கள். குடவோலை எடுக்கும் முறை ஊர் மக்கள் அனைவரின் முன்னிலையில் நடைபெறும். ஊரில் பெரியவர்கள் மத்தியில் அக்குடம் வைக்கப்படும். குழுமியிருப்போரில் வயதானவர் எழுந்து நின்று பார்வையிடுவர். ஒரு சிறியவனை அழைத்து ஒரு ஓலை எடுக்க சொல்வர். ஒவ்வொரு குடும்புக்கும் ஒரு ஓலையாக முப்பது குடும்புக்கு முப்பது ஒலை எடுக்கப்படும். எடுத்த ஓலையை ஊர் மத்யஸ்தர் கையில் கொடுப்பர். மத்யஸ்தர் தான் கையில் எந்த ஓலையையும் ஒளித்து வைத்திருக்கவில்லை என்று எல்லோருக்கும் தெரிவிக்க தனது கையை அகல விரித்து காண்பித்து பின், அகல விரித்த கையில் சிறுவன் எடுத்த ஓலையை வாங்கி அதில் எழுதியுள்ள பெயரை எல்லோரும் கேட்கும்படி வாசிப்பார். அவ்வோலையை மண்டபத்தில் உள்ள பெரியவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக வாசிப்பர். வாசித்த அப்பெயர் சரிதான் என்ற பின்னர் அவர் தேரந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

உத்திரமேரூர் கல்வெட்டு செய்திகள்

குடவோலை தேர்தல் விதிமுறைகளையும், வேட்பாளர்களின் தகுதி மிகக் கடுமையான விதிகள் மூலம் நிர்ணயிக்கப்பட்டதையும் மிகவும் விரிவாகத் தெரிவிக்கும் கல்வெட்டு தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் கல்வெட்டு.

வேட்பாளராகத் தகுதி உடையவர் (உத்திரமேரூர் கல்வெட்டின்படி)

கால் நிலத்துக்கு மேல் அரை நிலம் உடையவர்
தனது மனையிலேயே அகம் எடுத்துக்கொண்டுள்ளவர்.
வயது வரம்பு : 70 வயதிற்குக் கீழே 35 வயதிற்கு மேலே
மந்திர பிராம்மணம் வல்லான்
ஓதுவித்தறிவான் அல்லது அரைக்கால் நிலே உடையான் எனினும் ஒரு வேதம் வல்லான்
அவர்களிலும் காரியத்தில் நிபுணனாக இருக்க வேண்டும்
ஆசாரம் உடையான்
பொருள் சுத்தம் மனச் சுத்தம் உடையான்...

வேட்பாளராகத் தகுதி அற்றோர் (உத்திரமேரூர் கல்வெட்டின்படி)

வாரியங்களுக்குக் கணக்கு காட்டாது இருந்தவன் (மற்றும் இவனுக்கு சிற்றவை, பேரவை மக்கள், அத்தை மாமன் மக்கள், தாயோடு உடன்பிறந்தான், தந்தையோடு உடன் பிறந்தான், உடன் பிறந்தான், பிள்ளை கொடுத்த மாமன், ..என்று பல உறவு முறையிலும் தொடர்பிலும் வருவோரும் தகுதி இழக்கின்றனர்)
கையூட்டு செய்தவன்
பாதகம் செய்து பிராயச்சித்தம் செய்து சுத்தன் ஆனவன்
பிறரின் பொருள் பறித்தோன்.. மற்றும் பல

ஓலையை வாங்கும் முறை

சிறுபிள்ளையால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளரின் பெயர் எழுதப்பட்ட ஓலையை நடுநிலையாளர் கையில் வாங்கும் பொழுது ஐந்து விரலும் நீட்டியபடி அகலமாக வைத்து உள்ளங்கையில் வாங்க வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொண்ட ஓலையை வாசித்து, மற்றவர்களும் வாசிக்கும்படியும் விதிகள் அமைக்கப்பட்டன.

தேர்ந்தெடுக்கப்பட்டவர் தவறு புரிந்தால்

தேர்ந்தெடுக்கப்பட்டவர் பதவிக்காலத்தில் (ஓராண்டு) இடையில் தவறு செய்தால் உடனே பதவியிலிருந்து விலக்கக் கூடிய நடைமுறை அமைந்திருந்ததையும் உத்திரமேரூர் கல்வெட்டு தெரிவிக்கிறது.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement